
இனிய சிநேகிதனே
இன்னொரு தோலாக
என்னோடு
ஒட்டிக் கிடந்தவனே
உன்னை நான் எரிக்கப் போகிறேன்
எரிக்கும் முன்
இந்தக் கரங்கள்
உன்னை அணைத்துக் கொள்ளாது
இந்த இதழ்கள்
உன்னை முத்தமிடாது
இந்தக் கண்கள்
துளி கண்ணீர் சிந்தாது
கண்ணீரற்ற கண்களோடு
உன்னை நான் எரிக்கப் போகிறேன்
நீ பயனற்றவன்
என்றறிவித்த என் புத்தி
உன்னை பார்த்து
முகம் சுளிக்கிறது
என் இதயம் மட்டும்
உனக்காக
கறுப்புக் கொடி காட்டுகிறது
கனத்த இதயத்தோடு
உன்னை நான் எரிக்கப் போகிறேன்
நீ
எனக்காக உழைத்தவன்
காலணி போல
கணக்கற்று தேய்ந்தவன்
உன் உடலின்
ஒவ்வொரு நாரும்
எனக்காக மெலிந்ததை
நான் அறிவேன்
அறிந்தும்
அறிவின் துணை கொண்டு
உன்னை நான் எரிக்கப் போகிறேன்
என்னோடு
ஒட்டியிருந்த காலங்களில்
என் வியர்வையை
உறிஞ்சியதற்காக அல்ல
உன்னை
ஒரு நாள் மறந்தாலும்
என் மானத்தின் மீது
நாற்றமடித்ததற்காக அல்ல
நம் சிநேகம் தொடங்கிய
தினங்களில் என்னை
இறுக்கப் பிடித்து
திணறடித்ததற்காக அல்ல
அவற்றை நான் மன்னித்து விட்டேன்
நானும் குற்றமற்றவன் அல்ல
என் அவசரத்திற்காக
உன் குளியலை கூட மறுத்து
உன் மீது வாசனை திரவியம் தெளித்து
உன்னை வேலை செய்ய வைத்ததுண்டு
என் காலணியை துடைக்க கூட
உன்னை பயன் படுத்தியதுண்டு
அனைத்தையும்
மௌனமாக ஏற்றுக் கொண்ட
உன்னை
கட்டாயம் எரிக்கப் போகிறேன்
எனக்கு எவ்விதத்திலும்
பயனற்ற உன்னை
என்னால் சகித்து கொள்ள முடியாது
நீ உழைப்பாளி
உன் தன்மானம்
நானறிவேன்
அதைத்தான் நீயும் விரும்புவாய்
அதனால்
உன்னை நான் எரிக்கப் போகிறேன்
எங்கோ உருவெடுத்து
என்னிடம் வந்தவனே
"உனக்காக உழைத்து
உனக்காக அழிவேன்"
என ஒரு வார்த்தை சொல்லாமல்
எனக்காக உழைத்து
கந்தலாய் ஆனவனே
உன்னை நான் எரிக்கப் போகிறேன்
உன் கந்தல் உடல்
கரியாகி காற்றில்
கரையும் வரை
உன்னை எரிக்கப் போகிறேன்
அதற்கு முன்
காலுறை தானே
என்று உன்னை எவரும் இகழாதிருக்க
உனக்காக ஒரு கவிதை படைக்கப் போகிறேன்.
4 comments:
காலுறை பற்றிய தங்கள் கவிதை .அருமை.
புகைப்பேழைக்கு வருகை தந்தமைக்கு நன்றி.
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com/
நன்றி விஜய்.
You have very kind heart.God bless you!
Wonderful poem!
Thanks Niru.
Post a Comment