Thursday, July 31, 2008

நாளை நீ இறக்க போகிறாய்...முன் குறிப்பு: மென்மையான மனம் உடையவர்கள் இந்தக் கவிதையை படிக்க வேண்டாம். சிலர் பயமாக இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.

வாசகனே ...
என் பிரிய வாசகனே...

நீ தான்
நீயே தான்

இந்தக் கவிதையை படித்த பாவத்திற்காகவோ
வேறென்ன காரணத்திற்காகவோ

நாளை நீ இறக்க போகிறாய்

விபத்தாலோ...
கொலையாலோ...
நோயாலோ...
அல்லது இயற்கையாகவோ

அது நிகழப் போவது
வெகு நிச்சயம்...

மின்சாரமோ...
நெருப்போ...
மண்ணோ...

உன் உடலை
அணு அணுவாய்
அணுவாக்கி
அணுவற்றதாய்
ஆக்கும்...

அதுவரை
என்ன செய்வதாய்
உத்தேசம்?

உன்னை நம்பினோரை
இறைவனிடம்
ஒப்படை...

தந்தையிடம் போ
உயிர் கொடுத்த நெஞ்சத்தை
மனதார தழுவு
மகிழட்டும்...

தாயிடம் போ
உடல் சுமந்த வயிற்றை
உளமார தொடு
குளிரட்டும்...

பகைமை மறந்து
மனிதர்களை தழுவு
யாவரும் உனக்காக
கண்ணீர் சிந்தட்டும்...

மாங்கன்றோ
இளங்கன்றோ
நட்டு வை
உன் பேர் சொல்லட்டும்...

கடமையை செய்கையில்
உயிர் துறப்பதே உத்தமம்

தொழிலிடம் செல்...

பயன்விடுத்து
தொழில் நடத்து...

அந்த நாளை
நாளையோ
வருடங்கள் கழிந்தோ
வரலாம்....

அதனாலென்ன...?

அப்படியே
வாழ்...!

Sunday, July 27, 2008

உன்னை நான் எரிக்கப் போகிறேன்.


இனிய சிநேகிதனே

இன்னொரு தோலாக
என்னோடு
ஒட்டிக் கிடந்தவனே

உன்னை நான் எரிக்கப் போகிறேன்

எரிக்கும் முன்
இந்தக் கரங்கள்
உன்னை அணைத்துக் கொள்ளாது

இந்த இதழ்கள்
உன்னை முத்தமிடாது
இந்தக் கண்கள்
துளி கண்ணீர் சிந்தாது
கண்ணீரற்ற கண்களோடு
உன்னை நான் எரிக்கப் போகிறேன்

நீ பயனற்றவன்
என்றறிவித்த என் புத்தி
உன்னை பார்த்து
முகம் சுளிக்கிறது

என் இதயம் மட்டும்
உனக்காக
கறுப்புக் கொடி காட்டுகிறது

கனத்த இதயத்தோடு
உன்னை நான் எரிக்கப் போகிறேன்

நீ
எனக்காக உழைத்தவன்
காலணி போல
கணக்கற்று தேய்ந்தவன்

உன் உடலின்
ஒவ்வொரு நாரும்
எனக்காக மெலிந்ததை
நான் அறிவேன்
அறிந்தும்
அறிவின் துணை கொண்டு
உன்னை நான் எரிக்கப் போகிறேன்

என்னோடு
ஒட்டியிருந்த காலங்களில்
என் வியர்வையை
உறிஞ்சியதற்காக அல்ல

உன்னை
ஒரு நாள் மறந்தாலும்
என் மானத்தின் மீது
நாற்றமடித்ததற்காக அல்ல
நம் சிநேகம் தொடங்கிய
தினங்களில் என்னை
இறுக்கப் பிடித்து
திணறடித்ததற்காக அல்ல
அவற்றை நான் மன்னித்து விட்டேன்

நானும் குற்றமற்றவன் அல்ல

என் அவசரத்திற்காக
உன் குளியலை கூட மறுத்து
உன் மீது வாசனை திரவியம் தெளித்து
உன்னை வேலை செய்ய வைத்ததுண்டு

என் காலணியை துடைக்க கூட
உன்னை பயன் படுத்தியதுண்டு

அனைத்தையும்
மௌனமாக ஏற்றுக் கொண்ட
உன்னை
கட்டாயம் எரிக்கப் போகிறேன்

எனக்கு எவ்விதத்திலும்
பயனற்ற உன்னை
என்னால் சகித்து கொள்ள முடியாது

நீ உழைப்பாளி
உன் தன்மானம்
நானறிவேன்

அதைத்தான் நீயும் விரும்புவாய்
அதனால்
உன்னை நான் எரிக்கப் போகிறேன்

எங்கோ உருவெடுத்து
என்னிடம் வந்தவனே
"உனக்காக உழைத்து
உனக்காக அழிவேன்"
என ஒரு வார்த்தை சொல்லாமல்
எனக்காக உழைத்து
கந்தலாய் ஆனவனே
உன்னை நான் எரிக்கப் போகிறேன்

உன் கந்தல் உடல்
கரியாகி காற்றில்
கரையும் வரை
உன்னை எரிக்கப் போகிறேன்

அதற்கு முன்
காலுறை தானே
என்று உன்னை எவரும் இகழாதிருக்க
உனக்காக ஒரு கவிதை படைக்கப் போகிறேன்.

Wednesday, July 23, 2008

முட்டாள் விஞ்ஞானி கோவிந்த்


தசாவதாரம் திரைக் காவியத்தை பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் எனக்கு கிட்டியது. அத்திரைக்காவியத்தை காணும் பொழுது என் மனதில் தோன்றிய எண்ணங்கள் இதோ.

அமெரிக்க ஜனாதிபதி, இந்திய பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோர் வீற்றிருக்கும் மேடையில் கோவிந்த ராமசாமி எனும் விஞ்ஞானி தன் கதையை சொல்வதாக விரிகிறது திரைக்கதை. எடுத்தவுடன் தன் கதையை கேட்பதாக இருந்தால் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ரங்கராஜன் நம்பி எனும் கோவில் குருக்களின் கதையும் கேட்டால் தான் ஆச்சு என நிபந்தனை விதிக்கிறார். ரங்க ராஜன் நம்பிக்கும் கோவிந்த ராமசாமிக்கும் என்னடா சம்மதம் என்று பார்த்தால், அட ரெண்டுமே நம்ம உலகநாயகன் பத்மஸ்ரீ டாக்டர் கமலஹாசன் தான். இவ்விரு கதாபாத்திரங்களுக்கும் வேறு ஏதாவது சம்மதம் இருக்கிறதா என்று பார்த்தால் ஒன்றுக் கூட கிடையாது. சரி ரங்கராஜன் நம்பியின் கதை கோவிந்த ராமசாமிக்கு எப்படி தெரிந்தது என்று பார்த்தால் அதற்கும் திரைக்கதையில் எங்குமே பதில் கிடையாது. கடைசியில் கரையொதுங்கும் பெருமாள் சிலையைக் கூட பார்க்காமல் போய் விடுகிறார் கோவிந்த ராமசாமி. ஆனால் மேடை ஏறியவுடன் கண்ணால் கண்டது போல ரங்கராஜன் நம்பியின் கதையை விவரிக்கிறார். பெரும்பான்மைக்கு பகுத்தறிவு வரும் பொழுது இப்படிப்பட்ட ஓட்டைகள் இல்லாமல் திரைக்கதை அமைக்கலாம் என்று முடிவு செய்து விட்டார் போல இருக்கிறது திரைக்கதாசிரியர். அதுவும் நம் சகலகலா வல்லவன் தான்.

நல்ல ரௌடி (நாயகன்), சாமர்த்தியமான பைத்தியம் (குணா), இள கிழவன் (இந்தியன்) ஆண்பிள்ளை கிழவி (அவ்வை சண்முகி) என இது வரை கமல் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தையும் விஞ்சி நிற்கிறார் கோவிந்த ராமசாமி. இனிப்பான கசப்பு வெளிச்சமான இருட்டு என்பது போல கோவிந்த ராமசாமி ஒரு முட்டாள் விஞ்ஞானி. என்னடா புது கதை என்று நீங்கள் நினைக்கலாம். எனக்கே இந்த கதாபாத்திரக் கலவை கொஞ்சம் விசித்திரமாகத் தான் இருக்கிறது. இருந்தாலும் என்ன செய்வது இந்த முறை நம்மை மகிழ்விக்க கலைஞானி தேர்ந்தெடுத்த பாத்திரம் ஒரு முட்டாள் விஞ்ஞானி பாத்திரம். இதை நான் சொல்லவில்லை நண்பர்களே சாக்ஷாத் கோவிந்த ராமசாமியே சொல்கிறார். ஆராய்ச்சிக்காக வைக்கப் பட்ட குரங்கு இறந்த பிறகு தான் அந்த ஆராய்ச்சியின் ஆபத்தை உணர்ந்து அது வேண்டாமென்று வாதம் செய்கிறார். ஏன் இது அவருக்கு முன்பே தெரியாதா என்று நீங்கள் கேட்கலாம். அதே கேள்வியை தான் அவருடைய சக விஞ்ஞானிகளும் கேட்கிறார்கள். ஆனால் அவர் தான் முட்டாள் விஞ்ஞானி ஆயிற்றே. அவரிடம் போய் இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கலாமா?

"என்னை போல ஒரு முட்டாள் விஞ்ஞானியும் அனு மாதிரி ஒரு புத்திசாலி குரங்கும் தான் இன்று உலகையே ஆட்டிப் படைக்கும் எயிட்ஸ் நோய் பரவ காரணம். இல்லை என்று சொல்ல உன்னால் முடியுமா?" என்று தன் சக விஞ்ஞானியை பார்த்து கேட்கிறார். அவர் நீயே ஒரு முட்டாள் விஞ்ஞானி உன்னிடம் அதையெல்லாம் விளக்க முடியுமா என்பது போல தலையிலடித்துக் கொள்கிறார். எய்ட்ஸ் கிருமியின் மூலம் எதுவாகவும் இருக்கலாம் ஆனால் அது பரவ முக்கியமான காரணம் திருமணம் வரை காத்திருக்க பொறுமை இல்லாதவர்களும், திருமண பந்தத்தை மதிக்காமல் பாலியல் துணைவர்களை தன் இஷ்டம் போல மாற்றிக் கொண்டும் சேர்த்துக் கொண்டும், வாழும் புலனடக்கம் அற்றவர்கள் தான். அப்படி பட்டவர்கள் தமிழகத்திலும் ஏன் சென்னையிலும் கூட நிறைய பேர் இருக்கிறார்கள். உலகும் முழுதும் தன் கண்களுக்குள் கொண்டு வந்து நம்மை பார்த்து கண்ணடிக்கும் கலைஞானிக்கு இதெல்லாம் தெரியுமோ தெரியாதோ? எனினும் கோவிந்த ராமசாமி கதாபாத்திரம் அந்த கேள்வியை கேட்டதில் குற்றம் ஓன்றும் இல்லை. அது தான் முட்டாள் விஞ்ஞானி பாத்திரமாயிற்றே. அது அப்படித் தான் கேட்கும்.

இதில் கௌரவ வேடம் ஏற்று நடித்திருக்கும் குரங்கின் நடிப்பை பற்றியும் அதன் கதாபாத்திரத்தை பற்றியும் கொஞ்சமாவது எழுதியே ஆகவேண்டும். இது கலைஞானியின் கற்பனையில் உதித்த இன்னொரு வித்தியாசமான பாத்திரம். புத்திசாலி குரங்கு. சாக்லெட் கேட்கும் புத்திசாலி குரங்கு. சாக்லெட் கிடையாது என்று கோவிந்த் சொல்வதை புரிந்து கொண்டு எனக்கில்லை என் பாப்பாவுக்கு என்று சைகை செய்கிறது. கோவிந்த் ஒரு முட்டாள் விஞ்ஞானி என்பது அந்த குரங்குக்கும் தெரிந்திருக்கும் போலிருக்கிறது. இது மட்டுமல்லாது விஞ்ஞானிகள் தொலைக்காட்சியில் ஜனாதிபதி புஷ்ஷின் உரையை கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது தன் கூண்டை விட்டு வெளியேறி மின் கதவின் ரகசியக் குறியை சரியாக அழுத்தி வெளியேறிவிடுகிறது. வெளியேறியது மட்டுமல்லாமல் கிருமி குப்பியை எடுத்து சாக்லெட் என்று நினைத்து உண்டுவிடுகிறது. ஆராய்ச்சிக்காக கொண்டுவரப் பட்ட குரங்கை அவ்வளவு அஜாக்கிரதையாக விட்டு விட்டு எல்லா விஞ்ஞானிகளும் தொலைக் காட்சிப் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தால் கோவிந்த் மட்டும்தான் முட்டாள் விஞ்ஞானியா அல்லது அந்த ஆராய்ச்சிக் கூடத்தில் உள்ள எல்லாருமே முட்டாள் விஞ்ஞானிகள் தானா? என்ற கேள்வி எழுகிறது. கதையின் நாயகன் கோவிந்த் தானே அதனால் அவருடைய கதாபாத்திரத்தை மட்டும் விளக்கினால் போதும் என நிரந்தர இளைஞன் நினைத்து விட்டார். சாகும் போது சும்மா சொல்லக் கூடாது அந்த குரங்கு பிரம்மாதமாக நடித்திருந்தது. நான் கூட கமல்ஹாசன் ஏற்ற வேடங்களில் அதுவும் ஒன்றோ என நினைத்துவிட்டேன்.


எனினும் கோவிந்த் ஒரு முட்டாள் விஞ்ஞானி என்பதை பெரும் கலைஞரான கமல்ஹாசன் திரைக்கதை நெடுகிலும் ஸ்தாபிக்க தவறவில்லை. உ-ம். கையில் செல்ஃபோனை வைத்துக் கொண்டே ஃப்.பி.ஐ க்கு போன் போட சொல்லி யாரையாவது கெஞ்சியபடி அமெரிக்காவையே வலம் வருகிறார். முதலில் அவருடைய நண்ப துரோகியை கெஞ்சுகிறார். (இதுவும் முட்டாள் விஞ்ஞானி புத்திசாலி குரங்கு என்பது போல ஒரு வி
த்தியாசமான் பாத்திரம். எனினும் தமிழ் சினிமாவில் இது போல் ஏற்கனவே பல பாத்திரங்கள் வந்திருப்பதால் இதை பற்றி விரிவாக சொல்ல எதுவும் இல்லை.) ஆனால் கோவிந்த் ஒரு முட்டாள் விஞ்ஞானி என்பதை வாயார சொல்லும் இன்னொரு கதாபாத்திரம் இவரே. அதன் பிறகு கையில் செல்ஃபோனோடு சாய்ராமின் காரில் உட்கார்ந்து கொண்டு ஃப்.பி.ஐக்கு வண்டியை செலுத்தும் படி கெஞ்சுகிறார். செல்ஃபோன் வேகமா கார் வேகமா என்றெல்லாம் நாம் அவரை கேட்க கூடாது. ஏனென்றால் அவர் தான் முட்டாள் விஞ்ஞானியாயிற்றே. ஃப்லெட்ஜர் எப்படி எங்கு சென்றாலும் தன் பின்னாலயே வருகிறான் என்று சிந்திக்கும் போது தான் அவருக்கு கையில் உள்ள செல்ஃபோனே ஞாபகம் வருகிறது. அப்போதாவது அதை வைத்து ஃப்.பி.ஐக்கு தகவல் சொல்வாரா என்று பார்த்தால் அதை தூக்கி வேறு காரில் போட்டுவிடுகிறார். சனியன் அந்த காரோடு போகட்டும் என்று வேறு விளக்கம் சொல்கிறார். ஆக இவர் சனி பிடிப்பதில் நம்பிகையும் பகுத்தறிவும் உள்ள ஒரு முட்டாள் விஞ்ஞானி. என்ன ஓரு வித்தியாசமான கலவை பார்த்தீர்களா?

பல்ராம் நாயுடு கோவிந்தை விசாரிக்கிறார். காற்றில் வேகமாக பரவி பல உயிர்களை கொல்ல கூடிய கிருமி குப்பி என்றால் அம்மா இடுப்பில் உட்கார்ந்து விரல் சூப்பும் குழந்தைக்கு கூட புரியும். இதைச் சொல்ல தமிழார்வமும் விஞ்ஞானமும் தெரிந்த காவல் மேலதிகாரி வந்தால் தான் ஆச்சு என அடம்பிடிக்கிறார் முட்டாள் விஞ்ஞானி கோவிந்த். இதற்கு அப்துல் கலாமை அழைக்கலாமா என்று பல்ராம் நாயுடு கேட்கும் போது அழைத்தால் நல்லது என்று தலையை வேறு ஆட்டுகிறார். பல்ராம் நாயுடு எஃப்.பி.ஐ அதிகாரிகளை வரவேற்க செல்லும் வேளையில் ஃப்லெட்ஜர் உள்ளே வருகிறான். குப்பியை எடுத்துக் கொண்டு சீக்கிரம் கிளம்பலாம் என்று அவசரப்படுகிறான். அவன் தேடி அதை கண்டுபிடிக்க முடியாமல் போன பிறகு நம்ம கோவிந்த் வாயை திறந்திருந்தால் பரவாயில்லை. எங்கப்பன் குதருக்குள் இல்லை என்பது போல, " ஃப்லெட்ஜர் அது அவ்வளவு சுலபமில்லை அந்த வயல் அங்கே இல்லை நான் அதை வேறு ஊருக்கு அனுப்பிவிட்டேன் என்கிறார்." கலைஞானி இப்படி ஒரு முட்டாள் விஞ்ஞானி கதாபாத்திரத்தை உருவாக்கி அதனோடு பின்னி பிணைந்திருக்கிறார் என்பதை நினைக்கும் போது புல்லரிக்கிறது.

அடுத்து ஃப்லெட்ஜர் பாத்திரத்தை கவனிப்போம். முட்டாள் விஞ்ஞானியை போலவே இதுவும் ஒரு வித்தியாசமான பாத்திரம். கெட்ட போலீஸ். முன்னால் சி.ஐ.ஏ அதிகாரி கொஞ்சம் பணம் பார்க்கலாம் என முடிவெடுத்து கையில் சிக்கும் உயிர்களை எல்லாம் பதம் பார்க்கிறார். இவருக்கு ஒரு ஜோடி. மல்லிகா ஷெராவத். இந்தியாவிற்கு வர சுற்றுலா அனுமதி பெற மல்லிகா ஷெராவத்தை கைப்பிடிக்கிறார். பொதுவாக தமிழ் சினிமாவின் தரத்தை உலக தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்கிற ஒரே உயரிய நோக்கத்தை மனதில் கொண்டு தன்னுடைய கதாநாயககிகளின் இதழ்களில் இதழ் பதிப்பது இந்த நிரந்தர இளைஞனின் பாணிகளுள் ஒன்று. முதன் முதலில் மல்லிகா ஷெராவத்தை பார்க்கும் போதே முத்தம் நிகழ்ந்திருக்க வேண்டும். நிகழவில்லை. பிறகு திருமணம் முடிந்த பிறகு முத்தம் நிகழ்ந்திருக்க வேண்டும். அப்போதும் நிகழவில்லை. இது ஹாலிவுட்டிற்கு இணையான படம் ஆயிற்றே. முத்தம் இல்லாமல் எப்படி என்பதற்கு படம் முடிந்த பிறகு விளக்கம் அளிக்கிறார் இயக்குநர். முகத்தில் ப்ளாஸ்டிக்கை போட்டு ஒட்டி அதன் மேல் வெள்ளை பெயின்ட்டை அடித்து விட்டால் சாப்பாடே ஸ்ட்ரா போட்டுத் தான் குடிக்க வேண்டும். அப்படி ஆன பிறகு அவர் கதா நாயகியின் இதழில் இதழ் பதித்து தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்துவது கொஞ்சம் சிரமம் தானே. நாம் அதை தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது.

பத்து கமலஹாசன் என்று சொன்னார்கள். எண்ணி பார்த்தபோது முட்டாள் விஞ்ஞானி கோவிந்த், பல்ராம் நாயுடு, ரங்கராஜன் நம்பி, அவ்தார் சிங் இந்த நான்கு கதாபாத்திரங்களை தவிர
கமலஹாசனை எங்கும் காண முடியாமல் வெளியே சொன்னால் பகுத்தறிவில்லாத கூட்டம் என நினைத்து விடுவார்களோ என பயந்து மிகுந்த குழப்பத்தில் இருந்தேன். அப்போது அண்ணாச்சி வின்சென்ட் பூவராகன் கண்களை உருட்டி ஆமாடா நான் உலக நாயகந்தான் என்றார். ஆஹா அது கமலா? இதுக்கு உண்மையாகவே ஒரு அண்ணாச்சியை கூட்டி வந்து நடிக்க வைத்திருக்கலாமே. அப்படி செய்திருந்தால் தயாரிப்பில் எவ்வளவோ நேரமும் பணமும் மிச்சமாகியிருக்குமே? சரி அவரையும் சேர்த்துக்கொண்டாலும் ஐந்து தானே என்று பார்த்தால் படம் முடிந்த பிறகு கமல் அரிதாரம் போட்டுக்கொள்ளும் போது தான் தெரிகிறது அமெரிக்க ஜனாதிபதி, ஜப்பானின் கராத்தே பயிற்சியாளர், கைஃபுல்லா கான், கிருஷ்ணா பாட்டி இவர்கள் கூட கமல் தான் என்று. ஹி ஹி சும்மா சொல்லக் கூடாது ரொம்ப கடினமான வேலை தான். இவ்வளவு சிரமப்பட்ட கமல்ஜி முட்டாள் விஞ்ஞானி கோவிந்த் பாத்திரத்தை புத்திசாலி விஞ்ஞானியென்று மாற்றியிருந்தால் கதை எவ்வளவோ சுவாரஸ்யமாகியிருக்கும். என்ன செய்வது பெரும்பான்மைக்கு பகுத்தறிவு இன்னும் வரவில்லையே?

ஒரு கமலாக வந்து நம்மை குதூகலப்படுத்தினால் போதாதென்று எப்படி பத்து கமல் வருகிறாரோ. அதே போல ஒரு முட்டாள் விஞ்ஞானி போதாதென்று ஆங்காங்கே சில முட்டாள் விஞ்ஞானி முந்திரிகளை தெளித்திருக்கிறார் திரைக்கதாசிரியர் கமலஹாசன். உ-ம் என்.ஏ.சி.எல் என்றால் என்ன என்று பல்ராம் நயுடுவிடம் விளக்கும் விஞ்ஞானி. எனக்கு தெரிந்த தமிழில் என்.ஏ.சி.எல்-ஐ என்.ஏ.சி.எல் என்று தான் சொல்ல முடியும் என்கிறார். என்.ஏ.சி.எல் என்றால் உப்பு என்று பத்தாம் வகுப்பு மாணவன் கூட தப்பில்லாமல் சொல்வான். என்ன செய்வது பகுத்தறிவு இல்லாத பெரும்பான்மை கூட்டத்துக்கு படம் எடுக்கும் போது திரைக்கதையில் உப்பு சப்பு சேர்க்க வேண்டும் என்றால் இப்படி ஏதாவது தப்பு பண்ணினால் தான் ஆகும் போல இருக்கிறது.

கமல்ஜியை மட்டுமே பாராட்டிக் கொண்டிருந்தால் எப்படி? மற்ற தொழில் நுட்ப கலைஞர் பற்றியும் ஓரிரு வார்த்தையாவது சொல்ல வேண்டாமா? இயக்கம் கே.எஸ்.ரவிக்குமாராம். முத்து படையப்பா நாட்டாமை போன்ற திரைப்படங்களை இயக்கிய கே.எஸ் ரவிக்குமாரா என்று நமக்கு சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக படம் முடிந்தவுடன் உலக நாயகனை துதிபாடி செம்ம ஆட்டம் போடுகிறார்.

மைக்கேல் வெஸ்ட்மோர் படத்தின் ஒப்பனையை செய்திருக்கிறார். சும்மா சொல்லக் கூடாது எந்த எந்த நாட்டு மனிதர்கள் என்ன வண்ணம் இருப்பார்கள் என்பதை ஆராய்ந்து அந்த அந்த வண்ணங்களை அழகாக அள்ளி அப்பியிருக்கிறார்.

உடையலங்காரம் கௌதமியாம். இவருடைய முந்தைய படங்களில் சரிகா என்று யாரோ உடையலங்காரம் செய்தததாக ஞாபகம். சும்மா சொல்லக் கூடாது சரிகாவிற்கு இணையாகவே செயல்பட்டிருக்கிறார். அப்படி செயல் படாவிட்டால் கமலோடு இணைய முடியுமா?

கமலோடு இணைய முடியுமா என்று நான் கேட்பதை அவர்களுடைய தனிப் பட்ட வாழ்க்கையை பற்றி பேசுவதாக நினைக்கக் கூடாது. அதைப் பற்றி நான் பேசினால் ஐம்பது வயதுக்கு மேல் காதலால் இணைந்து வாழும் இரு உள்ளங்களை புண்படுத்தும் பண்பாடற்றவனாக ஆகிவிடுவேன் அல்லவா? ஆனால் கமல் கோடிக்கணக்கானவர்களின் உணர்வுகளை துச்சமென கருதி அவர்கள் வணங்கும் தெய்வத்தின் உருவச் சிலையை சௌஜாலயத்தில் வைக்க முயற்சிப்பார், மணலில் புதைப்பார், கழுத்தில் சுறுக்குப் போட்டு தோளில் மாட்டிக் கொள்வார், இங்கும் அங்கும் தூக்கி எறிந்து பந்தாடுவார். ஏனென்றால் அவர் பகுத்தறிவாளி. இந்தியர்களின் கடவுள் நம்பிக்கையும் திருமண அமைப்புகளும் அவர் பகுத்தறிவிற்கு ஒவ்வாதது. அதனால் அவர் கௌதமியோடு சேர்ந்து வாழலாம். ஏனென்றால் விஞ்ஞானம் அதை தடுக்காது. ஒரு அப்பன் மகளோடு உடலுறவு கொள்வதை கூடத்தான் விஞ்ஞானம் தடுக்காது. இதை பற்றி கமல் என்ன நினைக்கிறார் என்பது கமலுக்கே வெளிச்சம். கடவுள் தான் கிடையாதே? அதனால் தான் கமலுக்கே வெளிச்சம் என்றேன்.

கேயோஸ் தியரி என்று ஏதோ ஜல்லி அடிக்கிறார். பெரும்பான்மையானவர்களுக்கு பகுத்தறிவு இல்லாத நிலையில் அதைப் பற்றியெல்லாம் பேசலாமா? இல்லை பெரும்பான்மையானவர்களுக்கு தான் பகுத்தறிவும் கிடையாது விஞ்ஞானமும் தெரியாது நாம் என்ன சொன்னாலும் நம்பி விடுவார்கள் என நினைத்துவிட்டாரா? கேயோஸ் தியரிக்கும் இந்த படத்துக்கும் ஒரு சம்மந்தமும் கிடையாது. நமக்கு மேல் இருக்கும் சக்தி செயற்கை கோள் தானாம். செயற்கை கோள் செய்வதற்கான ஆதார கணிதம் இயற்கை கோள்களை அடிப்படையாக கொண்டதுதான். மனித கண்டுபிடிப்புகள் எல்லாமே இயற்கையின் புத்திசாலித்தின் பிரதிபலிப்புகள் தான். இயற்கையின் கருணையில் தான் மனித வாழ்க்கையே நகர்கிறது. ஒரு நாள் சூரியன் உதிக்கவில்லை என்றால் மனித வாழ்க்கையே ஸ்தம்பிக்கும். நம் கட்டுப்பாடில் இல்லாத எத்தனையோ விஷயங்கள் ஒழுங்காக நடக்கும் வரை இப்படித் தான் ஆணவமாக ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். ஏதாவது தவறாகி விட்டால் அது கடவுள் குற்றம் எல்லாம் ஒழுங்காக நடக்கும் வரை அது மனிதனின் சாமர்த்தியம். கேட்டால் நான் அப்படி சொல்லவில்லை முட்டாள் விஞ்ஞானி கதாப்பாத்திரம் தான் அப்படி சொன்னது என்பார் கலைஞானி.

படத்தின் முடிவில் கமல் சொல்கிறார், "நான் எங்கெங்க கடவுள் இல்லன்னு சொன்னேன், கடவுள் இருந்தா நல்லா இருக்கும்னு தான் சொல்றேன்."

நான் கூட தசாவதாரம் கேனத்தனமான படம் என்று சொல்லவில்லை. அப்படியில்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தான் சொல்கிறேன்.

Monday, July 21, 2008

இதயத்தின் அருகில்...

வென்றபின்
கை குலுக்கும்
பல ஐந்து விரல்களின்
ரேகைகளை விட
ஆழமாக பதிகிறது
வெல்லும் முன்
நமக்காக உயர்ந்த
ஒற்றை
கட்டை விரலின் ரேகை...

Friday, July 18, 2008

பெண்மைக்கு சரி பாதி தந்தவன்


"எந்நாடு சென்றாலும்
தென்னாடுடைய சிவனுக்கு
மாதவிடாய் பெண்கள் மட்டும்
ஆவதே இல்லை"

-கவிஞர் கனிமொழி

"மாதவிடாய் நாளில் தான்
த்ரௌபதிக்கு சேலை தந்தான்
கண்ணன்"

-ஸ்ரீ ரமேஷ் சதாசிவம்

ஒன்றானவன்
உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்றான வேதத்தில் நான்கானவன்
நம சிவாய என ஐந்தானவன்
இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இசை ஸ்வரங்களில் ஏழானவன்
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்
பத்தானவன்
நெஞ்சில் பற்றானவன்
பன்னிருகை வேலவனை
பெற்றானவன்....

முற்றாதவன் மூல முதலானவன்
முன்னைக்கும் பின்னைக்கும்
நடுவானவன்

தான் பாதி உமை பாதி
கொண்டானவன்
சரி பாதி பெண்மைக்கு
தந்தானவன்

-ஔவையார்

நாம் பெண்களுக்கு 33% தர வேண்டும் என சிந்திப்பதற்கு சில யுகங்களுக்கு முன்பே பெண்மைக்கு 50% கொடுத்தவர் சிவபெருமான். அவரின் பெருமை அறியாதார் அறியாதாரே!

அக்னி பரீட்சை

துரத்தி துரத்தி
காதலித்தேன்
உன்னை...

கடும் முயற்சிக்கு
பின் தான்
ஏற்றுக்கொண்டாய்
என்னை...

நீ என்னை
முந்தானையில்
முடிந்ததாய்...
மருந்தால்
மயக்கியதாய்
சுற்றம் உன்னை
குற்றம் சொல்கையில்
உணர்கிறேன்

ராமன் சீதையை
தீக்குளிக்கச் சொன்னதின்
நியாயத்தை.....!

Wednesday, July 16, 2008

முழுமை


தொடங்கிவிட்ட பொழுது
இக்கவதை
முழுமை பெறுவதில்லை

தொடர்கின்ற பொழுதும்
இக்கவதை
முழுமை பெறுவதில்லை

இக்கவதை
முழுமை பெற
தேவை
ஒரு முற்றுப் புள்ளி.

ஒவ்வொரு பேரூந்து பயணத்திலும்
தவறாமல் நிகழ்கிறது
நான்
பயணச் சீட்டு பெறுவதும்
சோதிக்கப் படாமல் வருந்துவதும்...

Monday, July 14, 2008

அம்மா...


நான் சாக விரும்பினால்
நூறு காரணங்கள் சொல்வேன்...

வாழ விரும்புகிறேன்...
காரணம்...
நீ...!

அம்மா...


என்னை சுமந்த உன்னால் தான்...
நானும் சுமக்கிறேன்...
அன்புக் கடனை..
அடைக்க முடியாமல்...

Sunday, July 13, 2008


முப்பால் சுவை தந்து
முக்காலத்துக்கும்
அப்பால் நின்ற
வள்ளுவர்

இன்னிசை ரசிக்கிறேன்
மின்விசிறி சுழல்கிறது
சத்தமாக...

சுவைஒரு
வாழைப் பழத்தை
எடுத்தேன்

தோலை
கொஞ்சம் கொஞ்சமாக
உரித்துவிட்டு
கடித்து தின்றேன்...

ஓர்
ஆரஞ்சுப் பழத்தை
எடுத்தேன்

தோலை
முழுவதுமாக
உரித்துவிட்டு
சுவைத்துத் தின்றேன்...

ஓர்
ஆப்பிளை
எடுத்தேன்

தோலை
உரிக்காமல்
அப்படியே
சாப்பிட்டேன்...

மீண்டும் சுவைக்க
அந்த பழங்கள்
இல்லை

அதனாலென்ன?

மீண்டும் மீண்டும்
சுவைக்கும் படி
ஒரு கவிதை வடித்தேன்....!

Friday, July 11, 2008ஒரு கொசு
என் மேல் அமர்கிறது...
கொல்ல மனமற்று
விரட்டுகிறேன்...
காற்றில் வட்டமடித்து
விடா முயற்சியை
கற்றுத் தருகிறது
எனக்கு...
பாவம்
அது அறியவில்லை
நான் பொறுமையிலேயே
இன்னும்
வீக்கு...! (weak)

Thursday, July 10, 2008

எழுத்துச் சித்தர்


பாலகுமாரன் அவர்களின் எழுத்து ஆழமானது. அக்கறையானது. அது எந்த ஒரு தந்தையும் தன் பிள்ளைகளிடம் காட்ட வேண்டிய அக்கறை. அந்த அக்கறையால் பயன்பெற்ற லக்ஷக் கணக்கானவர்களில் நானும் ஒருவன். எப்பொழுதெல்லாம் நான் குழப்பத்தில் இருந்தேனோ அப்பொழுதெல்லாம் இவருடைய எழுத்துக்கள் எனக்கு உதவியிருக்கின்றன. இறைவனின் அற்புதங்கள் எப்போதும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதற்கு இவர் எழுத்துக்கள் எனக்கு உதவிய விதம் சாட்சி. மனதில் ஏதேனும் குழப்பங்கள் இருக்கும், அப்போது இவருடைய நாவல்களில் ஏதோ ஒன்றை எடுத்து படிப்பேன், பார்த்தால் என் குழப்பத்துக்கான தீர்வு அதில் இருக்கும். இது ஒரு முறை இரு முறை அல்ல பற்பல முறை நிகழ்ந்ததுண்டு. இவருக்கு நன்றி சொல்ல என்னால் ஆகாது. பெற்ற கடனை திரும்பி செலுத்த வழியும் கிடையாது. என்னைப் பொறுத்தவரை இது அமுத சுரபி, எடுக்கத் தான் முடியும் கொடுக்க முடியாது. வேண்டும் என்றால் இப்படி ஏதாவது கிறுக்கலாம்.

யோகியாரின் செல்லப் பிள்ளை
உடையும் வெள்ளை உள்ளமும் வெள்ளை
இறைவனின் புகழை தினமும் பாடி
அழகாக வளர்க்கிறது வெள்ளை தாடி
பெற்ற நன்மைக்கு அளவும் இல்லை
நன்றிகள் சொல்ல வார்த்தையும் இல்லை...!

Wednesday, July 9, 2008


எப்போது
தோன்றியது
இந்த துடிப்பு?

எவர் வடித்தது
என் தேகம்?

எந்த நிமிடத்தில்
நானானேன்
நான்?

என் அனுமதி
கோராமல்
கர்ப்பத்தில் இருந்து
புறந்தள்ளப்பட்டு விட்டேன்
வாழ்க்கைக்குள்...!

அன்பொ
வெறுப்போ
நட்போ
பகையோ
உதவியோ
சூழ்ச்சியோ
பாராட்டோ
பொறாமையோ
அல்லது
கோபத்தின் இயலாமையோ...!

ஏதோவொன்று
ஒளிந்திருக்கிறது

ஒவ்வொரு
புன்னகைக்குள்ளும்....!

Tuesday, July 8, 2008

பாலியல் கல்விஐந்தறிவு ஜீவனெல்லாம்
புணர்ந்தே ஆகின்றன
பெற்றார்...!

ஆறறிவு மானிடர்கள்
பள்ளியில் பாலியல்
கற்றார்...!

இது எப்படி இருக்கு...?


தோற்று வெல்வதில்
இன்னொரு கஜினி
சூப்பர் ஸ்டார்
ரஜினி...!


19.12.2004 ஆனந்த விகடனில் வெளியான என் கவிதைக்கு ரஜினிகாந்த் என்ன பதில் சொல்கிறார் பார்த்தீர்களா...?Monday, July 7, 2008

ஒரு மேகத்தின் சுயசரிதம்


மனிதர்களே...

நான் மேகம்...!

தன் ஒளியால்
வானாளும் சூரியன்
என் தந்தை...!

தங்களை எல்லாம்
தாங்கிடும் பூமி
என் தாய்...!

கொடுத்து கொடுத்து
கை சிவந்த கர்ணன்
என் அண்ணன்...!

உங்களைப் போலவே
தந்தை தாய்
தழுவலில்
பிறந்தவன் நான்...!

பிறப்பெடுத்த நாள் முதலே
மெல்ல மெல்ல
மேல் எழுந்தேன்....!

இன்றோ
சிகரங்கள்
தொட்டுவிட்டேன்...!

என்
தந்தைக்கும் தாய்க்கும்
அவ்வப்போது
பிணக்கு வரும்...!

பிணக்கு வரும்
வேளையில்
எந்தை வெப்பம்
கோபமுறும்...!

ஓடிச் சென்று
போர்த்திடுவேன்...!
தாய் உடலை
காத்திடுவேன்...!

எனெக்கென்று
இடம் ஒன்றை
பிடித்ததில்லை
எப்போதும்...!

வானமெங்கும்
எனதாக்கி
வலம் வருவேன்
அப்போதும்...!

எனக்கென்று
ஒரு வடிவம்
கொண்டதில்லை
எப்போதும்...!

தங்களுக்கு
பிடித்த முகம்
தந்திடுவீர்
அப்போதும்...!

என் குருவின்
பெயர் காற்று...!

எட்டு திசையிலும்
அவர்
சுட்டும் திசையன்றி
எட்டு வைத்ததில்லை
எப்போதும்...!

மலர் தன்
பிறவிப் பயனை
பிறந்ததுமே
எட்டும்...!

உங்களில்
பிறவிப் பயன்
உழைப்பவர்க்கு
மட்டும்...!

எளியவன் என்
பிறவிப் பயனோ
மரணத்தில் தான்
கிட்டும்...!

நான் சாவதில்
என் தாய்க்குக் கூட
மகிழ்ச்சி...!

நான்
மறைவதால் அல்ல..!
தன்னோடு
இணைவதால்...!
அவள் கருவறைக்குள்
மீண்டும் நான்
புகுவதால்...!

என்
இன்னொரு அண்ணனிடம்
கண்ணபிரான்
சொன்னது போல

நான் இன்றிருந்து...
நாளை
இல்லாமல் போகிறவன்
அல்ல..!

நான்
சாஸ்வதம்...!

நேற்று இருந்தேன்....!
இன்று இருக்கிறேன்...!
நாளையும் இருப்பேன்...!

எனினும்
என்னுடைய
மரணத்திற்கு...

என் உடலை
கறுப்பாக்கி
எனக்கு நானே
இரங்கல்
சொல்வேன்..!

என் மரணம்
மழை...!

உங்களுக்கு
வரம்...!

நான் பிறந்த
மண்ணுக்கோ
உரம்...!

என் வாழ்விலும்
உங்களுக்கோர்
சேதி உண்டு...

தலை கனக்காமல்
இருக்கும் வரை
நீங்கள் இருக்குமிடம்
உயரம்...!

தலை கொஞ்சம்
கனத்து விட்டால்
பெறுவீர்
வீழ்ச்சியெனும்
துயரம்...!

Sunday, July 6, 2008

கற்றதும் பெற்றதும்


சுஜாதாவின் எழுத்துக்கள் சுவாரஸ்யமானவை. சிந்திக்கும் கலையை அவரிடம் கற்றுக்கொண்டேன். காதலைப் பற்றி கனவுகள் நிறைந்திருந்தவை என் கல்லூரி நாட்கள். இவர் கதைகளில் வரும் கணவனுக்கு மனைவி துரோகம் இழைக்கும் சம்பவங்கள் இந்த கற்பனை பலூன்களை ஊசி நுழைத்து வெடிக்க வைத்தன.[ உ-ம் கற்றதும் பெற்றதும் முதல் பாகத்தில் வரும் "திரை" என்கிற குட்டிக் கதை, தப்பித்தால் தப்பில்லை எனும் குறுநாவல்.] ஆண் பெண் உறவைப் பற்றி ஆழமாக சிந்திக்க இவர் படம்பிடித்து காட்டிய கசப்பான சம்பவங்கள் எனக்கு பெரிதும் உதவின. இவ்வுலகில் நம்பத் தகுந்த உறவு என்பது இறைவனின் உறவு மட்டுமே. மற்ற உறவுகள் நன்றாக அமையலாம் அமையாமலும் போகலாம். அவற்றை பெரிதாக கொண்டாடவும் வேண்டாம், தூற்றி வெறுத்து ஒதுக்கவும் வேண்டாம். திறந்த மனதோடு எவரையும் அணுகுவோம். தரமானவராய் இருப்பின் மகிழ்ச்சியாய் ஏற்றுக் கொள்வோம். இல்லையேல் ஒதுக்கி விட்டு நம் கவனத்தை ஆக்கபூர்வமான திசைகளில் செலுத்துவோம்.

சுஜாதா விகடனில் கற்றதும் பெற்றதும் எ
ழுதிய போது வாசகர்களுக்கு புதிய வகை கவிதைகளை அறிமுகம் செய்வார். ஒரு முறை "க்ளெரிஹ்யூ" என்ற வகை கவிதைகளை அறிமுகப்படுத்தினார். அந்தக் கவிதை வகையின் அம்சங்கள். 1) ஒரு பிரபலத்தைப் பற்றியதாக இருக்க வேண்டும். 2)நான்கு வரிகளில் இருக்க வேண்டும் 3)முடிந்தால் நகைச்சுவையாக இருக்க வேண்டும். வாசகர்களிடமிருந்து கவிதைகளை வரவேற்றார். நானும் சில பிரபலங்கள் பற்றி கவிதைகள் எழுதி அனுப்பி வைத்தேன். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பற்றி நான் எழுதிய கவிதையை பிரசுரித்தார். அவர் பாணியில் சொல்லப் போனால், அவரை பற்றி நான் எழுதிய கவிதையை அவையடக்கம் காரணமாக பிரசுரிக்காமல் விட்டார். அது...

கற்றதும் பெற்றதும்
ஏராளம் சுஜாதா
சேதிகள் சொல்வதில்
தாராளம்

பெருமை வாய்ந்தவர்


பிள்ளையார் தருவார்
பல பலம்
அவரை விட வேறார்
பிரபலம்?