Friday, August 22, 2008

கிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துக்கள்


கிருஷ்ண ஜெயந்தி சிறப்புக் கவிதையை படிக்க இங்கே சொடுக்கவும்.

Tuesday, August 19, 2008

ஒரு ஜீவனுக்கு மற்றோரு ஜீவன் தான் ஆகாரம்.


ஸ்ரீ ஸ்ரீ விட்டல்தாஸ் ஸ்வாமிஜியின் உரையிலிருந்து.

"நீ ஒரு வாழைப்பழம் சாப்பிடும் பொழுது எத்தனை விதைகளை சாப்பிடுகிறாயோ அத்தனை உயிர்களை கொன்ற பாவம் உன்னை சேர்கிறது" என்றார் ஸ்வாமிஜி.

ஒரு வேளை விதைகளை நீக்க கூடிய பழங்களை மட்டும் தான் சாப்பிட வேண்டும் என சொல்வார் என நினைத்தேன்.

அடுத்து "சோறு சாப்பிடும் பொழுது எத்தனை பருக்கைகளை சாப்பிடுகிறாயோ அத்தனை உயிர்களை கொன்ற பாவம் உன்னை சேரும் என்றார்."

'சரியாப் போச்சு இது வேலைக்கு ஆகாது' என்கிற நிலைக்கு நான் வந்து விட்டேன்.

"அதற்காக உணவருந்தாமல் இருக்க முடியுமா? உணவருந்தித்தான் ஆக வேண்டும். ஆகாரம் இல்லாமல் யாராலும் ஜீவிக்க இயலாது."

சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று சொன்னார். நினைவில்லை. அதன் அர்த்தம்...

"ஒரு ஜீவனுக்கு மற்றொரு உயிர் தான் ஆகாரம். அதனால் நாம் ஒவ்வொரு முறை உண்ணும் பொழுதும் ஒரு ஜீவனை உண்கிறோம் என்கிற நன்றி உணர்வோடு உண்ண வேண்டும். அதை இறைவனை அர்ப்பணம் செய்துவிட்டு உண்ண வேண்டும். அப்பொழுது அந்த பாவம் நம்மை சேராது" என்றார்.

இறைவனுக்கு அர்ப்பணம் செய்வது ஒன்றும் கடினமான காரியமில்லை. இறைவனை ஒரு முறை நினைத்து விட்டு உணவை உண்ண ஆரம்பித்தாலே போதும்.

இது அசைவ உணவை ஆதரிக்கும் கருத்தல்ல.

நான் அசைவ உணவை கைவிட்டு ஆறு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.

அசைவ உணவு எடுத்துக் கொள்ளும் பொழுதும் தியானம் செய்திருக்கிறேன். என் அனுபவத்தில் அசைவ உணவு தியானம் கைகூடுவதை சிரமமாக்குகிறது.சைவ உணவுக்கு மாறிய பிறகு என் புத்திக் கூர்மை அதிகரித்திருப்பதை உணர்கிறேன். உடல் வலிமையில் எந்த குறையும் இல்லை. மாறாக உடல் லேசாகவும் மனம் எளிதில் சோர்விலிருந்து விடுபடுவதாகவும் இருக்கிறது.

பொருளாதார ரீதியாகவும் சைவ உணவு எடுத்துக் கொள்வது உலக உணவு பற்றாக்குறையை போக்க உதவும் என்கிறது ஓர் ஆய்வு.

சைவ உணவுக்கு நான் மாறிய கதை ஆங்கிலத்தில்.


சைவ உணவுக்கு ஆதரவான விவாதங்கள்.

மேலும்.

Friday, August 8, 2008

ராமாயணத்தில் கேயோஸ் தியரி




கேயோஸ் சித்தாந்தத்தின் படி ஒரு பட்டாம் பூச்சியின் படபடப்பு கூட ஒரு புயலுக்கு காரணமாக இருக்க முடியும் அல்லது வந்திருக்க வேண்டிய புயலை வரவிடாமல் தடுத்திருக்க முடியும் என விளக்குகிறது.

ஸ்ரீ ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் அவர்களின் ராமாயண சொற்பொழிவு காலை ஏழு மணியளவில் சென்னை தி.நகரின், ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ள அலேமலுமங்கா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.

ராமாயணத்தை விளக்கமாகவும் விரிவாகவும் சுவைபட சொல்லி வருகிறார் ஸ்வாமிஜி.

இன்று ராவண சம்ஹாரத்தின் ஆரம்பம் எது என்பதை காண பின் நோக்கி விளக்கி வந்தார்.

ராமர் ராவணனை ஏன் கொன்றார்?

அவன் சீதாதேவியை கவர்ந்து சென்றதால் கொன்றார்.

சீதாதேவியை ராவணன் ஏன் கவர்ந்தான்?

சூர்ப்பணகையின் போதனையால் கவர்ந்தான்.

சூர்ப்பணகை ஏன் அவ்வாறு போதித்தாள்.?

ராமர் அவள் காதலை நிராகரித்ததால்.

ராமரிடம் அவள் எப்படி காதல் கொண்டாள்?

ராமரை வனத்தில் கண்டதால்.

ராமர் வனம் வர காரணம்?

கைகேயியின் வரம்.

கைகேகி ஏன் அந்த வரங்களை கேட்டாள்?

ராமருக்கு பட்டாபிஷேகம் என தசரதர் அறிவித்ததால்.

தசரதர் ஏன் அவ்வாறு அறிவித்தார்?

தன் காதோரம் ஒரு முடி நரைத்திருந்ததை கண்டு தனக்கு வயதாகி விட்டதை உணர்ந்து ராமருக்கு பட்டாபிஷேகம் என தசரதர் அறிவித்தார்.

தசரதரின் காதோரம் முடி நரைப்பதற்கும் ராவண சம்ஹாரத்திற்கும் இருக்கும் இந்த மறை முக தொடர்பு தான் கேயோஸ் சித்தாந்தம்.

இந்த மறைமுக தொடர்பை உணர்ந்ததால் தான் ராமாயணத்தை பாடிய எல்லா பெருங்கவிகளும் தசரதருக்கு முடி நரைக்கும் காட்சியை பாடியிருக்கிறார்கள் என விட்டல்தாஸ் மஹராஜ் அவர்கள் விளக்கினார்கள்.

காளிதாசர் இன்னும் ஒரு படி மேலே சென்று ராவணன் செய்த பாவத்தால் தசரதருக்கு முடி நரைத்தது என பாடினாராம்.

நம் இதிகாசங்களில் பொதிந்துள்ள இது போன்ற அற்புதங்களை உணராதவர்கள் சிலர் மேற்கத்திய விஞ்ஞானம் புரிந்து விட்டதாக சொல்லிக் கொண்டு மேற்கத்திய விஞ்ஞானம் உயர்ந்ததெனவும் இந்திய ஞானம் தாழ்ந்தது எனவும் கூறி அந்நியர்களின் துதிபாடிகளாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் என்றும் நகைப்புக்கு உரியவர்களே.