Tuesday, October 27, 2009

குளிரவைத்த ஈரம்

ஷங்கர் தயாரிப்பில் வெளியாகி வெற்றி நடைப் போட்டுக்கொண்டிருக்கும் ஈரம் உலகத் தரமானது. புது முக இயக்குநர் அறிவழகன் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி ரசிகர்களை அசத்தியிருக்கிறார்.

அன்றாடம் பயன்படுத்தும் நீரை இவ்வளவு அழகாகவும் பிரமாண்டமாகவும் காட்ட முடியுமா என்ற வியப்பு எனக்குல் எழுந்தது. எத்தனையோ புகைப் படங்களிலும் திரைப்படங்களிலும் பாடல் காட்சிகளிலும் தண்ணீரின் அழகை பதிவு செய்திருந்தாலும் அதன் அழகையும் வசீகரத்தையும் இந்த அளவுக்கு யாரும் பயன்படுத்தவில்லை என்று எனக்கு தோன்றுகிறது.

நீர் தான் படத்தின் மைய கதாபாத்திரம் என்று ஆன பிறகு அதை எத்தனை விதங்களில் கதைக்குள் கொண்டு வர முடியுமோ அத்தனை விதங்களிலுமே கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார் மிக அழகாக. உதாரணம் கார் கண்ணாடியின் மீது தண்ணீர் படிந்து பாதை தெரியாதபடி மறைக்கும் காட்சி. அதே சமயம் எந்த ஒரு இடத்திலும் நீரின் பங்கு திணிக்கப் பட்டதாக தெரியக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்திருக்கிறார்.

இத்திரைப்படம் தமிழ் சினிமாவின் தொழில் நுட்ப பயன்பாட்டிற்கு ஒரு மைல் கல். காமிரா வைக்கப்படிருக்கும் ஒவ்வொரு கோணத்திலும் இயக்குநரின் தன்னம்பிக்கை கலந்த நிதானமும், ஒளிப்பதிவாளரின் உழைப்பும் பளிச்சிடுகின்றன. ஒளிப்பதிவாளரும் சரி, படத்தொகுப்பாளரும் சரி ஒருவருக்கொருவர் சளைக்காமல் தத்தம் முத்திரையை பதித்திருக்கிறார்கள். கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை உறுத்தாத வண்ணம் மிக அழகாக இருக்கின்றன.
உதாரணம் கண்ணாடியில் நாயகியின் முகம் தோன்றி கண்ணீர் சிந்தும் காட்சி.

தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாது தார்மீக ரீதியாகவும் நல்லதொரு பாடமாக இப்படம் அமைந்திருப்பதற்காக இயக்குநருக்கு சிறப்பு பூங்கொத்து கொடுக்கலாம். கசப்பான ஒரு கதை தான் என்றாலும் அதை மனதுக்கு இதமாக பறிமாறியிருக்கிறார்.

பல இடங்களில் வசனங்களில் விளக்க முயற்சிக்காமல் காட்சிகளாகவே பல விஷயங்களை சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. உதாரணம் கடைசியில் நாயகி குழந்தையாக வந்து நாயகனுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு செல்லும் காட்சி. அவர்கள் உறவில் கள்ளங்கபடு இலை என்பதை எவ்வளவு அழகாக உணர்த்திவிட்டார். அதன் பிறகு நந்தா கதாபாத்திரம் கொலை செய்யப்பட போகிறது என்று நமக்கு உணர்த்தி படத்தை முடித்திருப்பது அசத்தலான புதுமை.

நாயகன் ஆதி கிடைத்த வாய்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். நாயகி, நாயகியின் தங்கையாக நடித்தவர், நந்தா, நாயகியின் தந்தை அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். நாயகியை விட நாயகியின் தங்கையாக நடித்திருப்பவருக்கு நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் முக்கிய காட்சிகள் கிடைத்திருக்கின்றன. சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

பொதுவாக மர்ம திரைப்படங்களில் ரசிகர்களை குழப்புவதற்காக சில காட்சிகளை தேவையில்லாமல் வைத்து பின் எந்த விளக்கமும் தராமல் விட்டுவிடுவார்கள். இதில் அப்படிப்பட்ட குறைகள் எதுவும் கிடையாது.

குறைகளே கிடையாதா?

என் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை. இவ்வளவு நேர்மையான ஒரு முயற்சியில் சிறு குறைகள் எங்கேனும் இருந்தாலும் அவற்றை புறந்தள்ளி பாராட்டுவதே நியாயமானதாக இருக்கும் என கருதுகிறேன்.

நல்லதொரு திரைப்படத்தை தந்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த இத்திரைப்பட குழுவினருக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

Wednesday, October 21, 2009

சைவ உணவுக்கு மாறிய காரணம்கல்லூரி நாட்களில் நான் அசைவ உணவுகளை விரும்பி உண்பவனாக இருந்தேன். சாமி திரைப்படத்தில் வரும் வசனமொன்றில் சொல்வது போல வானத்தில் திரிவதில் விமானத்தையும், கடலில் திரிவதில் கப்பலையும் தவிர அனைத்தையும் சுவைத்து வந்தேன். அப்படி சுவைக்க முடியாதவற்றை 'என்னிக்காவது ஒரு நாள் ஒரு வெட்டு வெட்டனும்' பட்டியலில் வைத்திருந்தேன்.

ஒரு நாள் என் அம்மா என்னை கோழிக் கறி வாங்கி வரச் சொல்லி அனுப்பினார்கள். கடையில் ஜீவனொன்று தன் வாழ்வுக்காக தன்னால் முடிந்த வரை சிறகுகளை படபடத்து கத்திக் கதறி போராடி கடைசியில் இயலாமையொடு மெல்ல மெல்ல உயிரைப் பறிகொடுத்த அந்தக் காட்சி எனக்குள் ஒரு கேள்வியை எழுப்பியது.

"நாம் உண்ணும் இந்த ஜீவன்கள், நாம் அவற்றைக் கொல்லும் பொழுது தங்களை விட்டு விடும்படி வார்த்தைகளற்று கெஞ்சுகின்றன. நாம் அந்த கதறலை புறக்கணிக்கிறோம். நாம் ஏன் வாழ வேண்டும் என்கிற அதன் வேட்கையை மதித்து, வார்த்தைகளற்ற அதன் கதறலை கருத்தில் கொள்ளக் கூடாது?"

ஒரு இளிச்ச வாயன் நம் கையில் சிக்கும் பொழுது அவனை எதுவும் செய்யாமல் 'பொழச்சு போ' என்று விடும் பொழுது ஒரு பெருமிதம் கலந்த திருப்தி ஏற்படுமே, அந்த திருப்தியை சுவைக்க வேண்டும் என்கிற ஆசையும் அந்தக் கேள்வியுடன் தோன்றியது.

நான் இது பற்றி சில அசைவ விரும்பிகளிடம் பேசிய பொழுது அவர்கள் பலவிதமான எதிர்மறை கருத்துக்களை முன்வைத்தார்கள்.

"சைவ உணவு மட்டும் கொல்லாமல் கிடைக்கிறதா? ஏன் தாவரங்களில் உயிர் இல்லையா? "

"என் கேள்வி கொல்வதைப் பற்றியதல்ல. கொல்லாமையை தீவிரமாக கடைப் பிடிப்பதாயின் பல் விளக்கக் கூட முடியாது என்பது எனக்குத் தெரியும்."

"அந்த ஜீவன்கள் மனிதனுக்கு உணவாக வேண்டும் என்பதற்காகவே படைக்கப்பட்டவை. அவற்றை உண்பது நம் உரிமை."

"அவற்றை உண்ணும் உரிமை நமக்கு இருக்கலாம். அந்த உரிமை எடுத்துக் கொண்டு தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயம் என்ன?"

"சைவ உணவு உண்பது பாவம் என்றால் சிங்கம் புலி இவற்றுக்கெல்லாம் என்ன உணவை இறைவன் படைத்தார்?"

"என் கேள்வி பாவம் புண்ணியம் பற்றியதல்ல. இரண்டாவது, சிங்கம் புலி இவற்றுக்கு தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பம் இல்லை. தங்கள் செயல்களை மறுபரிசீலனை செய்யும் திறனும் இல்லை."

இந்த எதிர்மறை கருத்துக்களையெல்லாம் மிஞ்சும் விதமாக வந்தது அடுத்த ஒரு கருத்து.

"எல்லாரும் சைவ உணவுக்கு மாறிவிட்டால் ஆடு மாடுகளின் எண்ணிக்கை அதிகமாகி இயற்கையின் சமச்சீர் கெடும்"

ஆஹா! என்ன ஒரு பொறுப்புணார்ச்சி!

இருக்கிற மரத்தையெல்லாம் வெட்டி வெட்டி, மழையே வராதபடி செய்துவிட்டோம். ஆற்று மணலையெல்லாம் திருடி விற்று, விற்பவர்களிடம் வாங்கி வீடு கட்டி ஆறுகளை எல்லாம் வரலாறுகளாக்கி விட்டோம். இயற்கை, கலாச்சாரம், சினிமா, அரசியல், நிர்வாகம் என்ற எல்லாமே நம் பொறுப்பற்ற தன்மையாலயே கெட்டுக் குட்டிச் சுவாராகியிருக்கும் நிலையில் நம் அசைவ விரும்பி நண்பருக்கு இயற்கையின் சமச் சீரை காப்பாற்ற வேண்டும் என்கிற வேட்கை அசைவ உணவு உண்பதில் மட்டும் அளவற்று பொங்குகிறது.

எனக்கு அப்பொழுது ஒன்று புரிந்தது. இது பற்றியெல்லாம் பலரிடமும் கலந்துரையாடிக் கொண்டிருக்க தேவையில்லை.
இது தனிப்பட்ட மனிதர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் விஷயம்.

நான் அன்று முதல் சைவ உணவு மட்டுமே உட்கொள்வதென முடிவெடுத்தேன். கொல்வது பாவம் என்பதற்காக அல்ல. கொல்லாமையை கொள்கையாக்க வேண்டும் என்பதற்காக அல்ல.

நம் கருணைக்குட்பட்ட ஒரு ஜீவனின் வாழும் வேட்கையை மதிக்க வேண்டும் என்பதற்காக. அதன் கதறலை நான் புறக்கணிக்கவில்லை என்கிற திருப்தியை என் இதயத்துக்கு வழங்க வேண்டும் என்பதற்காக.

Friday, October 9, 2009

என்னைப் போல் இல்லை

நேற்று உலக நாயகன், பத்மஸ்ரீ, டாக்டர் கமலஹாசன் அவர்கள் நடித்து வெளியாகியிருக்கும் பொன் விழா படைப்பான 'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம் பார்த்தேன்.

'A WEDNESDAY' என்கிற ஹிந்தி திரைப்படத்தை தமிழ்ப் படுத்த முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்ப்படுத்துவதோடு நிற்காமல் கதை திரைக்கதை வசனம் நடிப்பு என மூலத்தில் உள்ள அனைத்து சிறப்பம்சங்களையும் படுத்தோ படுத்தென்று படுத்தியிருக்கிறார்கள்.

நீதித் துறையின் வேகத்தைக் கண்டு பொறுமையிழந்த ஒரு பொது மனிதன் தன் சாமர்த்தியத்தால் குற்றம் இழைத்த நால்வருக்கு தணடனை தர முடிவு செய்து, அதை வெற்றிகரமாக எப்படி நிறைவேற்றுகிறான் என்பதை சொல்வது தான் திரைக்கதையின் நோக்கம்.

இந்தியில் இதை ஏற்கனவே எந்தவித குறைகளும் இன்றி, பார்ப்பவர்களின் நாடி நரம்புகள் யாவும் முறுக்கேறும் விதமாக தொய்வில்லாமால் செய்திருந்தார்கள்.

அதே திரைக்கதையில் தன் புத்திசாலித்தனத்தை கலந்து (ஹி ஹி... அப்படித் தான் கமல் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்) நல்ல திரைக்கதையில் பல ஓட்டைகளைப் போட்டு, பார்ப்பவர்களை முந்திரிகளும் மிளகும் கலந்த பொங்கலை ஒரு வெட்டு வெட்டிய பின் ஏற்படும் ஒரு மந்த நிலைக்கு கொண்டு வந்து விடுகிறார்.

உதாரணம் டாக்டர் கமல் அவர்கள் வெற்றுப் பைகளை பேரூந்திலும் ரயிலிலும் வைத்து விட்டு காவல் துறை ஆணையரிடம் நகரத்தின் பல்வேறு இடங்களில் வெடி குண்டு வைத்திருப்பதாக சொல்வது. பொய் சொல்வதென்று ஆன பிறகு, வெற்றுப் பைகளை அங்கும் இங்கும் வைக்காமலேயே வெடி குண்டு வைத்திருப்பதாக சொல்லலாமே?

காவல் நிலையத்தில் வெடி குண்டு வைக்கும் பொழுது நஸ்ருதின் ஷா லாவகமாக எந்த பதட்டமும் இல்லாமல் வைத்து விட்டு திரும்புவார். அதைப் பார்ர்கும் பொழுது காவல் துறையினர் எவ்வளவு அசிரத்தையாக இருக்கிறார்கள் என்ற உணர்வு ஏற்படும். கமல் அவர்களோ பையை எங்கே வைக்கலாம் என ஒரு பட்டிமன்றமே நடத்துகிறார். காவல் துறையினரின் ஓட்டைகளை புரிந்து கொண்டு நல்ல திட்டமிடலோடு அவர்களோடு விளையாட நினைக்கும் ஒருவர் எதற்காக ஒரு பையை மறந்து வைப்பது போல மறந்து வைத்து விட்டு வர அப்படித் தடுமாற வேண்டும்?

ஹாரிஃப் கமல் இருக்கும் கட்டிடத்திற்கு கமல் இருக்கக் கூடும் என கருதி தேட வருவார். அவ்வளவு தூரம் வந்தவர் ஓரே ஒரு ஏணிப்படியை ஏறிப் பார்க்க மறந்து விட்டு எதற்காக யாரும் அங்கு இல்லை என முடிவு செய்ய வேண்டும்? 'Do not disturb' என்று எழுத்துக்களை பார்த்து கீழ்படிந்து விட்டாரா? மூலத்தில் ஹாரிஃப் வேறு கட்டடத்தில் தேடுகிறார் என்று நமக்கு புரிய வைத்திருப்பார்கள். உலக நாயகன் அவர்கள் தொலை நோக்கு கருவி வழியாக ஹாரிஃபை தலைக்கு மேலிருந்து பார்க்கிறார். ஆனால் ஹாரிஃப் அந்த ஒரு ஏணிப்படியை ஏறிப் பார்க்காமலே அங்கு யாரும் இல்லை என முடிவு செய்து விடுகிறார்.

மூன்று தீவிரவாதிகள் ஜீப்பில் அமர்ந்திருக்கும் பொழுது வரும் அழைப்பை சந்தானபாரதி எடுத்து பேச முயற்சிக்கும் பொழுது அவர் ஆள்காட்டி விரலில் அவர் ஓட்டுப் போட்டதற்கு அடையாளமாக மை வைக்கப்பட்டிருக்கிறது. தீவிரவாதிகளொடு தொடர்பு வைத்திருந்து சிறை சென்றவருக்கு யார் ஓட்டுரிமை கொடுத்தார்கள்?

கடைசியில் கமல் மோகன்லால் சந்திக்கும் இடத்தில் போலீஸ் ஜீப்பை பார்த்தவுடன் தான் மோகன்லால் காவல் துறையை சேர்ந்தவர் என்பதே கமலுக்கு தெரிகிறது. அதுவும் வந்திருப்பது காவல் ஆணையர் என்பது ஆணையரே தன்னை அறிகமுகம் செய்த பிறகு தான் கமலுக்கு தெரிகிறது. கூகிளில் தேடி வெடிகுண்டு செய்ய தெரிந்தவருக்கு நகரத்தின் காவல் ஆணையரின் முகம் தெரியாததற்கு என்ன காரணமோ?

மூலத்தில் நஸ்ரூதின் ஷா அனுபம் கேர் இடையே நடக்கும் உரையாடல்களில் எந்த ஒரு மதமும் மத நம்பிக்கைகளும் தாக்கப்படுவதில்லை. தமிழில் வழக்கம் போல கமலஹாசன் இந்து மதத்தை தாக்குவதை திறம்பட செய்திருக்கிறார். மத துவேஷத்திற்கு எதிரானவராக தன்னை காட்டிக் கொள்ளும் கமலஹாசன் அவர்கள் பேசும் வசனங்களை மத துவேஷத்தை வளர்க்கும் விதமாகவே இருக்கிறது. உதாரணம், "நீ இந்துவா?" என்று மோகன்லால் கேட்கும் இடத்தில். "அந்த கும்பலோடு என்னை சேர்க்காதீர்கள்" என்று சொல்லி இந்து மதவெறியர்கள் செய்த சில குற்றங்களை முன்னிறுத்துவார். முஸ்லிம்கள் எல்லாரும் தீவிரவாதிகள் அல்ல என்று வசனம் வைக்க தெரிந்த கமலஹாசனுக்கு இந்துக்கள் எல்லாரும் மத வெறியர்கள் அல்ல என்பது ஏனோ விளங்குவதில்லை. இதில் கரம்சந்த் காந்தியின் ரசிகன் என்று வேறு சொல்லிக் கொள்கிறார். காந்தி இரண்டு கைகளிலும் எழுதுவார் என்பது தெரிந்தவருக்கு அவர் ஒரு இந்து என்பதும் , அனுதினமும் ராம நாமம் ஜபித்தவர் என்பதும் ஏனோ இன்று வரை தெரியாமலேயே இருக்கிறது.

'A WEDNESDAY' திரைப்படத்தின் அழகே நஸ்ரூதின் ஷா, தான் எந்த மதம் என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் வந்து செல்வது தான். ஆனால் தமிழில் கமல் ஒரு முஸ்லிம் கதாபாத்திரம் என்பதற்கு பல்வேறு விதங்களில் கோடி காட்டியிருக்கிறார். உதாரணம் அவர் மொட்டை மாடியில் நிற்கும் பொழுது அவர் குரலில் ஒலிக்கும் பாடல். அவர் வைத்திருக்கும் தாடி ஆகியவை.

இது போல இந்தியில் உள்ள பல அழகான விஷயங்களை தமிழில் கொண்டு வர தவறி விட்டார்கள். உதாரணம் அவ்வப்பொழுது நஸ்ரூதின் ஷா, "என் மனைவி இப்பொழுதெல்லாம் இரண்டு மணி நேரத்திற்கொருமுறை என்னை அழைத்து நான் சாப்பிடேனா? டீ குடித்தேனா? என்றெல்லாம் அவ்வப்பொழுது விசாரிக்கிறாள். உண்மையில் நான் சாப்பிட்டேனா என்பதை தெரிந்து கொள்ள அவளுக்கு ஆர்வமில்லை. அவளுக்கு பயம் வந்து விட்டது. அங்கங்கே குண்டு வெடிக்கிறதே,அவற்றில் நான் சிக்கியிருப்பேனோ என்கிற பயம் அவளுக்கு" இந்த வசனத்தில் தான் அந்த படத்தின் ஜீவ நாடியே இருக்கிறது. அதை கோட்டை விட்டார்கள். அதே போல நஸ்ரூதின் ஷாவுடன் ரயிலில் பயணிக்கும் பெயர் தெரியாத இளைஞன், தன் நிச்சயதார்த்த மோதிரத்தை காட்டும் காட்சி. இதையும் கோட்டை விட்டார்கள். இப்படி இன்னும் பல காட்சிகள்.

இப்படி நல்ல விஷயங்களையெல்லாம் விட்டுவிட்டு, கலைஞர் குரலில் வேறு பேசி வெறுப்பேற்றுகிறார்கள். சில லட்ச உயிர்கள் சேதமடையக் கூடிய நிலையில் ஆக வேண்டிய காரணங்கள் என்னவென்று காவல் ஆணையரிடம் விசாரிக்காமல் கிருஷ்ணரைக் கூப்பிடாமல் தமிழ்க் கடவுள்களைக் கூப்பிடும் படி பரிந்துரை செய்து கொண்டிருக்கிறார், முதல்வர் அவர்கள். முதலவரின் உண்மையான முகத்தை பதிவு செய்யும் முயற்சியா?

மூன்று தீவிரவாதிகளையும் கொன்ற பிறகு நஸ்ரூதின் ஷா பேசும் வசனங்கள் எந்த ஒரு பொது மனிதனும் பேசக் கூடிய பொதுவான வசனங்கள். அவர் சொல்லும் காரணங்கள் மதச்சார்பற்றவை. அவருக்கு தீவிரவாதிகள் மீது தான் கோபம் இருந்தது. அதனால் தீவிரவாதிகளை கொல்ல திட்டமிட்டார். கமலஹாசன் அவர்கள் கோபமெல்லாம் இந்து வெறியர்கள் மீதிருக்க ஏனோ இவரும் தீவிரவாதிகளையே கொல்ல முடிவு செய்திருக்கிறார்.

நஸ்ரூதின் ஷா ஒரு இந்தியராக இருந்து தீவிரவாதத்தை எதிர்க்கும் ஒரு பொது மனிதனாக இருந்ததனால் என்னால் அவர் கதாபாத்திரத்தொடு என்னை இணைத்துக் கொள்ள முடிந்தது.

உன்னைப் போல ஒருவன் என்று பெயர் வைத்துவிட்டு, என்னைப் போல இந்து இஸ்லாமிய ஒற்றுமையை மேம்படுத்த கடந்த கால குற்றங்களை பேசி பெரிதுபடுத்தாமல் இருக்க வேண்டும் என நினைக்காமல்
இந்து நம்பிக்கைகளையும் இந்துக்களையும் ஒட்டு மொத்தமாக குற்றம் சொல்லி மத துவேஷத்தை வளர்க்க முயற்சி செய்திருப்பதால் உன்னைப் போல் ஒருவன் என்னைப் போல இல்லை.

Thursday, August 27, 2009

நீரின் தரம் உயர்ந்தது


சரவணம் மேன்ஷன் நீரின் தரம் மீண்டும் பயன்படுத்த தகுதியானதாக உயர்த்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

நடந்தது இது தான்.

சுகாதார துறையினர் நீரின் தரம் உயரும் முன்பே நீரின் தரம் நன்றாக இருப்பதாக திரு.நாராயணன் அவர்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்கியிருந்தார்கள்.

அதை திரு. டிராஃபிக் ராமசாமி அவர்களிடம் கொடுத்தேன். அவர் அது குறித்து சுகாதார அதிகாரியிடம் விசாரித்தார். திரு. டிராஃபிக் ராமசாமி அவர்களின் மீது இருக்கும் பயத்தின் காரணமாக, நான் கொடுத்த நீரை உண்மையாக பரிசோதித்து மனித மலம் கலந்திருப்பதாக சான்றிதழ் வழங்கினார்கள். அதை நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் திரு.ராஜாராமன் அவர்களிடம் கொடுத்தேன். அவர் சுகாதார துறையின் இணை ஆணையர் திருமதி. ஜோதிநிர்மலா அவர்களிடம் இது குறித்து பேசினார். சான்றிதழின் மேல் கைப்பட பிரச்சனையை விவரித்து எழுதியும் தந்தார்.

திரு.ஜோதிநிர்மலா அவர்கள் கூடுதல் சுகாதார அதிகாரி திரு.கிருஷ்ணன் அவர்களிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி ஆணைப் பிறப்பித்தார்.

திரு.கிருஷ்ணன் அவர்கள் 14.08.2009 வெள்ளியன்று எங்கள் மேன்ஷனுக்கு வந்தார். என்னை அழைத்து என்ன புகார் என்றும் நான் என்ன நடவடிக்கை எதிர் பார்க்கிறேன் என்றும் கேட்டார்.

நான், "கசிவு அடைக்கப்பட வேண்டும். அப்படி முடியாவிட்டால் அந்த போரை அடைக்க வேண்டும். குழாய்களை மாற்ற வேண்டும் என்றேன்"

ஆனால் அவர், "நீங்கள் ஏன் காலி செய்துவிட்டு வேறு இடம் தேடக் கூடாது என்று கேட்டார்." என் காரணங்களை சொன்னேன்.

உடனே அவர் சுகாதார அதிகாரியிடம் திரும்பி, "நூறு பேரையும் காலி செய்ய சொல்லி நோட்டீஸ் கொடுங்க. ரமேஷ் கொடுத்த புகார் அடிப்படையில் இந்த நடவடிக்கைனு ஓனருக்கிட்ட சொல்லிடுங்க" என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். (இந்த உரையாடலை ஒலிப்பதிவு செய்திருக்கிறேன்.)

அவரும் நான் அவரை இவ்வளவு தூரம் வர வைத்து விட்டேன் என்கிற கோபத்தில் பேசுகிறார் என்பது புரிந்தது. சரி அதையாவது செய்தால் மகிழ்ச்சி தான் என நினைத்துக் கொண்டோம்.

எனினும் மீண்டும் ஒருமுறை திருமதி.ஜோதிநிர்மலா அவர்களை சந்தித்து இது குறித்து விளக்கினால் நல்லதென்று எனக்குப் பட்டது. 18.08.2009 செவ்வாயன்று மீண்டும் அவர்களை சந்தித்தேன். இம்முறை சுகாதார ஆய்வாளர் வழங்கிய போலி சான்றிதழையும் அவர்களிடம் காட்டினேன். திரு.கிருஷ்ணன் அவர்கள் சொல்வது போல அனைவரையும் காலி செய்ய சொல்வது தேவையில்லை என்றும், உரிமையாளரை கசிவை அடைக்க ஆவன செய்யவைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டேன். திரு.ஜோதிநிர்மலா அவர்கள் பிரச்சனையை புரிந்து கொண்டார். என்னை சிறிது நேரம் வெளியே காத்திருக்க செய்தார்.

சிறிது நேரத்தில் உதவி சுகாதார அதிகாரி மருத்துவர். ரேவதி அவர்கள் என்னை அழைத்துப் பேசினார்.

"நா உங்க மேன்ஷனுக்கு வந்திருந்தேன். அந்த தண்ணீய நானே எடுத்து வந்து லேப்ல கொடுத்தேன். எங்க லேப்ல தண்ணீ நல்லாருக்குனு சொல்றாங்க" என்றார்.

நான், "மேடம் அப்படியிருக்க வாய்ப்பே இல்ல. நாங்க தினமும் அந்த தண்ணீய கையில தொடுறோம். எங்களுக்கு நல்லா தெரியும் மேடம். நீங்க டெஸ்ட் பண்ணவே வேண்டாம். கொஞ்சம் தண்ணீ ய கையில பட வெச்சு அஞ்சு நிமிஷம் கழிச்சு முகர்ந்து பாருங்க" என்றேன்.

அவர் புரிந்து கொண்டார். "நான் அது தான் அந்த பம்ப சீல் வெச்சுரலாம்னு சொன்னேன். எங்க சீனியர் தான் எவிக்ஷன் நோட்டீஸ் கொடுக்கலாம்னு சொன்னார். சீனியர் சொல்றப்ப நான் என்ன சொல்றதுனு விட்டுட்டேன்" என்றார்.

நான், "மேடம் நீங்க கொஞ்சம் பேசிப் பாருங்க. எல்லாரையும் காலி பண்ணவைக்கிறது சரியான தீர்வாகாது. உங்க சீனியர் ஒத்துக்கலன்னா ஜோதிநிர்மலா மேடம் கிட்ட பேசிப் பாருங்க புரிஞ்சுப்பாங்க என்றேன்."

மருத்துவர் ரேவதி, "சரி நான் பேசிப் பாக்குறேன் என்றார்"

கடந்த வெள்ளியன்று வேறு வேலை நிமித்தமாக வேளியே சென்று மாலை சுமார் ஆறு மணியளவில் விடுதிக்கு திரும்பினேன்.

குடிநீர் வாரிய நீர் சேமிக்கப் படும் தொட்டி சுத்தம் செய்யப் பட்டிருந்தது தெரிந்தது.

சம்மந்தப்பட்ட பம்பின் நிலையை காண சென்றேன். அங்கே திரு.நாராயணன் அவர்கள் சில வேலையாட்கள் மத்தியில் படிக்கட்டில் அமர்ந்திருந்தார். வேலையாட்கள் மூன்று பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

அடுத்த நாளே நீரின் துர்நாற்றம் 99% குறைந்திருந்தது. ஆச்சர்யம் ஆனால் உண்மை என்பது போல கடந்த ஒரு வாரமாக நீரின் தரம் படிப்படியாக உயர்ந்து பயன்படுத்த தகுதியானதாகிவிட்டது.

நன்றி சொல் படலம்.

மூன்றே மணி நேரத்தில் சரியாகியிருக்க வேண்டிய பிரச்சனை. பத்து மாத போராட்டத்திற்கு பிறகு நிறைவேறியது. இந்த போராட்டத்தில் பல நல்ல உள்ளங்கள் உதவியிருக்கிறார்கள். அனைவருக்கும் தனித் தனியாக நன்றி சொல்ல விரும்புகிறேன்.

சம்பவ அடிப்படையில் ஒவ்வொருவராக நன்றி சொல்கிறேன்.

முதல் முதலில் எங்களை நுகர்வோர் பாதுகாப்புத் துறையை அணுகும் படி அறிவுரை செய்த திருமதி. சந்த்ரிகா அவர்கள். ( தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் இளநிலை நீர் ஆய்வாளர்.) இவர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு நுகர்வோர் பாதுகாப்பு துறையினரிடம் மீண்டும் பேசியிருக்கிறார்.

அதன்பிறகு நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரி. திரு சண்முகவேல் அவர்களும் அங்கு செயல் படும் இன்னும் சில அதிகாரிகளும். புகாரோடு சென்ற பொழுது ஆறுதல் அளிக்கும் விதமாக பேசி தேவையான நடவடிக்கை செய்து தந்தார்கள்.

நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் ஆணையர் திரு.ராஜாராமன் இ.ஆ.ப அவர்கள். முதல் முறை நாராயணன் அவர்களுக்கு கடிதம் அனுப்பி அது திரும்பி வந்ததால் நேரடியாக ஒருவரை அனுப்பி கடிதம் கொடுத்து, அதற்கும் பலனில்லாததால், வழக்கு பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்து, காவல் ஆணையர் மற்றும் சுகாதார இணை ஆணையர் ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் கைப்பட எழுதி என்று இவர் ஆற்றிய சேவை எண்ணி மகிழ வைப்பது.

எழுத்தாளர் திரு.ஞாநி அவர்கள். என் தம்பி அவருக்கு அனுப்பிய மின்னஞ்சலுக்கு உடனே பதில் தந்தார். விகடன் பத்திரிக்கையை சேர்ந்த திரு.பாரதிதமிழன் அவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

திரு. பாரதிதமிழன் அவர்கள். எங்களுக்கு மிகப் பெரிய பக்க பலமாக இருந்தார். அவர் துணையால் தான் இப்பிரச்சனையை பத்திரிக்கையில் வெளியிட்டு உலகுக்கு எடுத்துக் காட்ட முடிந்தது. அது மட்டும் இல்லாமல் இது குறித்து தொடர்ந்து சிந்தித்து எங்களுக்கு பல ஆலோசனைகள் வழங்கினார். அவ்வப் பொழுது அவரே தொலைப்பேசியில் எங்களை தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்து தெரிந்து கொண்டார். இவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என நினைப்பது எனக்கு நானே நன்றி சொல்லிக் கொள்வது போல சற்று விசித்திரமாக எனக்கு தோன்றுகிறது. காரணம் இப்போராட்டத்தில் அவர் இரண்டற கலந்து விட்டார்.

டெக்கான் க்ரானிக்கல் பத்திரிக்கையின் நிருபர் செல்வி.ஜனனி அவர்கள் டெக்கான் க்ரானிக்கலில் இச்செய்தியை வெளியிட உதவினார்.
தமிழ்ச் சுடர் பத்திரிக்கையின் நிருபர் அவர்களும் இச்செய்தியை வெளியிட்டார்.

ஜூனியர் விகடன் பத்திரிக்கையின் நிருபர் திரு. பாலா அவர்கள், மற்றும் புகைப்படங்கள் எடுத்த திரு.நாகநாதன் அவர்கள். திரு பாலா அவர்கள் காவல் துறையினரை தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு விசாரித்ததில் காவல் துறையினர் மேலும் மேலும் தவறு செய்வதை நிறுத்திக் கொண்டார்கள்.

வாழும் மஹாத்மா உயர்திரு. டிராஃபிக் ராமசாமி அவர்கள். இவர் மீது அரசு அதிகாரிகள் கொண்டிருக்கும் பயம் கலந்த மரியாதையை நான் கண் கூடாகக் கண்டேன். அவர் தன்னலமற்று நம் நன்மைக்காக செயல் பட்டு வருகிறார். அவரை போற்றி பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

அவருக்கு பக்கபலமாக செயல்பட்டுவரும் அக்னிச் சுடரின் ஆசிரியர். டி.எஸ்.ஜேம்ஸ் நாயகம் மற்றும் தலைமை நிருபர் என்.ஜெகதீஸ்வரன் அவர்கள்.

இவ்விருவரும் காவல் துறையினருக்கு கடுமையான பல சோதனைகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். துணை ஆய்வாளர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களை மேல் அதிகாரிகள் சிலர் விசாரிக்கும்படி செய்து விட்டார்கள். அதன் பிறகு திரு.ஜெகதீஸ்வரன் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு இனி காவல் நிலையத்தில் எனக்கு எந்த இடைஞ்சலும் ஏற்படாது என வாக்களித்தார்.

புதுச்சேரி மக்கள் உரிமைக் கழகத்தை சேர்ந்த கோ.சுகுமாரன் அவர்கள். அவர் இது தொடர்பாக பலரிடம் பேசிவருகிறார். காவல் ஆய்வாளார் மற்றும் துணை ஆய்வாளார் மீது மனித உரிமை மீறல் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முயற்சிகள் செய்து வருகிறார்.

குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.சௌந்திரபாண்டியன் அவர்கள். இவர் மேயரை சந்திக்கும் படி கடிதம் ஒன்று எனக்கு கொடுத்திருந்தார். அதை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும் முன் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிட்டது. இது குறித்து அவரிடம் இன்று தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு நன்றி சொன்னேன். அவர், "பொது பிரச்சனையை கவனத்துக்கு கொண்டு வந்ததற்காக உங்களுக்குத் தான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்" என்றார்.

திரு.நட்ராஜ் IPS அவர்கள், அவருக்கு இச்செய்தியை கொடுத்த paolos raja அவர்கள்.

திரு.ஜோதிநிர்மலா. இ.ஆ.ப அவர்கள். பல இடங்களுக்கும் சென்று கடைசியில் இவர் தான் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். பாரதி கண்ட புதுமைப் பெண்ணுக்கு வாழும் உதாரணமாக திகழ்கிறார். இவர் சேவைத் திறன் குறித்து பலரும் மரியாதையோடு இவரை பாராட்டுகிறார்கள்.

மருத்துவர் ரேவதி அவர்கள், பிரச்சனைக்கு சரியான தீர்வை பரிந்துரைத்தார்.

பதிவருலக நண்பர்கள்.

டிராஃபிக் ராமசாமி அவர்களை தொடர்பு கொள்ள உதவிய நண்பர் ஜீவன் அவர்கள்.

கிணறு வெட்ட பூதம் பதிவை பலருக்கும் கொண்டு செல்ல உதவிய நண்பர்கள் கோவி.கண்ணன், நட்புடன் ஜமால், கிரி , தருமி,
என்வழி.காம் இணைய தளத்தினர். தமிழ்மணம்.நெட் இணைய தளத்தினர், மந்திரன், அழகி விஸ்வநாதன், ரிஷான், சூர்வேசன், வால்பையன், கௌதம்.

தருமி அவர்கள் இப்பிரச்சனை குறித்து பலரும் புகார் அனுப்புவதை தன் தளத்தில் பதிவிட்டு உற்சாகப்படுத்தினார்.

மந்திரன் அவர்கள் இப்பதவுக்காக ஒரு நிரந்தர சுட்டியை கொடுத்திருந்தார்.

இப்பிரச்சனையை pdf file-ஆக தயாரித்து தந்த காசு ஷோபனா.

சைலேந்திர பாபு அவர்களுக்கு இப்பிரச்சனையை கொண்டு சென்ற செல்வி.ரூபிணி மற்றும் கமல்.

காவல் ஆணையருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் கொடுத்து ஊக்கப்படுத்திய செல்வி.ஈஸ்வரி அவர்கள்.

துணை முதல்வர் தளத்திற்கு புகார் அனுப்பிய அபி அப்பா அவர்கள்.

சட்டமன்ற உறுப்பினர் திரு.ரவிக்குமார் தளத்தில் இப்புகாரை வெளியிட்ட ப்ரகாஷ் அவர்கள்.

மற்றும் ஆதரவாக குரல் கொடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அன்வர் சாதிக், குமரேஷ், மணிவண்ணன் மற்றும் நான் ஆகிய நால்வரும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை மனமுருக தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்பிரச்சனை மேலும் மேலும் வளர்க்காமல் இப்பொழுதாவது முடித்துத் தந்த திரு.நாராயணன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

(இன்னும் சில பெயர்களை மறந்திருக்கக் கூடும் என நினைக்கிறேன். சம்மந்தப்பட்டவர்கள் என் மறதியை பொறுத்தருளும்படி கேட்டுக் கொள்கிறேன். )

Monday, August 3, 2009

முயற்சிகள் தொடர்கின்றன.என் முந்தைய பதிவைப் படித்துவிட்டு தாங்கள் ஒவ்வொருவரும் கொடுத்த ஆதரவுக்கு முதற்கண் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் இவ்வளவு தூரம் முயற்சி செய்தும், பல்வேறு தளங்களில் புகார் செய்தும் இன்னும் பிரச்சனைக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்பு இரு காவலர்கள் எங்கள் மேன்சனுக்கு வந்தார்கள்.

வாட்ச்மேனிடம், "உங்க ஓனர வரச் சொல்லு" என்றார்கள்.

நான் சத்தம் கேட்டு வெளியே வந்தேன்.

என்னைப் பார்த்தவுடன். "வா தம்பி. உன் கதையா தான் வந்திருக்கோம். இப்படி போலீஸ் மானத்த வாங்கி வச்சிருக்கியே, இது உனக்கே நல்லா இருக்கா? நாங்கள்லாம் யாருக்காக ராத்திரி பகலா கண்ணு முழிக்கிறோம். உன்ன இவுங்க அடிச்சா யாரு கிட்ட சொல்லுவ? எங்ககிட்ட தானே வரணும்?"

ஜூன் ஐந்தாம் தேதி நான் மிரட்டப்பட்ட பொழுது இவர்களிடம் தானே சென்றேன்?

அவர் தொடர்ந்தார், "செருப்பு கால கடிச்சா கழட்டி எறின்னா.. கேக்க மாட்டேங்கிற! சரவணா மேன்ஷனையே தல கீழா மாத்தப் போறீயா. மெட்ராஸ்ல வேற மேன்ஷனே இல்லையா?"

"எனக்கு வேற மேன்ஷன் கிடைக்கும் சார். ஆனா இங்க நூறு பேர் அதே அசிங்கத்துல கஷ்டப்பட்டுட்டு இருப்பாங்க!"

"வேண்டாம். உங்கிட்ட பேசுனா. நீ இதயும் போடுவ. நீ கெளம்பு. நான் உங்க ஓனர தான் பாக்க வந்தேன்"

அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வீணாக்கலாமா? அது தான் அதையும் போடுகிறேன். :)

வாட்ச்மேன் அதற்குள் ஓனர் வீடு வரை சென்று திரும்பி இருந்தார். காவலர்களிடம், "சார், ஓனர் ஊர்ல இல்லை" என்றார்.

"யோவ். அந்த ஆள பத்தி எங்களுக்கு தெரியாதா? அவன் உள்ள இருந்துகிட்டே இல்லனு சொல்வான்யா. " என்றவர், தன்னோடு வந்த காவலரிடம், "வா போய் வீட்ல ஒரு எட்டு பாத்துட்டு வரலாம்" என்று சொன்னார்.

அத்தோடு முடிந்தது. அதன் பிறகு அவர்களிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை.

மாநகராட்சியில் இருந்து இரண்டு முறை வந்து சென்றார்கள்.

அவர்கள் வரும் பொழுதெல்லாம் நாராயணன் அவர்கள் தலையை வெளியே காட்டுவதேயில்லை. அவர் வெளியூரில் உள்ள தன் மகளின் வீட்டில் தங்கியிருப்பதாக விடுதியில் தங்கியிருக்கும் நண்பர் ஒருவர் கூறினார்.

இன்னிலையில் பொது நல ஆர்வலரும் அக்னி சுடர் பத்திரிக்கையின் நிறுவனருமான திரு. டிராஃபிக் ராமசாமி அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சந்திப்பிற்கு உதவிய ஜீவன், இது குறித்து ஒரு பதிவு செய்துள்ளார். அக்னிச் சுடரில் வெளியான செய்தியும் அந்த தளத்தில் உள்ளது. அங்கே செல்ல.

திரு.டிராஃபிக் ராமசாமி அவர்கள் சுகாதார அதிகாரியை கைப் பேசியில் தொடர்பு கொண்டு, பொய் சான்றிதழ் வழங்கிய சுகாதார ஆய்வாளர் குறித்து கேள்வி எழுப்பினார்.

"அவர் யார் இவங்கள காலி பண்ண சொல்றதுக்கு? தண்ணியே எடுத்துட்டு போகாம, தண்ணி நல்லாருக்குன்னு சர்ட்டிஃபிகேட் கொடுத்திருக்கார்.? "

மறுமுனையில் சொல்வதை கொஞ்சம் நேரம் மௌனமாக கேட்டார். பிறகு, "சரி, இப்ப பையன தண்ணியோட வரச் சொல்றேன். டெஸ்ட் பண்ணிப் பாருங்க" என்றார்.

நான் தண்ணீரோடு சென்று சுகாதார அதிகாரியைப் பார்த்தேன். சுகாதார அதிகாரி மருத்துவர் குகானந்தம், பரிசோதனைக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை என்று சொன்னார். பரிசோதனையின் முடிவு எதுவாக இருந்தாலும் சம்மந்தப்பட்ட ஆய்வாளர் மீது வழக்கு தொடரக் கூடாது என்றும் சொன்னார். சான்றிதழ் இன்னும் ஓரிரு தினங்களில் வரும்.

கடந்த புதன் 29-072009 முதல் அந்த பம்பை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இது வெறும் சப்பைக் கட்டுத் தான். சூடு தணிந்தவுடன் மீண்டும் போடத் துவங்கிவிடுவார்கள்.

என் அப்பா குன்னூர் சட்ட மன்ற உறுப்பினர் திரு. சவுந்திரபாண்டியன் அவர்களை சந்தித்து இது குறித்து பேசியுள்ளார். திரு. சவுந்திரபாண்டியன் அவர்கள் மேயரை சந்திக்கும் படி ஒரு கடிதம் கொடுத்துள்ளார். மேயரை நாளை அல்லது மறுநாள் சந்திக்க முயற்சி செய்வேன்.

பிரச்சனைக்கான தீர்வு மிக எளிமையானது தான். அதை திரு.நாராயணன் அவர்களை செய்ய வைக்க எந்த அதிகாரியாலும் முடியவில்லை என்பது மிகவும் அவமானகரமான விஷயம். இத்தனை I.A.S , I.P.S அதிகாரிகள் இருந்தும் ஒரு நியாயமான கோரிக்கையை, அடிப்படையான ஒரு விஷயத்தை, நிறைவேற்றித் தர யாருமேயில்லை. (நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தவிர)


இதற்கெல்லாம் ஒரு முடிவு நீதி மன்றத்தில் தான் கிடைக்கும் என நினைக்கிறேன்.

நிற்க. நாம் எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டிய வேலை ஒன்று உள்ளது. நீங்கள் எல்லோரும் ஒத்துழைத்தால் அதை செய்யலாம்.

காவல் நிலையங்களில் புகார் கொடுக்க செல்லும் பொழுது பெரும்பாலும் காவல் அதிகாரிகள் புகாரை பதிவு செய்யாமலேயே தட்டிக் கழிக்கிறார்கள். இதனால் பல குற்றங்கள் வெளிச்சத்துக்கு வராமல் போவதுடன், தொடர்ந்து நடைபெற்றும் வருகின்றன. இதனால் தவறான வழிகளை தேர்ந்தெடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மக்கள் மத்தியில் இடையறாது அச்ச உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இதற்கு காரணம் மக்களின் விழிப்புணார்வின்மையே ஆகும்.

நம் அறியாமையை போக்குவது நம் நண்பர்களான காவல் துறையின் வேலையல்லவா? அதனால் காவல் துறையே மக்களிடம் இது பற்றிய விழிப்பிணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த கோரிக்கையை, வலைப்பதிவர்கள் சார்பாக நாம் எல்லோரும் சென்று காவல் ஆணையரிடம் ஒரு பொது நல கோரிக்கையாக கொடுக்கலாம். அந்த கோரிக்கை கீழ்க் கண்டவாறு இருக்கும்.

காவல் துறைக்கு வரும் எல்லா புகார்களுக்கும் ரசீது கொடுக்கப்பட வேண்டும். அப்படி ரசீது கொடுப்பது தங்கள் கடமையென காவல் துறை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் ரசீது பெறுவது தங்கள் உரிமையென்பதை உணர்வதற்கான விளம்பரங்கள் வெளியிடப் பட வேண்டும். அப்படி புகாருக்கு காவலர்கள் ரசீது தராத பட்சத்தில் புகார் கொடுப்பவர் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கையை நாம் எல்லோரும் சேர்ந்து காவல் துறை ஆணையரிடம் கொடுக்கலாமா?

நிறைய பேர் சேர்ந்து புகார் கொடுத்தால் பொது நல புகார் என்பதால் நாளிதழ்களில் செய்தி வெளியாக வாய்ப்பிருக்கிறது. அப்படி செய்தி வெளியானால், அதுவே பலரிடம் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும். இதை உங்களில் யாராவது முன் நின்று ஒருங்கிணைத்தால் நன்றாக இருக்கும். இது குறித்த உங்கள் கருத்தை வரவேற்கிறேன். இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் இதை நிறைவேற்றினால் நன்றாக இருக்கும். என்று என்பதை, விவாதித்து முடிவு செய்யலாம்.

Saturday, July 11, 2009

கிணறு வெட்ட பூதம்...!
தூய நீர் என்பது ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜனின் எளிமையான கூட்டுக் கலவை. அது வாசமற்றது, வண்ணமற்றது, சுவையற்றது.

- தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம்.

இந்த எளிய உண்மையை சூளைமேடு ராகவா தெருவில் உள்ள சரவணம் மேன்ஷனின் உரிமையாளர் திரு.நாராயணன் அவர்களுக்கு புரிய வைக்க நானும் எனது சில நண்பர்களும் செய்து வரும் முயற்சிகளின் தொகுப்பு இதோ...

சூளைமேடு ராகவா தெருவில் உள்ள சரவணம் மேன்ஷனில் நீர் கடந்த ஒன்பது மாதங்களாக துர்நாற்றம் அடித்து வருகிறது. இது பற்றி மேன்ஷன் உரிமையாளர் திரு.நாராயணனிடம் புகார் செய்தேன். அவர், "நீ மட்டுந்தாப்பா இப்படி சொல்ற. நான் உன் ஒருத்தனுக்காக போர்ல கை வைக்க முடியுமா? புடிச்சா பாரு, இல்ல காலி பண்ணிக்க" என்றார். உடனடியாக வேறு இடம் பார்ப்பதில் பல சிக்கல்கள் இருந்ததால், வேறு இடம் பார்க்கும் எண்ணத்தை அப்போதைக்கு தள்ளி வைத்தேன். பின்னர் இது பற்றி மற்ற அறைவாசிகளிடம் பேசிய பொழுது, அவர்களும் நீரின் தரம் குறித்து அதிருப்தியோடு இருக்கிறார்கள் என்பதும், அவர்களும் திரு.நாராயணனிடம் புகர் செய்திருக்கிறார்கள் என்பதும், அதற்கு திரு.நாராயணன் அவர்கள், 'நீ மட்டுந்தான் சொல்ற, பிடிக்கலன்னா காலி பண்ணு' வசனம் பேசியிருந்ததும் தெரிய வந்தது. இதனால் பத்து பேர் ஒன்றாக சென்று புகார் செய்யலாம் என முடிவெடுத்தோம்.

ஒரு கூட்டமாக எங்களை கண்டவுடன் திரு.நாராயணன் தன் வசனத்தை சற்றே மாற்றினார். , "தம்பி நீங்க எப்பவோ ஒரு நாள் வந்த வாசனைய இன்னும் நினச்சுட்டு இருக்கீங்க. ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு இங்க இருக்கீங்க? பேசாம காலி பண்ணிருங்க!."

"சார் நாங்க காலி பண்ணும் போது பண்றோம். இருக்குற வரைக்கும் குளிக்க வேணாமா? அந்த பம்பையாவது ஆஃப் பண்ணி வைங்க சார். அந்தப் பம்ப போட்டா தான் தண்ணி நாறுது."

"அதப்பெடி காசு செலவு பண்ணி பம்ப வெச்சிட்டு, அத போடாம இருக்கிறது? பம்பு கெட்டு போயிராதா? நீங்க என்னா என் பில்டிங்க்ல இருந்துக்குட்டு என்ன அதை செய்யு இத செய்யுன்னு சொல்லிக்கிட்டு? பிடிச்சா இருங்க, இல்ல காலி பண்ண வேண்டியது தானே?"

இவர் இந்த காலி பண்ணு வசனத்தை தவிர வேறெதுவும் பேச மாட்டார் என்பது புரிந்தது.

"சரிங்க சார். தண்ணிய டெஸ்ட் பண்ணலாம். அப்படி தண்ணில ஏதோ தப்பிருக்குன்னு ரிசல்ட் வந்தா, அப்பவாவது ஏதாச்சும் செய்வீங்களா?", என்றேன்.

டெஸ்ட் என்கிற வார்த்தை அவருக்குள் அமிலம் கக்கியது போலும். மனிதர் சற்றே படபடத்தார்.

"பண்ணுயா. பண்ணு. நீ பண்ற டெஸ்ட்டு என் பில்டிங்க்ல இருக்க நூறு பேருக்கு நல்லது பண்ணுதுன்னா, அதப் பாத்து சந்தோஷப்படுற மொதல் ஆளு நான் தான்."

"சரி நான் டெஸ்ட் ரிசல்டோட வந்து உங்கள பாக்குறேன்" என்றேன்.

தலையை சொறிந்தவர், "உனக்கேன் வீண் சிரமம். அதக் கூட நானே பண்ணிக்கறேனே!" என்றார்.

அவர் பண்ண மாட்டார் என்பது தெரியும்.

எழிலகத்தில் உள்ள தமிழ் நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தை அணுகினேன். அவர்கள் நீரில் மனித மலம் கலந்திருப்பதாக சான்றிதழ் வழங்கினார்கள். அதிர்ச்சியும் ஆத்திரமும் என்னை ஆட்கொண்டன. தமிழ் நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் இளநிலை நீர் ஆய்வாளர் திருமதி. சந்த்ரிகா நாங்கள் பயன் படுத்தும் நீரில் மனித மலத்தின் கலவை மிக அதிக அளவில் இருப்பதாக கூறினார். நூற்றுக்கு ஒன்று இருந்தாலே அந்த நீர் பயன்படுத்த அருகதையற்றதாகிறது, அப்படி இருக்கையில் நூற்றுக்கு முப்பத்தாறு என்கிற விகிதம் எள்ளளவும் சகித்துக்கொள்ள கூடிய அளவில்லை என்றார். இந்த சான்றிதழை காட்டிய பிறகும் உரிமையாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் திரு.ஷண்முகம் அவர்களிடம் இது பற்றி பேசும் படி கூறினார்.

அன்றிரவே சான்றிதழோடு மேன்ஷனின் ஒவ்வொரு அறைக்கும் அன்வர், அனிமேட்டர் பாலா, மற்றும் நான் ஆகிய மூவரும் சென்று நாங்கள் பயன்படுத்தும் நீர் எவ்வளவு அருவருக்கத்தக்கது என்பதை சக மேஷன் வாசிகளிடம் எடுத்துச் சொன்னோம்.

எங்கள் மேஷனில் ஒரு அலுவலக அறை உள்ளது. அந்த அறையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை ஏழு மணிக்கு பூஜை செய்ய திரு.நாராயணன் வருவார். அந்த நேரத்தில் மேன்ஷனில் உள்ள அனைவரும் ஒன்றாக சென்று சான்றிதழோடு திரு.நாராயணன் அவர்களை சந்தித்து மாற்று ஏற்பாடுகள் செய்ய்யும்படி கோரிக்கை வைப்பதென முடிவெடுத்தோம். அன்று அவர் வருவது தெரிந்தவுடன் அனைவரும் அலுவலக அறைக்கு வந்தார்கள். சான்றிழின் பிரதியொன்றை அவரிடம் கொடுத்தேன். அவர் சான்றிதழையும் கூட்டத்தையும் கண்டவுடன் மிரண்டார். "சரி இப்ப என்ன அந்த பம்ப போடக் கூடாதா? சரி, போடல. யப்பா வாட்ச் மேன், இனி அந்த பம்ப போடாதப்பா." அவர் அப்போதைக்கு நிலைமையை சமாளிக்க அப்படிச் சொல்கிறார் என்பது எங்களுக்கு புரிந்தது.

"சார், ஒரு ப்ளம்பர கூப்பிட்டு எங்க கசிவு இருக்குன்னு பாக்க சொல்லுங்க சார். அதுவரைக்கும் ஒரு அடி பம்ப் போட்டுக் கொடுங்க"

"சரி சொல்றேன்" தன் கைபேசியை எடுத்தார். ப்ளம்பரை அழைக்க முயற்சித்தார். பின்னர் எங்களிடம், "பாரு உங்க முன்னாடி தான் நான் ஃபோன் பண்றேன். எடுக்க மாட்டேங்கறான். என்ன என்னப்பா செய்ய சொல்றீங்க?"

"சார் மெட்ராசில ஒரே ப்ளம்பர் தான் இருக்காரா?" கூட்டத்திலிருந்து குரல் வந்தது.

"நீங்க கேட்குறது ரைட்டு தான் தம்பி.." தலையை சொறிந்தவர், "ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்க. ரெடி பண்ணிறேன்", என்றார்.

கூட்டம் கலைந்தது.அவரின் கலக்கமும் தான். அடுத்து ஒரு வாரம் எந்த மாற்றமும் இல்லை. ஒரு வாரம் கழித்து நிதானமாக ஒரு துறுப்பிடித்த அடி குழாயை மாட்டினார்.

என் தம்பி வேறு எங்காவது அறையெடுத்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தான். "இது லேலைக்கு ஆகாது" என்றான்.

"சரி போகலாம். அங்கயும் இது மாதிரி வேற பிரச்சனை இருந்தா? மறுபடியும் வேற எடம் தேடுறதா?"

"சண்ட போடணும்னா போடலாம். நம்ம வேலையையும் பாக்கணும் இல்ல?"

"அப்புறம் ஏன் ராமர பத்தி, கிருஷ்ணர பத்தி, காந்தி பத்தியெல்லாம் பெரும பேசணும். அந்த அரசியல்வாதி அப்படி தப்பு பண்றான் இவன் இப்படி பண்றானு வாய்க் கிழிய பேசிட்டு கண்ணு முன்னாடி ஒரு தப்பு நடக்குது அத அப்படியே விட்டுட்டு விலகி போயிறதா? அவன் மாசம் ரெண்டு லட்சம் சம்பாரிப்பான். ஆனா அவனுக்கு காசு கொடுக்கிறவனுக்கு நல்ல தண்ணிக் கூட கொடுக்க மாட்டான். அத அப்படியே விட்டுட்டு நாம விலகிப் போகணும். நம்ம என்ன சும்மாவா கேட்குறோம்? காசு கொடுக்கல?"

என் தம்பி ஒரு புன்னகை உதிர்த்தான். "சரி, அடுத்து என்ன பண்றது?"

நான் மீண்டும் ஒவ்வொரு அறைக்கும் சென்று அனைவரையும் சந்தித்து அவர்களின் கையெழுத்தை பெற்றேன். அந்த காகிதத்தோடு தண்ணீர் மற்றும் மின்சார குறைபாடுகள் பற்றிக் கூறி அவற்றை நிவர்த்தி செய்யும் படி கேட்டுக் கொண்டு அப்படி நிவர்த்தி செய்யாத பட்சத்தில் நுகர்வோர் பாதுகாப்பு நீதி மன்றத்தை அணுக வேண்டியிருக்கும் என்பதையும் குறிப்பிட்டு ஒரு பதிவுத் தபால் ஒன்றை அனுப்பினேன். அந்த தபாலை பெற திரு.நாராயணன் மறுத்துவிட்டார். அவரும் அவரது மனைவியும் என் அறைக்கு வந்து என்னை காலி செய்து விடும்படிக் கூறி சண்டைப் போட்டுவிட்டுப் போனார்கள். கடிதம் என்னிடம் திரும்பி வந்தது.

எழிலகத்தில் உள்ள நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் திரு.ஷண்முகம் அவர்களை சந்தித்தேன். அவர் நடந்தவற்றையெல்லாம் ஒரு புகாராக எழுதி நுகர்வோர் பாதுகாப்பு துறையின் ஆணையர் திரு.ராஜாராமன் இ.ஆ.ப அவர்களிடம் கொடுக்கச் சொன்னார்.

திரு. ராஜாராமன் அவர்கள் என் புகாரையும் நான் சமர்ப்பித்த சான்றிதழையும் அடிப்படையாக கொண்டு திரு.நாராயணனிடம் விளக்கம் கேட்டு ஒரு கடிதம் அனுப்பினார். அது மட்டும் அல்லாது, சென்னை மாநகராட்சி, சென்னை குடி நீர் வாரியம், மற்றும் மின்சார வாரியம் ஆகியவற்றுக்கும் கடிதம் அனுப்பி மேன்ஷனின் நிலைப் பற்றி விசாரணை நடத்த பரிந்துரை செய்தார். எங்கள் மேஷன் மட்டும் அல்லாது சென்னையின் அனைத்து மேன்ஷனின் நிலை பற்றியும் விசாரணை நடத்தும் படி பரிந்துரை செய்தார்.

நாராயணன் திரு.ராஜாராமன் அவர்கள் அனுப்பிய பதிவுக் கடிதத்தையும் பெற மறுத்தார். கடிதம் மீண்டும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கே சென்றது. மீண்டும் நாராயணன் என்னிடம் வந்து மேன்ஷனை காலி செய்துவிடும்படி காரசாரமாக கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் திரு.ராஜாராமன் அவர்களின் கடிதத்தை அடிப்படையாக கொண்டு வாரியம் வாரியாக அதிகாரிகள் பிரவேசிக்கத் துவங்கினார்கள்.

முதலில் குடிநீர் வாரியத்தில் இருந்து ஒரு பொறியலாளர் வந்தார்.

குடிநீர் வாரியம் வழங்கும் நீரில் குறையிருந்தால் மட்டுமே தன்னால் நிவர்த்தி செய்ய முடியும் என்றும். இங்கு பிரச்சனை போர் பம்ப்பில் இருப்பதால், அவரால் எதுவும் செய்ய முடியாது என்றும் கூறிவிட்டுச் சென்றார்.

அதன்பிறகு கடந்த ஜூன் மாதம் ஐந்தாம் தேதி வெள்ளிக் கிழமை காலை சுமார் பத்து மணியளவில் மாநகராட்சியிலுருந்து வந்திருக்கும் ஒருவர் என்னை சந்திக்க விரும்புவதாக நாராயணனின் மகன் என்னை அழைத்தார். நான் வெளியே சென்று பார்த்த பொழு இடுப்பில் கைககளும் கண்களில் கனலும் வைத்தபடி ஒரு குண்டான மனிதர் நின்று கொண்டிருந்தார். என்னைக் கண்டவுடன், "ஏன்யா தண்ணி சரிலைன்னா வேற மேன்ஷனுக்கு போறது தானே?" என்றார். நான் அவர் பெயரைக் கேட்டேன். அவர் சொல்ல மறுத்தார். சுகாதாரத் துறையிலிருந்து வந்திருப்பதாக சொன்னார். "சார், உங்கள விசாரணை பண்ணி நடவடிக்கை எடுக்க சொல்லி அனுப்பிருக்காங்க. முடிஞ்சா பாருங்க.. இல்லனா விடுங்க நான் கன்ஸ்யூமர் கோர்ட்ல பாத்துக்குறேன்" என்று சொல்லி விட்டு நான் கிளம்பிவிட்டேன்.

சிறிது நேரம் கழித்து தேனீர் பருகச் சென்றேன். திரும்பி என் அறைக்கு வந்த பொழுது என் தொலைப்பேசி இணைப்பு ஜன்னலருகே துண்டிக்கப் பட்டிருந்ததை கண்டறிந்தேன். யார் வேலை என்பது புரிந்தது. பி.எஸ்.என். எல்-லில் பின்னர் புகார் செய்யலாம் என முடிவு செய்து என் கணினியை துவக்கினேன்.

என் அறைக்குள் நாராயணன், அவரது மகன், வாட்ச் மேன் மற்றும் ஒரு தடியர் ஆகிய நால்வரும் வந்தார்கள். நாராயணனும் அவரது மகனும் என் அறையினுள் நின்றார்கள். தடியர் வாச்சற்படியில் நின்றார். வாட்ச் மேன் அறைக்கு வெளியே நின்றார். நான் நாற்காலியிலிருந்து எழுந்தேன். நாராயணன் அதை தன் பக்கம் இழுத்துக் கொண்டு அமர்ந்தார். கச்சேரியை ஆரம்பித்தார்கள்.

"பிடிக்கலன்னா காலி பண்ண வேண்டியது தானேடா... என்னா நீ கோர்ட்டு கீட்டுன்ற... நீ வாடகையும் கொடுக்க மாட்ட. கரன்டு பில்லு எவன் உன் அப்பனா கட்டுவான்.."

நான் வாடகைக்கு கொடுக்க சென்ற பொழுது அவர் மனைவி, "உன் வாடகையே வேணாம் நீ காலி பண்ணிக்கோ" என்றார். பிறகு எப்படி வாடகை கொடுப்பது?

"சார் வாடக கொடுக்காம எங்கேயும் நான் ஓடிரல. நீங்க முதல தண்ணிய ரெடி பண்ணுங்க. நீங்க தண்ணிய ரெடி பண்ணா நான் ஏன் கோர்ட்டுக்கு போறேன்"

உடனே தடியர், "டேய்..யார் எடத்துல இருந்து என்னா பேசுற... நீ கோர்ட்டுக்குள்ள போவ.. உயிரோட வெளிய வர மாட்ட.. பாக்குறியா?"

"சார் சும்மா மிரட்டாதீங்க. நீங்க என்ன சொன்னாலும் நான் கோர்ர்டுக்கு போறது உறுதி."

தடியர், "இவங்கிட்ட பேசுணா வேலைக்கு ஆகாது. இவன உள்ள உட்கார வச்சு தண்ணி நல்லாருக்குனு எழுதி கொடுத்துட்டு காலி பண்ண சொல்லலாம்..." என்றார்.

நாராயணனின் மகனிடம் திரும்பி, "நம்ம கான்ஸ்டபிள வரச் கொல்லு என்றார்."

"சரி வாங்க... போலீஸ் ஸ்டேஷன் போலாம்" என்றபடி அறையை விட்டு வெளியே வந்தேன். உடனே தடியர், "டேய்.. எங்க ஓடப் பாக்குற.. வா வந்து உள்ள உட்காரு" என்று என் கையைப் பிடித்து இழுத்தார். நான் என் கையை அவரிடம் இருந்து இழுத்து விடுவித்துக் கொண்டேன். பின் மேன்ஷனுக்கு வெளியே வர முயற்சித்தேன். அப்பொழுது நாராயணன் என் தோள்களில் பின்னால் இருந்து தொங்கியபடி, "விடாத. புடி புடி புடி இவன", என்றார். நான் சுவற்றையும் கேட்டையும் பிடித்து இழுத்துக் கொண்டு மேன்ஷனை விட்டு வெளியேறினேன். எனக்கிருந்த ஒரே நோக்கம் என்ன சண்டை நடந்தாலும் அது மேன்ஷனுக்கு வெளியே நடக்க வேண்டும் என்பது தான். நான் மேன்ஷனை விட்டு வெளியேறியவுடன் அவர்கள் உள்ளேயே நின்று விட்டார்கள். அறையை பூட்டுவது பற்றியோ, செருப்பு அணிவது பற்றியோ கவலை படாமல் காவல் நிலையத்தை நோக்கி வேகமாக ஓடினேன். மணி சுமார் பனிரெண்டு இருக்கும். கால் வெயில் காரணமாக் சுட்டெறித்தது. எதையும் பொருட்படுத்தாமல் நேராக காவல் நிலையத்தை ஓடிச் சென்றடைந்தேன்.

காட்சிக்குள் காவலர்கள் வந்து விட்டதால் அடுத்து வணக்கம் போடப் போகிறேன் என நினைக்காதீர்கள். இப்பொழுது தான் இடைவேளை.

காவல் நிலையத்தில் காவலர் ஒருவர் என்னை நிதானமாக வரவேற்றார். "சார் நான் சரவணம் மேன்ஷன்..."

"இரு இரு... ஓடி வந்திருக்க... முதல்ல தண்ணி குடி..." என்றார்.

தண்ணீர் குடித்து விட்டு திரும்பிப் பார்த்தால் காவலர் அனைவரும் தேனீர் குடித்துக் கொண்டிருந்தார்கள். காவலர்கள் தேனீர் குடிப்பது சாதாரணம் தான். ஆனால் அதை உபயம் செய்து கொண்டிருந்தவரை பார்த்த பொழுது தான் எனக்கு லேசாக தலை சுற்றியது. காரணம் அந்த தேனீரின் உபய கர்த்தா என்னை என் அறையில் வைத்து கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்த அதே தடியர் தான். அதில் வேதனை என்னவென்றால் காவலர்களில் சிலர், "சார் எனக்கொரு டீ... எனக்கொரு டீ" என்று கேட்டுக் கேட்டுக் குடித்தது தான்.

அதன் பிறகு நான் பேசிய பேச்செல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகத் தான் இருந்தது. எல்லா பிரச்சனைகளையும் விட்டு விட்டு நான் வாடகைக் கொடுக்காத ஒரு குறையை கெட்டியாக பிடித்துக் கொண்டார்கள். "சார் நான் வாடகை எப்படியும் இன்னைக்கு இல்ல நாளக்கி கொடுக்கத்தான் போறேன், அவங்க என்ன கொன்றுவேன்னு மிரட்டுனாங்க. அதனால பாருங்க செருப்புக் கூட போடாம ஓடி வந்திருக்கேன் அத முதல்ல விசாரிங்க சார்" என்றேன்."அதெல்லாம் அப்புறம் விசாரிக்கிறோம் நீ முதல வாடகைய கொடுயா" என்றார்கள். வெங்கடாசலம் என்கிற காவலர் என்னிடம் ஒரு கைப் பேசியை கொடுத்து, "இந்தா யாருக்கு ஃபோன் பண்றியோ பண்ணு. இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல, வாடகை நீ கொடுத்தாகணும்" என்றார். அலுவலகத்தில் இருந்த என் தம்பியை அழைத்து பணம் எடுத்து வரச் சொன்னேன்.

வாடகையை கொடுத்த பிறகு, நான் ஒரு புகார் பதிவு செய்ய வேண்டும் என்றேன். ஒரு பேனாவும் பேப்பரும் தந்தார்கள். புகாரை நான் எழுதிக் கொண்டிருக்கையில். "யோவ், என்ன நாவலா எழுதுற? சீக்கிரம் முடிய்யா? நான் வீட்டுக்கு போறதில்ல" போன்ற வசனங்களால் என்னை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தார் வெங்கடாச்சலம். எனினும் ஒருவழியாக நடந்தவற்றை எல்லாம் எழுதி முடித்து அவரிடம் கொடுத்தேன். அவர் அதை என்னை மிரட்ட வந்த நால்வரிடமும் படித்துக் காட்டினார். ஐவரும் வழைப் பழ ஜோக்கை கண்டது போல விலாவாரியாக சிரித்தார்கள்.அதன் பிறகு புகார் கடிதத்தை ஒரு கோப்புக்குள் வைத்து விட்டு, "சரி ரமேஷ். நீங்க கெளம்புங்க. நாங்க என்னான்னு விசாரிக்கிறோம்" என்றார். நான் புகாருக்கான ரசீது ஒன்றைக் கேட்டேன். வெங்கடாச்சலம் முகம் சுளித்தார். ஆய்வாளரிடம் பேசும்படி கூறிவிட்டு முகம் திருப்பிக் கொண்டார்.

ஆய்வாளர் முனைவர். திரு. செல்வகுமார் காவல் நிலைய வாசலில் சாலையோரத்தில் நின்றபடி சிலரிடம் பேசிக் கொண்டிருந்தார். நானும் என் தம்பியும் அவரருகே சென்று கடிதத்துடன் நின்றோம். அவர் கடிதத்தை என்னிடமிருந்து கையில் வாங்கிக் கொண்டு பேசுவதை தொடர்ந்தார். நான் அவரது பெயரைப் பார்த்து, முனைவர் பட்டம் பெற்ற காவல் ஆய்வாளரா என ஆச்சரியப் பட்டேன். அவர் என் பக்கம் திரும்பி, "என்ன பேட்ஜ பாக்குற? என்ன? என்ன பத்தி கம்ப்ளெயின் பண்ண போறியா? இந்தா நல்லா பாத்துக்க, போய் எவன்கிட்ட வேணா சொல்லு எனக்கு கவலையில்ல" என்றபடி என் முகத்துக்கு நேராக பேட்ஜை கொண்டுவந்தார். அவர் அப்படி செய்தது மிகவும் கீழ்த் தரமாக தெரிந்தது.

என் தம்பி, "என்ன சார்? பேட்ஜ பாத்தது ஒரு தப்பா?" என்றான். பளீரென்று அவன் முகத்தில் அறைந்தார். "என்ன கேள்வி கேக்குற? போலீச கேள்வி கேக்குற அளவுக்கு நீ என்ன பெரிய இவனா நீ" என்று மீண்டும் அவனை அடிக்க கையெடுத்தார். நான் இடையில் புகுந்து என் இடது கையால் அவர் இடது கையை பிடித்துக் கொண்டு, வலது கையால் அவரை தடுத்தபடி, "பேசிட்டிருக்கும் போதே அவன எதுக்கு இப்ப அடிக்கிறீங்க? முதல்ல என்னா ஏதுன்னு விசாரிங்க சார்" என்றேன்.

"போலீஸ் கையவே புடிக்கறீயா நீ." எனக்கு ஒரு அறை விழுந்தது. "நீ உள்ள நட. முதல்ல உன்ன விசாரிக்கிறேன்" என்று என்னை பிடித்து உள்ளே தள்ளினார். முதுகிலும் ஒரு குத்து விழுந்தது. நானும் என் தம்பியும் காவல் நிலையத்துக்குள் கொண்டு செல்லப் பட்டோம். பின்னாலயே ஆய்வாளர் வந்தார். வரும் பொழுது, "இவனுங்க ரெண்டு பேத்தையும் ஜட்டியொட உட்கார வைங்க. பேப்பர்காரன கூப்புடுங்க. நாளைக்கு இவனுங்க ஃபோட்டோ பேப்பருல வரட்டும்" என்றார்.

உடனே வெங்கடாசலம் என் பெயர், பெற்றோர் பெயர், வயது ஆகியற்றை ஒரு குற்றவாளிகளை பதிவு செய்யும் நோட்டில் எழுதத் தொடங்கினார். எனக்கு இந்த நாடகம் ஆச்சரியமாக இருந்ததேயன்றி ஆதிர்ச்சியாக இல்லை. எனக்கு பயமும் தோன்றவில்லை. "எழுதுங்க எழுதுங்க தாராளமா எழுதுங்க" என்ற படி என் சட்டியையும் கழற்றினேன். "இந்தா இங்க ஒரு மச்சம், இங்க ஒரு மச்சம் நோட் பண்ணிக்கங்க" என்றேன். என் தம்பி தயங்கிய படி என் கையைப் பிடித்தான். அவனிடம் "இரு இரு. என்னா பண்ணீறாங்க பாப்போம்" என்றேன். ஆய்வாளர், "உங்கள எஃப்.ஐ.ஆர் போட்டு கோர்ட்டுல நிறுத்துவோம்" என்றார். "நானும் அத தான் எதிர்ப்பாக்குறேன்" என்றேன். ஆய்வாளர் மௌனமானார். வெங்கடாசலம் குறிப்பேட்டை மூடிவைத்தார். மிரட்டல் நாடகம் ஒரு முடிவுக்கு வந்தது. குரைக்கும் நாய் கடிக்காது என்ற பழமொழிக்கு மிகச் சிறந்த உதாரணமாக ஆய்வாளரும் வெங்கடாசலமும் இன்னும் ஒரு சில காவலர்களும் அன்று என் கண்ணுக்கு தெரிந்தார்கள்.

பின்னர் நான் ஆய்வாளரிடம் அவர் என்னை எதற்காக அடித்தாரென்று கேட்டேன். அவர் எங்களை அடித்தது குற்றம் என்று பலமுறை சொன்னேன். "என்ன ஒருத்தன் கொன்றுவேன்னு மிரட்டுறான். அவன் கிட்டருந்து தப்பிச்சு உங்க கிட்ட வந்தா. நீங்க போட்டு அடிக்குறீங்க. என்ன சார் என்கொய்ரி இது?" அவர் ஒரு போலியான பணிவுடன், "சரி சார். நீங்க டீச் பண்ணுங்க. எப்படி என்கொய்ரி பண்ணுறது?" என்றார்.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர் தொடர்ந்தார். "இங்க பாரு, நீ தப்பு பண்ணுனனு நான் சொல்லல. ஆனா நீ பேசுன விதம் தப்பு. நீ எங்க போனாலும் எப்படி பேசறங்கறத வச்சுத் தான் உன் காரியம் நடக்கும். அதனால எங்க எப்படி நடந்துக்கணும்னு தெரிஞ்சுக்கோ. ஒரு இன்ஸ்பெக்டருக்கிட்ட அப்படியாய்யா பேசுவ?"

'நான் எங்கய்யா பேசுனேன். நீ தான் விடவேயில்லையே. சரி விடு மனுஷன் நிதானத்துக்கு வந்துருக்காப்ல. பேச்ச வளக்காம, பிரச்சனைய சொல்லுவோம் ' என நினைத்தபடி, "சார். நான் பேட்ஜ பாத்தத தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க போல. உங்க பேரு முன்னாடி டாக்டர் இருந்தது அது கொஞ்சம் ஆச்சர்யமா பாத்தேன். சரி, இந்தக் கம்ப்ளெய்ன்ட கொஞ்சம் படிங்க" என்றேன். மனிதர் எந்த சலனமும் காட்டாமல் வெளியே சென்றுவிட்டார். கடைசி வரை அந்த புகாரை அவர் படிக்கவேயில்லை.

துணை ஆய்வாளர் திரு. த. ராதாகிருஷ்ணன் என்னிடம் வந்தார். "என்னய்யா? இன்ஸ்பெக்டருக்கிட்ட இந்தப் பேச்சு பேசுற? ஊது என்றார்." சரக்கடித்த தெம்பில் பேசுகிறேன் என நினைத்துவிட்டார் போலும். என்னுள்ளிருக்கும் சரக்கு, ஸ்ரீ ராமரின் நாம ஜபம் என்பதை நான் ஊதிய பொழுது அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை.

வெளியே சென்று ஆய்வாளரிடம் ஏதோ பேசி விட்டு திரும்பினார். "யோவ் உனக்கே இவ்வளவு டென்ஷன் இருந்தா. நைட்டு பூரா அலைஞ்சுட்டு வர அவருக்கு எவ்வளவு டென்ஷன் இருக்கும். நல்ல பசங்க, அவிங்கள போய் அடிச்சுட்டமேன்னு ரொம்ப வருத்தப்படுறாருய்யா. அவங்க மேல ஒண்ணும் தப்பு இல்ல அவங்க உரிமைய அவங்க கேட்குறாங்கன்னாரு. சாயங்காலம் வந்து உங்ககிட்ட பேசுறேன்னாரு. அதுவரைக்கும் அப்படி வெயிட் பண்ணுங்க" என்று சொல்லிவிட்டு, எங்கள் பதிலுக்கு காத்திராமல் போனார். மாலை வரை காத்திருந்தோம். இடையில் தயிர் சாதம் வாங்கிக்கொடுத்தார்கள். மாலை மாற்றலாகி செல்லும் காவலர்களுக்காக ஒரு சிற்றூண்டி விருந்து நடந்தது. எங்களுக்கும் இனிப்பு காரங்களை வழங்கினார்கள்.

எல்லாம் முடிந்த பிறகு, துணை ஆய்வாளர் திரு.ராதாகிருஷ்ணன் தன் மேஜைக்கு என்னை அழைத்தார். மாலை சுமார் ஆறு முப்பதாகியிருந்தது. "சொல்லுங்க ரமேஷ், என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?" என்றார், தன்னால் முடிந்த மிகச் சிறந்த புன்னகையை உதிர்த்தபடி. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. முடிவு செய்ய வேண்டியது அவரல்லவா? நான் முடிவு செய்ய என்ன இருக்கிறது? "சார். நான் என்ன முடிவு பண்றது சார். என் டெலிஃபோன் வயர கட் பண்ணி என்ன கொன்னுருவேன்னு மிரட்டியிருக்காங்க. அவங்க மேல நடவடிக்கை எடுங்க சார்."

"இங்க பாரு உன்ன என் தம்பி மாதிரி நெனச்சு சொல்றேன். தேவையில்லாத பிரச்சனையில எல்லாம் நீ ஏன் தலையிடுற. உனக்கு தண்ணி சரியில்லையா? நீ வேற எடம் பாத்துகுட்டு போ. அத விட்டுட்டு மத்தவனுக்கெல்லாம் நீ ஏன் கஷ்டப்படுற?.." என்று ஆரம்பித்து ஒரு கதா காலட்சேபமே செய்தார். அதில் உபதேச ஆர்வத்தில் நான் இப்படியெல்லாம் வலை தளத்தில் பதிவு செய்வேன் என்பது தெரியாமல், "யோவ் இப்ப என்னய எடுத்துக்க. நான் இந்த வேலைக்கு லஞ்சம் கொடுத்து தான் வந்தேன். நான் கொடுக்கலன்னா வேற எவனாவது கொடுத்திருப்பான். இந்தக் காலத்துல நீ என்னயா? சுத்த வெவரம் கெட்டவனா இருக்க? இந்த எலக்ஷன்ல கள்ள ஓட்ட போட விடாம தான் இருந்தேன். நேரம் ஆக ஆக கட்சி ஆளுங்க அதிகமா வர ஆரம்பிச்சாங்க. விடாம இருக்க முடியுமா? விடாம இருந்தா என் குடும்பத்த அவன் சும்மா விடுவானா?" என்றார்.

"யோசிங்க ரமேஷ். யோசிச்சு பாத்து சொல்லுங்க. இப்ப நம்ம என்ன பண்ணலாம்?"

"அவங்க மேல நடவடிக்கை எடுங்க."

"என்னய்யா நீ, இவ்வளவு தூரம் சொல்றேன், சொன்னதயே திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டு இருக்க? அவனுந்தாயா உன் மேல கம்ப்ளெயின் பண்ணியிருக்கான்?"

"சரி. அப்ப என் மேலயாவது நடவடிக்க எடுங்க."

த.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மிகுந்த கோபம் வந்து விட்டது. என் தோள்களில் ஓங்கி அறைந்தார். என் சட்டையை பிடித்து இழுத்து என்னை எழ வைத்தார். "போ. போய் அங்க உட்காரு." என்னை பிடித்து வெளி அறைக்குத் தர தரவென இழுத்துத் தள்ளினார். இரண்டு அறைகளுக்கும் இடையிலான நிலைப்படியில் நின்று கொண்டார். "யோவ். லூஸாயா நீ. சரியான மென்ட்டல் கேசு மாரி பேசிக்கிட்டு இருக்க?" என் தம்பியிடம் திரும்பி, "என்னயா இன்னக்குதான் இவன் இப்படியா? இல்ல எப்போதுமே இப்படித்தானா?" என்றார். அதன் பிறகு மீண்டும் தன் மேஜைக்கு என்னை அழைத்தார். "வாய்யா. வந்து உட்காரு. என்னய்யா? உங்கூட பெரிய தல வலியா இருக்கு.!" மீண்டும் பேச்சு வார்த்தையை தொடங்கினார். அது மீண்டும் அரை மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்தது.

"ரூல்ஸ் தெரியாம பேசிக்கிட்டு இருக்க. சிவில் கேசுக்கெல்லாம் ரெசீது கொடுக்கக் கூடாதுய்யா" என்றார்.

"சார் என்ன சார் சொல்றீங்க? என்ன கொன்றுவேன்னு நாலு பேரு வந்து மிரட்டியிருக்காங்க. என் டெலிஃபோன் வயர கட் பண்ணியிருக்காங்க. இது கிரிமினல் இல்லையா?" என்றேன்.

"இங்க பாரு. கொம்ப விட்டுட்டு தும்ப பிடிக்கக் கூடாது. பிரச்சன எங்க ஆரம்பிச்சுது?"

"தண்ணில"

"அது சிவிலா? கிரிமினலா?"

"அது சிவில் தான் சார்... ஆனா .."

"சொன்னா புரிஞ்சுக்கயா. இதுக்கெல்லாம் ரெசீது கொடுக்க முடியாதுய்யா"

இறுதியாக, "அவங்க மேல ஆக்ஷன் எடுக்காட்டி கூட பரவால்ல. எனக்கு ரசீது மட்டுமாவது தாங்க சார்" என்றேன்.

"யோவ் உன்ன என்னால சமாளிக்க முடியாது. போ. போய் இன்ஸ்பெக்ட்டருகிட்ட நீயே பேசிக்க. அவரு கொடுக்க சொன்னா, நான் கொடுக்குறேன்" என்றார்.

ஆய்வாளரிடம் சென்றேன். அவர் நூறு பேர் மலம் கலந்த நீரில் குளிப்பது பற்றியோ, எனக்கு வந்த கொலை மிரட்டல் பற்றியோ, துண்டிக்கப் பட்ட என் தொலைப்பேசியை பற்றியோ எல்லாம் கேட்காமல், என் தாடியைப் பற்றியும், நான் அணிந்திருக்கும் துளசி மாலைப் பற்றியும் விசாரித்தார். பின்னர் ஒரு பாக்கெட் மிக்ஸர் அன்பளித்தார். கிளம்பி காரில் சென்று அமர்ந்து கொண்டார்.

நான் பின் தொடர்ந்து சென்று ரசீது கேட்டேன். உடனே காரில் இருந்து இறங்கினார். "அக்னாலஜ்மெண்ட் கேக்குறாங்க. அது அவங்க உரிம. நம்ம நம்ம ரூல்ஸ் படி தானே செய்ய முடியும். இவங்களுக்கு நாப்பத்தியொன்னுல புக் பண்ணிரு. இல்ல இல்ல 75 ல ஒரு கேஸ் புக் பண்ணிரு." என்னிடம் திரும்பி, "நீங்க ரெண்டு பேரும் கோர்ட்டுல ஒரு எட்நூறு ரூபா, ஃபைன் கட்ட வேண்டி வரும். பாத்துக்குங்க. சப்- இன்ஸ்பெக்டர் உங்களுக்கு போட்டுத் தருவார். போங்க" என்றவர் காரில் ஏறி விரைந்தார்.

மீண்டும் திருவாளர். ராதாகிருஷ்ணரிடம் தஞ்சம் அடைந்தேன். அவர் மீண்டும் ரசீது கொடுக்க முடியாதென்றார். அதன் பிறகும் பேச்சு வார்த்தை சிறிது நேரம் தொடர்ந்தது. பின்னர், "யோவ் நீ வேலைக்கு ஆக மாட்ட, உங்கப்பாகிட்ட நான் பேசுறேன். உங்க அப்பா நம்பர் சொல்லு."

எனக்கும் அவர் வேலைக்கு ஆக மாட்டார் என்பது புரிந்தது. இரவு ஒன்பதரை மணிக்கு அப்பாவுக்கு தொலைபேசியில் நானும் என் தம்பியும் காவல் நிலையத்தில் இருக்கிறோம் என்றால் அவர் பயப்படக் கூடும். அம்மாவும் பயப்படக் கூடும். "அப்பாகிட்ட பேச வேணாம் இருங்க" என்றேன். என் கைப் பேசி வேறு அவரிடம் தான் இருந்தது. மதியமே அதை வாங்கி ஆஃப் செய்து வைத்துவிட்டார்கள். கொஞ்ச்ம நேரம் மௌனமாக இருந்தேன். ராதாகிருஷ்ணன் மீண்டும், "யோவ் இப்ப நீ எழுதி கொடுக்கிறியா இல்லயா யா?" என்றார்.

"சரி எழுதி கொடுக்கிறேன்" என்றேன்.

நாராயணனிடம் எந்த தகராறும் வைத்துக் கொள்ள மாட்டோம் என்றும், மேன்ஷனை ஜூன் முப்பதுக்குள் காலி செய்து விடுவதாகவும் எழுதிக் கொடுத்தோம்.

காவல் நிலையத்தை விட்டு வெளியேறிய பொழுது மணி ஒன்பதரை இருக்கும்.

அன்வரும் குமரேஷும் எங்களுக்காக வெளியே காத்திருந்தார்கள். அவர்களோடு உணவு அருந்திவிட்டு தூங்கச் சென்றொம்.

வெள்ளை நிற முகத்தோடு குழுலூதும் நிலையில் கிருஷ்ணர் நின்றிருந்தார். அவரை கோக்கி நகர முயற்சித்தேன். மொட்டை மாடி எங்கும் தூய நீர் நிரம்பியது. அதில் என்னை நான் அமிழ்த்தினேன். அந்த நீர் என்னை புனிதப் படுத்தியது. கண் விழித்த பொழுது மணி அதிகாலை நான்கு. எனக்கு அப்பொழுது தோன்றிய முதல் எண்ணம், இதை இப்படியே விடக் கூடாது என்பது தான்.

வாழ்க்கையில் எவ்வளவோ அவமானங்களை சந்தித்திருக்கிறேன். போலீஸிடம் வாங்கிய இரண்டு அறைகளால் நான் எந்த விததிலும் குறைந்து விட போவதில்லை. என் மனதிலிருந்த கேள்வி படிதவனாகிய என்னிடமே இவ்வளவு அழிச்சாட்டியம் செய்யும் காவலர்கள் படிக்காத பாமரர்களிடம் என்னவெல்லாம் செய்ய மாட்டார்கள். ஒரு தவறை நாம் கண்டு கொள்ளாமல் விடும் பொழுது, அது தவறு செய்பவர்களை மேலும் மேலும் ஊக்குவிக்கும் செயலாகத் தான் அமைகிறது. என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாக தெரியாவிட்டாலும் ஏதாவது செய்தாக வேண்டும் என்பதில் தெளிவானேன்.

உடனே என் தம்பியை எழுப்பினேன், அன்வரையும் குமரேஷையும் என் அறைக்கு அழைத்தேன். அன்று மீண்டும் காவல் நிலையம் சென்று என் புகாருக்கான ரசீது கேட்க வேண்டும் என்று அவர்களிடம் சொன்னேன். இந்த முறை வக்கீலோடு செல்லலாம் என்று சொன்னேன். மற்ற மூவரும் இதற்கு சம்மதித்தார்கள்.

அன்று வக்கீலை சந்தித்த பொழுது, மீண்டும் அதே காவல் நிலையம் சென்று புகார் செய்வதை விட காவல் துறை ஆணையரிடம் புகார் செய்யலாம் என அறிவுரை சொன்னார்கள்.

இதற்கிடையில் என் தம்பி எழுத்தாளர் திரு.ஞாநி அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் செய்தான். அவர் தன் சக பத்திரிக்கையாளர் ஒருவரை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த பத்திரிக்கையாளர் எங்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரச்சனையைப் பற்றி தெரிந்து கொண்டார். அன்றிலிருந்து இன்றுவரை எங்களுக்கு ஒரு மானசீக தூணாகவே அவர் திகழ்கிறார். நான் அவரிடம் காவல் துறை தலைமை ஆணையரை சந்தித்து புகார் செய்ய முடிவு செய்திருப்பதுப் பற்றி கூறினேன். "அது மட்டும் பத்தாது இவனுங்கள உடனே மீடியால எக்ஸ்போஸ் பண்ணிரலாம்" என்றார். காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுக்கும் பொழுது புகாரின் பிரதிகள் சிலவற்ற்றை கொண்டு வரச் சொன்னார். நிருபர்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்தார்.

ஜூன் பத்தாம் தேதி நான் எங்கள் வக்கீல் வெண்ணிலாவுடன் ஆணையரை சந்திக்கச் சென்றேன்.

புகாரை கேட்கும் ஆய்வாளர், "என்ன தம்பி, போலீஸ் மேலயே கம்ப்ளெயின் கொண்டு வந்திருக்க? நாளைக்கு அவன் உன் மேல பொய்க் கேஸ் போட்டு உள்ள தள்ளுனா என்ன பண்ணுவ? இதெல்லாம் வேலைக்கு ஆகாது தம்பி" என்றார்.

"என்ன ஆனாலும் கடைசி வரைக்கும் ஃபேஸ் பண்ண தயாரா இருக்கேன் சார்" என்றேன்.

வக்கீல், அவர்கள் துறை என்பதால் நம்மை குழப்ப ஏதாவது சொல்வார்கள், அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம், நேராக ஆணையரிடம் பேசிக் கொள்ளலாம் என்றார். ஆணையரை சந்திக்க சென்ற பொழுது எல்லாரையும் இரண்டு மூன்று பேராக விட்டவர்கள் என்னை மட்டும் தனியாகத் தான் போக வேண்டும் என்று வக்கீலை உள்ளே வர விடாமல் தடுத்துவிட்டார்கள். உள்ளே சென்ற பிறகும் ஆணையரிடம் என் புகாரை விளக்கும் பொழுது நாராயணன் என்னை மிரட்டியதோடு கதையை முடித்துவிட்டார்கள். "மிரட்டுறாங்களா?" என்று ஆணையர் திரு.ராஜேந்திரன் என்னை பார்த்து கேட்டார்." நான் உடனே, "அத போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லப் போனா அங்க இன்ஸ்பெக்டரும் சப்- இன்ஸ்பெக்டரும் என்னயும் என் தம்பியும் அடிச்சு ஒன்பது மணி நேரம் உட்கார வெச்சி வர 30ந்த் தேதி காலி பண்ண சொல்லி எழுதி வாங்கிட்டாங்க சார்" என்றேன்.

"இத அந்த ஸ்டேஷனுக்கு பார்வர்ட் பண்ணாதீங்க. நுங்கம்பாக்கம் ஏ.ஸி யை நேரடியா என்னனு பாக்கச் சொல்லுங்க" என்றார். அதில் முத்திரை பதித்தார்கள். கையெழுத்திட்டார். என்னை சிறிது நேரம் காத்திருக்க சொல்லி, பின் அழைத்தார்கள். மக்கள் தொடர்பு அலுவலர் தொலைப் பேசியில் துணை ஆணையர் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு புகாரைப் பற்றி கூறி, உடனே விசாரிக்கச் சொன்னார்.

மறு நாள் ஆங்கில நாளிதழ் டெக்கான் க்ரானிக்கலில் செய்தி வெளியானது. (11--6-2009.)

அதன் பிறகு ஜூன் 25 வரை எந்த விசாரணையும் நடை பெறவில்லை. ஜூன் 26 என் தம்பியும் பாலா என்கிற நண்பரும் மீண்டும் காவல் துறை ஆணையரை சந்தித்து புகார் செய்தார்கள். ஆணையர், "இந்த புகார் ஏற்கனவே வந்ததே என்றாராம். மீண்டும் துணை ஆணையரை விசாரணை செய்யும்படி உதரவிட்டார்.

அன்று மாலை நுங்கம்பாக்கம் துணை ஆணையர் எங்கள் மேன்ஷனுக்கு வந்தார். உடன் ஆய்வாளர் முனைவர். திரு.செல்வக்குமாரும் வந்திருந்தார்.

நுங்கம்பாக்கம் துணை ஆணையர் விசாரணை செய்ய வந்தாரா அல்லது தேர்தல் நடத்த வந்தாரா என்பதில் நான் இன்னும் குழப்பத்தில் தான் உள்ளேன். காரணம் நீரில் மனித மலம் கலந்ததற்கான சான்றிதழ் என்னிடம் இருந்தது. அது மட்டும் அல்லாமல் தரை தளத்திலேயே சுமார் பத்து பேர் நீர் சரியில்லை என்று சொல்லிவிட்டார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு நாராயணின் மகனை மட்டும் அழைத்துக் கொண்டு மேன்ஷனில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் சென்று நீரின் தரம் பற்றி கேட்டறிந்தார். புகாரை கொடுத்த நானும் புகாரை மறுக்கும் நாராயணின் மகனும் இருக்கும் பொழுது என்னை கீழேயே இருக்கச் செய்துவிட்டு நாராயணின் மகனை மட்டும் அழைத்துக் கொண்டு ஒவ்வொரு அறையாக செல்வது எந்த விதத்தில் நடுநிலையான விசாரணை என்பது எனக்கு புரியவில்லை.

நாராயணன் அளவுக்கு அதிகமாக குடித்திருந்தார். முன்னுக்குப் பின் முரணாக துணை ஆணையரின் கேள்விக்கு பதிலளித்தார். அந்த முரண் பாடுகளைக் கூட ஒரு புன்சிரிப்புடன் ரசித்த படி, "பாத்து பண்ணிக் கொடுங்க என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்"

என்னை மிரட்டியது பற்றியோ, என் தொலைப் பேசி துண்டிக்கப் பட்டது பற்றியோ எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

மறுநாள் காலை சுமார் பத்து மணியளவில் நாராயணன் மேன்ஷனை எல்லோரும் ஜூலை பதினைந்துக்குள் காலி செய்து விட வேண்டும் என ஒவ்வொரு அறைக்கும் நோட்டீஸ் கொடுத்தார். நீர், மின்சாரம் ஆகியவற்றை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தால் இந்த அவசர முடிவு என குறிப்பிட்டுருந்தார். அது வரைக்கும் யாருக்கும் நீர் வழங்க முடியாது என்றும் கூறியிருந்தார். மேன்ஷனில் உள்ள அனைவரும் அவரை இது பற்றி அணுகிய பொழுது. ஒன்று நீங்கள் அனைவரும் காலி செய்ய வேண்டும் இல்லையெனில் அறை எண் 3,5,8 மற்றும் 11ல் இருப்பவர்கள் காலி செய்ய வேண்டும் எனக் கூறினார். மீண்டும் காவல் நிலையம் சென்றொம்.

காவல் நிலையத்தில் நான், என் தம்பி, குமரேஷ், அன்வர், பாலா ஆகிய ஐவரும் காலி செய்ய வேண்டும் என்று நாராயணின் மகன் தலைமையில் பதினைந்து மேன்ஷன் வாசிகள் புகார் செய்தார்கள். காவலர் திரு.வெங்கடாசலம் காரணம் கேட்டார். நாங்கள் நீரின் தரம் பற்றி சர்ச்சை செய்வதால் தங்கள் அனைவருக்கும் நீர் வழங்குவதை நாராயணன் நிறுத்திவிட்டதாகவும். நாங்கள் காலி செய்துவிட்டால் தங்களுக்கு உடனே நீர் கிடைக்கும் என்று காரணம் சொன்னார்கள். திரு.வெகடாசலம் நாராயணனின் மகனிடம் அவர்களுக்கு நீர் வழங்காதது பற்றி காரணம் கேட்டார்.

"டேங்க் கழுவணும் சார். அஸிஸ்டெண்ட் கமிஷனர் உத்தரவு" என்றான்.

"என்னா பதினஞ்சு நாளா டேங்க் கழுவற?"

"இல்ல சார் இன்னிக்கு மட்டும் தான்"

"அப்ப நாளலருந்து தண்ணி தருவல்ல"

"தருவோம் சார்"

வெங்கடாசலம் அந்த பதினைந்து பேரிடமும், "வீட்ட காலி பண்ண வக்கறது போலீஸ் வேல கிடையாது. அதெல்லாம் நீங்க கோர்ட்டுல பாத்துக்குங்க" என்றார்.

நாராயாணனின் மகனிடம் "தண்ணிய கட் பண்றது, கரண்ட கட் பண்றது இதெல்லாம் பண்ணாத" என்றார். அவனும் சம்மதித்தான்.

நாராயணன் அவர்களின் அதிரடி நடவடிக்கை தோல்வியடைந்தது.

மீண்டும் நுகர்வோர் பாதுகாப்பு துறையில் திரு.ஷண்முகம் அவர்களிடம் நடந்தவற்றைக் கூறினேன். இந்த முறை நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் திரு.ராஜாராமன் அவர்களை நேரடியாக சந்தித்து நடந்தவற்றிக் கூறச் சொன்னார். திரு.ராஜாராமன் அவர்கள் நுகர்வோர் நிலை இவ்வளவு மோசமாக இருப்பது குறித்து வருத்தம் தெரிவித்தார். "அத க்ளீன் பண்ணா என்ன? இவனுக்கெல்லாம் நாலு கேஸ் போட்டு அலைய வெச்சாத்தான் புத்தி வரும். ஏற்கனவே நான் அனுப்புன லெட்டர வேற திருப்பி அனுப்பிச்சுருக்கான். செக்ஷன் 12 டி ல நான் ஒரு கேஸ் போட்றேன். தனிப் பட்ட முறையில நீங்க பாதிக்கப் பட்டதால ஒரு லட்சம் கேட்டு நீங்க ஒரு கேஸ் போடுங்க" என்றார். காவல் ஆணையருக்கும் ஒரு பரிந்துரை கடிதம் எழுதி என்னை மீண்டும் அவரை சந்திக்கும்படி சொன்னார்.

மறுநாள் ஜூலை ஒன்றாம் தேதி மீண்டும் காவல் துறை ஆணையரை சந்தித்து புகார் செய்தேன். அவர் சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்தார். அதுபற்றி கூற நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்குச் சென்றேன். அங்கு திரு.ஷண்முகம், "உங்க ஓனர் எங்க ஆளு கொண்டு போன லெட்டர வாங்கிட்டார். இல்லனா கதவுல ஒட்டியிருப்போம். இன்னும் பதினஞ்சு நாள் கழிச்சு கேஸ் ஃபைல் பண்ணிரலாம்" என்றார்.

ஜூலை மூன்றாம் தேதி எனக்கு ஒரு பதிவுத் தபால் வந்தது. அது ஜூன் ஐந்தாம் தேதி எங்கள் மேன்ஷனுக்கு வந்து தன் பெயரை சொல்ல மறுத்த அலுவலரிடம் இருந்து வந்திருந்தது. அவர் சரவணம் மேன்ஷனின் நீரில் மனித மலக் கலவையில்லை என்றும், அது குடிக்க தகுந்தது என்றும் சான்றிதழ் வழங்கியிருந்தார். கையால் தொடக் கூட தகுதியற்ற நீரை குடிக்கத் தகுந்தது என்று சான்றிதழ் வழங்கிய கடமையுணர்ச்சியை என்னவென்று புகழ்வது? இதைப் பற்றி திரு.ஷண்முகம் அவர்களிடம் கூறினேன். அவர் அந்த சுகாதார அதிகாரி மீதும் ஒரு வழக்கு பதிவு செய்வதாக கூறினார்.

இதற்கிடையில் எங்கள் பத்திரிக்கையாள நண்பர் ஜூனியர் விகடன் நிருபர் திரு.பாலச்சந்திரன் அவர்களிடம் இது பற்றி சொல்லச் சொன்னார். நான் அவரை விகடன் அலுவலகத்தில் சந்தித்து நடந்தவற்றை கூறினேன். ஜூலை எட்டாம் தேதியிட்ட ஜூனியர் விகடனில் "நூறு மில்லி தண்ணீரில் முப்பத்தாறு மில்லி அசிங்கம்" என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது.

மேன்ஷனில் உள்ள நீர் சரியில்லாததால் அடி குழாயிலிருந்து குடிநீர் வாரியம் வழங்கும் நீரை பயன்படுத்தி வந்தோம். ஜூன் ஐந்தாம் தேதி அதில் மண் போடப்பட்டிருந்தது. இது குறித்து காவல் துறைக்கு எஸ்.எம்.எஸ் மூலமாக புகார் செய்தேன். அதற்கு எந்த பதிலும் இல்லை.

அன்வர் ஏழாம் தேதி மீண்டும் எண் நூறை அழைத்து புகார் செய்தார். அவர்கள் காவல் நிலையத்தில் ஒரு புகார் செய்யச் சொன்னார்கள். அங்கே புகாரை திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். எனினும் காவலர் ஒருவரை அனுப்பினார்கள்.காவலர் திரு வெகடாச்சலம் நாங்கள் புகார் செய்ததற்காக மிகவும் கடிந்து கொண்டார். மேலும் அடிகுழாயில் யார் கல்லும் மண்ணும் போட்டார்கள் என்பது பற்றி எந்த விசாரணையும் செய்யாமல் எங்களை நீதி மன்றத்தை அணுகும் படி கூறிவிட்டு சென்று விட்டார். அன்வர் காவல் நிலையத்தில் புகார் செய்த போதும், வெங்கடாச்சலம் எங்கள் மேனஷனில் விசாரணை நடத்திய போதும் நிகழ்ந்த உரையாடலை பதிவு செய்திருக்கிறோம்.

மாநில மனித உரிமை நீதிமன்றத்தில் ஜூன் பதினொன்றாம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளோம்.

குற்றவியல் நீதி மன்றத்திலும் என்னை மிரட்டியது குறித்து வழக்கு பதிவு செய்யவுள்ளோம்.

நுகர்வோர் நீதி மன்றத்திலும் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்யவுள்ளோம்.

திரு. நாராயணன் ஆரம்பத்திலேயே எங்கள் புகாருக்கு செவி சாய்த்திருந்தால், ஒரு பத்தாயிரம் ரூபாய் செல்வில் ஒரே நாளில் அல்லது அதிக பட்சம் மூன்று நாட்களில் இந்த பிரச்சனை சுமூகமாக தீர்ந்திருக்கும். அல்லது நான் காவல் நிலயம் சென்ற பொழுதாவது ஆய்வாளரோ துணை ஆய்வாளரோ தங்கள் கடமையை முறையாக செய்திருந்தால் அப்பொழுதாவது முடிந்திருக்கும். ஆனால் நாராயணன் என்கிற ஒரே ஒரு பணக்காரரின் பிடிவாதத்தாலும் சில அதிகாரிகளின் சோம்பேறித்தனம் மற்றும் பொருளாசையாலும் இந்தப் பிரச்சனை கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக வளர்ந்து கொண்டே செல்கிறது.

இன்னும் எவ்வளவு தூரம் வளர்கிறதோ...?அடிகுழாயில் கல் போட்டு அதை சிதைத்தது குறித்து அன்வர் புகார் செய்ய சென்ற பொழுது F5 காவல் நிலையத்தில் நடந்த உரையாடல்.புகாரை முன்னிட்டு வெங்கடாசலம் என்கிற காவலர் செய்த விசாரணை.