கல்லூரி நாட்களில் நான் அசைவ உணவுகளை விரும்பி உண்பவனாக இருந்தேன். சாமி திரைப்படத்தில் வரும் வசனமொன்றில் சொல்வது போல வானத்தில் திரிவதில் விமானத்தையும், கடலில் திரிவதில் கப்பலையும் தவிர அனைத்தையும் சுவைத்து வந்தேன். அப்படி சுவைக்க முடியாதவற்றை 'என்னிக்காவது ஒரு நாள் ஒரு வெட்டு வெட்டனும்' பட்டியலில் வைத்திருந்தேன்.
ஒரு நாள் என் அம்மா என்னை கோழிக் கறி வாங்கி வரச் சொல்லி அனுப்பினார்கள். கடையில் ஜீவனொன்று தன் வாழ்வுக்காக தன்னால் முடிந்த வரை சிறகுகளை படபடத்து கத்திக் கதறி போராடி கடைசியில் இயலாமையொடு மெல்ல மெல்ல உயிரைப் பறிகொடுத்த அந்தக் காட்சி எனக்குள் ஒரு கேள்வியை எழுப்பியது.
"நாம் உண்ணும் இந்த ஜீவன்கள், நாம் அவற்றைக் கொல்லும் பொழுது தங்களை விட்டு விடும்படி வார்த்தைகளற்று கெஞ்சுகின்றன. நாம் அந்த கதறலை புறக்கணிக்கிறோம். நாம் ஏன் வாழ வேண்டும் என்கிற அதன் வேட்கையை மதித்து, வார்த்தைகளற்ற அதன் கதறலை கருத்தில் கொள்ளக் கூடாது?"
ஒரு இளிச்ச வாயன் நம் கையில் சிக்கும் பொழுது அவனை எதுவும் செய்யாமல் 'பொழச்சு போ' என்று விடும் பொழுது ஒரு பெருமிதம் கலந்த திருப்தி ஏற்படுமே, அந்த திருப்தியை சுவைக்க வேண்டும் என்கிற ஆசையும் அந்தக் கேள்வியுடன் தோன்றியது.
நான் இது பற்றி சில அசைவ விரும்பிகளிடம் பேசிய பொழுது அவர்கள் பலவிதமான எதிர்மறை கருத்துக்களை முன்வைத்தார்கள்.
"சைவ உணவு மட்டும் கொல்லாமல் கிடைக்கிறதா? ஏன் தாவரங்களில் உயிர் இல்லையா? "
"என் கேள்வி கொல்வதைப் பற்றியதல்ல. கொல்லாமையை தீவிரமாக கடைப் பிடிப்பதாயின் பல் விளக்கக் கூட முடியாது என்பது எனக்குத் தெரியும்."
"அந்த ஜீவன்கள் மனிதனுக்கு உணவாக வேண்டும் என்பதற்காகவே படைக்கப்பட்டவை. அவற்றை உண்பது நம் உரிமை."
"அவற்றை உண்ணும் உரிமை நமக்கு இருக்கலாம். அந்த உரிமை எடுத்துக் கொண்டு தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயம் என்ன?"
"சைவ உணவு உண்பது பாவம் என்றால் சிங்கம் புலி இவற்றுக்கெல்லாம் என்ன உணவை இறைவன் படைத்தார்?"
"என் கேள்வி பாவம் புண்ணியம் பற்றியதல்ல. இரண்டாவது, சிங்கம் புலி இவற்றுக்கு தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பம் இல்லை. தங்கள் செயல்களை மறுபரிசீலனை செய்யும் திறனும் இல்லை."
இந்த எதிர்மறை கருத்துக்களையெல்லாம் மிஞ்சும் விதமாக வந்தது அடுத்த ஒரு கருத்து.
"எல்லாரும் சைவ உணவுக்கு மாறிவிட்டால் ஆடு மாடுகளின் எண்ணிக்கை அதிகமாகி இயற்கையின் சமச்சீர் கெடும்"
ஆஹா! என்ன ஒரு பொறுப்புணார்ச்சி!
இருக்கிற மரத்தையெல்லாம் வெட்டி வெட்டி, மழையே வராதபடி செய்துவிட்டோம். ஆற்று மணலையெல்லாம் திருடி விற்று, விற்பவர்களிடம் வாங்கி வீடு கட்டி ஆறுகளை எல்லாம் வரலாறுகளாக்கி விட்டோம். இயற்கை, கலாச்சாரம், சினிமா, அரசியல், நிர்வாகம் என்ற எல்லாமே நம் பொறுப்பற்ற தன்மையாலயே கெட்டுக் குட்டிச் சுவாராகியிருக்கும் நிலையில் நம் அசைவ விரும்பி நண்பருக்கு இயற்கையின் சமச் சீரை காப்பாற்ற வேண்டும் என்கிற வேட்கை அசைவ உணவு உண்பதில் மட்டும் அளவற்று பொங்குகிறது.
எனக்கு அப்பொழுது ஒன்று புரிந்தது. இது பற்றியெல்லாம் பலரிடமும் கலந்துரையாடிக் கொண்டிருக்க தேவையில்லை.
இது தனிப்பட்ட மனிதர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் விஷயம்.
நான் அன்று முதல் சைவ உணவு மட்டுமே உட்கொள்வதென முடிவெடுத்தேன். கொல்வது பாவம் என்பதற்காக அல்ல. கொல்லாமையை கொள்கையாக்க வேண்டும் என்பதற்காக அல்ல.
நம் கருணைக்குட்பட்ட ஒரு ஜீவனின் வாழும் வேட்கையை மதிக்க வேண்டும் என்பதற்காக. அதன் கதறலை நான் புறக்கணிக்கவில்லை என்கிற திருப்தியை என் இதயத்துக்கு வழங்க வேண்டும் என்பதற்காக.
6 comments:
நானும் கொஞ்ச காலம் சைவமாக தான் இருந்தேன். பின் அசைவத்திற்கு மாறிவிட்டேன்.
இப்பொழுதும் அசைவம் தான். ஆனால், முடிந்த வரை குறைத்துக்கொண்டுள்ளேன். சாப்பிடும் பொழுதும் குறைவாகவே சாப்பிடுகிறேன்.
http://jeeno.blogspot.com/2007/01/blog-post.html
பின்னூட்டத்திற்கும் சுட்டிக்கும் நன்றி சீனு. :)
இதே காரணத்திற்காக 1 வருடம் முன்பு அசைவம் சாப்பிடுவதை விட்டேன். இன்று வரை என் கொள்கை மாறாமல் உள்ளது. முதலில் கொள்கையா அல்லது சுவையா என்று சவாலாக இருந்தது. இப்பொழதெல்லாம் மணம் கமழும் அசைவ சாப்பாட்டை பார்த்தல் கூட என் கொள்கை மிகவும் வலு பெறுகிறது( அந்த உயிர் எந்த அளவு கஷ்ட பட்டிருக்கும் என்றே தோன்றுகிறது). அசைவம் சாப்பிடுபவர்களை பார்த்தல் கூட எனக்கு பரிதாபமாக தோன்றும்(மற்ற உயிரினை உணர முடியாதவர்களாக இருகார்களே என்று)
நான் பொதுவாக இது பற்றி அசைவம் சாபிடுபவர்கிளிடம் பேசுவது கிடையாது. காரணம், 1) அவர்கள் செய்வது சரி என்று நிருபிக்கும் சூழ்நிலைக்கு தள்ளபட்டுவிடுவர்கள் என்று. 2) நீங்கள் கூறியது போல், அனைத்து வகையான காரணங்களை எடுத்து கொண்டு சண்டைக்கு வந்து விடுவார்கள். 3) மிக சிலரே அதை பற்றி பொறுமையாக விவாதிப்பார்கள்.
அவர்களிடம் நான் கேட்பது ஒன்றே, உங்களிடம் உயிர் உள்ள கோழி ஒன்றையும் உயிர் உள்ள தக்காளியுடன் கூடிய செடியையும் கொடுத்தல் எதை உண்பிர்கள்? நீங்கள் தக்காளி என்றால், ஏன் என்று நீங்களே உணர்த்து பாருங்கள். பதில் தேவை இல்லை.
நல்ல பதிவு. வாழ்த்துகள்.
ராஜ்குமார்.
// 1) அவர்கள் செய்வது சரி என்று நிருபிக்கும் சூழ்நிலைக்கு தள்ளபட்டுவிடுவர்கள் //
பக்குவப்பட்ட ஆழ்ந்த சிந்தனை.
சைவ உணவுப் பழக்கம் என்பது உயர்ந்த வாழ்க்கை தரம். அதனால் நீங்கள் அசைவ உணவு உண்பவர்களை பார்த்து பரிதாபம் கொள்வதை புரிந்து கொள்ள முடிகிறது.
டாஸ்மாக் கடைகளின் முன்பு குடித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்க்கும் பொழுதும் எனக்கு பரிதாபமாகத் தான் இருக்கும்.
தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
//என் கேள்வி பாவம் புண்ணியம் பற்றியதல்ல. இரண்டாவது, சிங்கம் புலி இவற்றுக்கு தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பம் இல்லை. தங்கள் செயல்களை மறுபரிசீலனை செய்யும் திறனும் இல்லை//
super
Very wise decision Ramesh.
My perspective is slightly different:
http://deepakktrenewal.blogspot.com/2008/11/vegetarians-and-non-vegetarians.html
Post a Comment