Monday, July 7, 2008

ஒரு மேகத்தின் சுயசரிதம்


மனிதர்களே...

நான் மேகம்...!

தன் ஒளியால்
வானாளும் சூரியன்
என் தந்தை...!

தங்களை எல்லாம்
தாங்கிடும் பூமி
என் தாய்...!

கொடுத்து கொடுத்து
கை சிவந்த கர்ணன்
என் அண்ணன்...!

உங்களைப் போலவே
தந்தை தாய்
தழுவலில்
பிறந்தவன் நான்...!

பிறப்பெடுத்த நாள் முதலே
மெல்ல மெல்ல
மேல் எழுந்தேன்....!

இன்றோ
சிகரங்கள்
தொட்டுவிட்டேன்...!

என்
தந்தைக்கும் தாய்க்கும்
அவ்வப்போது
பிணக்கு வரும்...!

பிணக்கு வரும்
வேளையில்
எந்தை வெப்பம்
கோபமுறும்...!

ஓடிச் சென்று
போர்த்திடுவேன்...!
தாய் உடலை
காத்திடுவேன்...!

எனெக்கென்று
இடம் ஒன்றை
பிடித்ததில்லை
எப்போதும்...!

வானமெங்கும்
எனதாக்கி
வலம் வருவேன்
அப்போதும்...!

எனக்கென்று
ஒரு வடிவம்
கொண்டதில்லை
எப்போதும்...!

தங்களுக்கு
பிடித்த முகம்
தந்திடுவீர்
அப்போதும்...!

என் குருவின்
பெயர் காற்று...!

எட்டு திசையிலும்
அவர்
சுட்டும் திசையன்றி
எட்டு வைத்ததில்லை
எப்போதும்...!

மலர் தன்
பிறவிப் பயனை
பிறந்ததுமே
எட்டும்...!

உங்களில்
பிறவிப் பயன்
உழைப்பவர்க்கு
மட்டும்...!

எளியவன் என்
பிறவிப் பயனோ
மரணத்தில் தான்
கிட்டும்...!

நான் சாவதில்
என் தாய்க்குக் கூட
மகிழ்ச்சி...!

நான்
மறைவதால் அல்ல..!
தன்னோடு
இணைவதால்...!
அவள் கருவறைக்குள்
மீண்டும் நான்
புகுவதால்...!

என்
இன்னொரு அண்ணனிடம்
கண்ணபிரான்
சொன்னது போல

நான் இன்றிருந்து...
நாளை
இல்லாமல் போகிறவன்
அல்ல..!

நான்
சாஸ்வதம்...!

நேற்று இருந்தேன்....!
இன்று இருக்கிறேன்...!
நாளையும் இருப்பேன்...!

எனினும்
என்னுடைய
மரணத்திற்கு...

என் உடலை
கறுப்பாக்கி
எனக்கு நானே
இரங்கல்
சொல்வேன்..!

என் மரணம்
மழை...!

உங்களுக்கு
வரம்...!

நான் பிறந்த
மண்ணுக்கோ
உரம்...!

என் வாழ்விலும்
உங்களுக்கோர்
சேதி உண்டு...

தலை கனக்காமல்
இருக்கும் வரை
நீங்கள் இருக்குமிடம்
உயரம்...!

தலை கொஞ்சம்
கனத்து விட்டால்
பெறுவீர்
வீழ்ச்சியெனும்
துயரம்...!

2 comments:

Eswari said...

இது என்ன கற்பனை?? மேகத்திற்கு பூமியையும், வானத்தையும் தாய் தந்தை ஆக்கி இருக்கிறிர்கள்?? அவர்கள் மனிதனுக்கும், பூமியில் தோன்றிய மற்ற உயிர்களுக்கும் அல்லவா தாய் தந்தை??

உங்க அம்மா அப்பாவிற்கு இன்னொருத்தரை பிள்ளையாக ஆக்க முடியுமா? அதை அவர்கள் தான் ஏற்பார்களா?

ramesh sadasivam said...

நல்லா கவிதைய படிச்சு பாருங்க.... சூரியனையும் பூமியையும் தான் தாய் தனதை ஆக்கியிருக்கேன், வானத்தை அல்ல...அதுக்கு விளக்கமும் சொல்லியிருக்கேன்...!