
முன் குறிப்பு: மென்மையான மனம் உடையவர்கள் இந்தக் கவிதையை படிக்க வேண்டாம். சிலர் பயமாக இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
வாசகனே ...
என் பிரிய வாசகனே...
நீ தான்
நீயே தான்
இந்தக் கவிதையை படித்த பாவத்திற்காகவோ
வேறென்ன காரணத்திற்காகவோ
நாளை நீ இறக்க போகிறாய்
விபத்தாலோ...
கொலையாலோ...
நோயாலோ...
அல்லது இயற்கையாகவோ
அது நிகழப் போவது
வெகு நிச்சயம்...
மின்சாரமோ...
நெருப்போ...
மண்ணோ...
உன் உடலை
அணு அணுவாய்
அணுவாக்கி
அணுவற்றதாய்
ஆக்கும்...
அதுவரை
என்ன செய்வதாய்
உத்தேசம்?
உன்னை நம்பினோரை
இறைவனிடம்
ஒப்படை...
தந்தையிடம் போ
உயிர் கொடுத்த நெஞ்சத்தை
மனதார தழுவு
மகிழட்டும்...
தாயிடம் போ
உடல் சுமந்த வயிற்றை
உளமார தொடு
குளிரட்டும்...
பகைமை மறந்து
மனிதர்களை தழுவு
யாவரும் உனக்காக
கண்ணீர் சிந்தட்டும்...
மாங்கன்றோ
இளங்கன்றோ
நட்டு வை
உன் பேர் சொல்லட்டும்...
கடமையை செய்கையில்
உயிர் துறப்பதே உத்தமம்
தொழிலிடம் செல்...
பயன்விடுத்து
தொழில் நடத்து...
அந்த நாளை
நாளையோ
வருடங்கள் கழிந்தோ
வரலாம்....
அதனாலென்ன...?
அப்படியே
வாழ்...!