சரவணம் மேன்ஷன் நீரின் தரம் மீண்டும் பயன்படுத்த தகுதியானதாக உயர்த்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
நடந்தது இது தான்.
சுகாதார துறையினர் நீரின் தரம் உயரும் முன்பே நீரின் தரம் நன்றாக இருப்பதாக திரு.நாராயணன் அவர்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்கியிருந்தார்கள்.
அதை திரு. டிராஃபிக் ராமசாமி அவர்களிடம் கொடுத்தேன். அவர் அது குறித்து சுகாதார அதிகாரியிடம் விசாரித்தார். திரு. டிராஃபிக் ராமசாமி அவர்களின் மீது இருக்கும் பயத்தின் காரணமாக, நான் கொடுத்த நீரை உண்மையாக பரிசோதித்து மனித மலம் கலந்திருப்பதாக சான்றிதழ் வழங்கினார்கள். அதை நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் திரு.ராஜாராமன் அவர்களிடம் கொடுத்தேன். அவர் சுகாதார துறையின் இணை ஆணையர் திருமதி. ஜோதிநிர்மலா அவர்களிடம் இது குறித்து பேசினார். சான்றிதழின் மேல் கைப்பட பிரச்சனையை விவரித்து எழுதியும் தந்தார்.
திரு.ஜோதிநிர்மலா அவர்கள் கூடுதல் சுகாதார அதிகாரி திரு.கிருஷ்ணன் அவர்களிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி ஆணைப் பிறப்பித்தார்.
திரு.கிருஷ்ணன் அவர்கள் 14.08.2009 வெள்ளியன்று எங்கள் மேன்ஷனுக்கு வந்தார். என்னை அழைத்து என்ன புகார் என்றும் நான் என்ன நடவடிக்கை எதிர் பார்க்கிறேன் என்றும் கேட்டார்.
நான், "கசிவு அடைக்கப்பட வேண்டும். அப்படி முடியாவிட்டால் அந்த போரை அடைக்க வேண்டும். குழாய்களை மாற்ற வேண்டும் என்றேன்"
ஆனால் அவர், "நீங்கள் ஏன் காலி செய்துவிட்டு வேறு இடம் தேடக் கூடாது என்று கேட்டார்." என் காரணங்களை சொன்னேன்.
உடனே அவர் சுகாதார அதிகாரியிடம் திரும்பி, "நூறு பேரையும் காலி செய்ய சொல்லி நோட்டீஸ் கொடுங்க. ரமேஷ் கொடுத்த புகார் அடிப்படையில் இந்த நடவடிக்கைனு ஓனருக்கிட்ட சொல்லிடுங்க" என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். (இந்த உரையாடலை ஒலிப்பதிவு செய்திருக்கிறேன்.)
அவரும் நான் அவரை இவ்வளவு தூரம் வர வைத்து விட்டேன் என்கிற கோபத்தில் பேசுகிறார் என்பது புரிந்தது. சரி அதையாவது செய்தால் மகிழ்ச்சி தான் என நினைத்துக் கொண்டோம்.
எனினும் மீண்டும் ஒருமுறை திருமதி.ஜோதிநிர்மலா அவர்களை சந்தித்து இது குறித்து விளக்கினால் நல்லதென்று எனக்குப் பட்டது. 18.08.2009 செவ்வாயன்று மீண்டும் அவர்களை சந்தித்தேன். இம்முறை சுகாதார ஆய்வாளர் வழங்கிய போலி சான்றிதழையும் அவர்களிடம் காட்டினேன். திரு.கிருஷ்ணன் அவர்கள் சொல்வது போல அனைவரையும் காலி செய்ய சொல்வது தேவையில்லை என்றும், உரிமையாளரை கசிவை அடைக்க ஆவன செய்யவைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டேன். திரு.ஜோதிநிர்மலா அவர்கள் பிரச்சனையை புரிந்து கொண்டார். என்னை சிறிது நேரம் வெளியே காத்திருக்க செய்தார்.
சிறிது நேரத்தில் உதவி சுகாதார அதிகாரி மருத்துவர். ரேவதி அவர்கள் என்னை அழைத்துப் பேசினார்.
"நா உங்க மேன்ஷனுக்கு வந்திருந்தேன். அந்த தண்ணீய நானே எடுத்து வந்து லேப்ல கொடுத்தேன். எங்க லேப்ல தண்ணீ நல்லாருக்குனு சொல்றாங்க" என்றார்.
நான், "மேடம் அப்படியிருக்க வாய்ப்பே இல்ல. நாங்க தினமும் அந்த தண்ணீய கையில தொடுறோம். எங்களுக்கு நல்லா தெரியும் மேடம். நீங்க டெஸ்ட் பண்ணவே வேண்டாம். கொஞ்சம் தண்ணீ ய கையில பட வெச்சு அஞ்சு நிமிஷம் கழிச்சு முகர்ந்து பாருங்க" என்றேன்.
அவர் புரிந்து கொண்டார். "நான் அது தான் அந்த பம்ப சீல் வெச்சுரலாம்னு சொன்னேன். எங்க சீனியர் தான் எவிக்ஷன் நோட்டீஸ் கொடுக்கலாம்னு சொன்னார். சீனியர் சொல்றப்ப நான் என்ன சொல்றதுனு விட்டுட்டேன்" என்றார்.
நான், "மேடம் நீங்க கொஞ்சம் பேசிப் பாருங்க. எல்லாரையும் காலி பண்ணவைக்கிறது சரியான தீர்வாகாது. உங்க சீனியர் ஒத்துக்கலன்னா ஜோதிநிர்மலா மேடம் கிட்ட பேசிப் பாருங்க புரிஞ்சுப்பாங்க என்றேன்."
மருத்துவர் ரேவதி, "சரி நான் பேசிப் பாக்குறேன் என்றார்"
கடந்த வெள்ளியன்று வேறு வேலை நிமித்தமாக வேளியே சென்று மாலை சுமார் ஆறு மணியளவில் விடுதிக்கு திரும்பினேன்.
குடிநீர் வாரிய நீர் சேமிக்கப் படும் தொட்டி சுத்தம் செய்யப் பட்டிருந்தது தெரிந்தது.
சம்மந்தப்பட்ட பம்பின் நிலையை காண சென்றேன். அங்கே திரு.நாராயணன் அவர்கள் சில வேலையாட்கள் மத்தியில் படிக்கட்டில் அமர்ந்திருந்தார். வேலையாட்கள் மூன்று பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
அடுத்த நாளே நீரின் துர்நாற்றம் 99% குறைந்திருந்தது. ஆச்சர்யம் ஆனால் உண்மை என்பது போல கடந்த ஒரு வாரமாக நீரின் தரம் படிப்படியாக உயர்ந்து பயன்படுத்த தகுதியானதாகிவிட்டது.
நன்றி சொல் படலம்.
மூன்றே மணி நேரத்தில் சரியாகியிருக்க வேண்டிய பிரச்சனை. பத்து மாத போராட்டத்திற்கு பிறகு நிறைவேறியது. இந்த போராட்டத்தில் பல நல்ல உள்ளங்கள் உதவியிருக்கிறார்கள். அனைவருக்கும் தனித் தனியாக நன்றி சொல்ல விரும்புகிறேன்.
சம்பவ அடிப்படையில் ஒவ்வொருவராக நன்றி சொல்கிறேன்.
முதல் முதலில் எங்களை நுகர்வோர் பாதுகாப்புத் துறையை அணுகும் படி அறிவுரை செய்த திருமதி. சந்த்ரிகா அவர்கள். ( தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் இளநிலை நீர் ஆய்வாளர்.) இவர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு நுகர்வோர் பாதுகாப்பு துறையினரிடம் மீண்டும் பேசியிருக்கிறார்.
அதன்பிறகு நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரி. திரு சண்முகவேல் அவர்களும் அங்கு செயல் படும் இன்னும் சில அதிகாரிகளும். புகாரோடு சென்ற பொழுது ஆறுதல் அளிக்கும் விதமாக பேசி தேவையான நடவடிக்கை செய்து தந்தார்கள்.
நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் ஆணையர் திரு.ராஜாராமன் இ.ஆ.ப அவர்கள். முதல் முறை நாராயணன் அவர்களுக்கு கடிதம் அனுப்பி அது திரும்பி வந்ததால் நேரடியாக ஒருவரை அனுப்பி கடிதம் கொடுத்து, அதற்கும் பலனில்லாததால், வழக்கு பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்து, காவல் ஆணையர் மற்றும் சுகாதார இணை ஆணையர் ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் கைப்பட எழுதி என்று இவர் ஆற்றிய சேவை எண்ணி மகிழ வைப்பது.
எழுத்தாளர் திரு.ஞாநி அவர்கள். என் தம்பி அவருக்கு அனுப்பிய மின்னஞ்சலுக்கு உடனே பதில் தந்தார். விகடன் பத்திரிக்கையை சேர்ந்த திரு.பாரதிதமிழன் அவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
திரு. பாரதிதமிழன் அவர்கள். எங்களுக்கு மிகப் பெரிய பக்க பலமாக இருந்தார். அவர் துணையால் தான் இப்பிரச்சனையை பத்திரிக்கையில் வெளியிட்டு உலகுக்கு எடுத்துக் காட்ட முடிந்தது. அது மட்டும் இல்லாமல் இது குறித்து தொடர்ந்து சிந்தித்து எங்களுக்கு பல ஆலோசனைகள் வழங்கினார். அவ்வப் பொழுது அவரே தொலைப்பேசியில் எங்களை தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்து தெரிந்து கொண்டார். இவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என நினைப்பது எனக்கு நானே நன்றி சொல்லிக் கொள்வது போல சற்று விசித்திரமாக எனக்கு தோன்றுகிறது. காரணம் இப்போராட்டத்தில் அவர் இரண்டற கலந்து விட்டார்.
டெக்கான் க்ரானிக்கல் பத்திரிக்கையின் நிருபர் செல்வி.ஜனனி அவர்கள் டெக்கான் க்ரானிக்கலில் இச்செய்தியை வெளியிட உதவினார்.
தமிழ்ச் சுடர் பத்திரிக்கையின் நிருபர் அவர்களும் இச்செய்தியை வெளியிட்டார்.
ஜூனியர் விகடன் பத்திரிக்கையின் நிருபர் திரு. பாலா அவர்கள், மற்றும் புகைப்படங்கள் எடுத்த திரு.நாகநாதன் அவர்கள். திரு பாலா அவர்கள் காவல் துறையினரை தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு விசாரித்ததில் காவல் துறையினர் மேலும் மேலும் தவறு செய்வதை நிறுத்திக் கொண்டார்கள்.
வாழும் மஹாத்மா உயர்திரு. டிராஃபிக் ராமசாமி அவர்கள். இவர் மீது அரசு அதிகாரிகள் கொண்டிருக்கும் பயம் கலந்த மரியாதையை நான் கண் கூடாகக் கண்டேன். அவர் தன்னலமற்று நம் நன்மைக்காக செயல் பட்டு வருகிறார். அவரை போற்றி பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
அவருக்கு பக்கபலமாக செயல்பட்டுவரும் அக்னிச் சுடரின் ஆசிரியர். டி.எஸ்.ஜேம்ஸ் நாயகம் மற்றும் தலைமை நிருபர் என்.ஜெகதீஸ்வரன் அவர்கள்.
இவ்விருவரும் காவல் துறையினருக்கு கடுமையான பல சோதனைகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். துணை ஆய்வாளர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களை மேல் அதிகாரிகள் சிலர் விசாரிக்கும்படி செய்து விட்டார்கள். அதன் பிறகு திரு.ஜெகதீஸ்வரன் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு இனி காவல் நிலையத்தில் எனக்கு எந்த இடைஞ்சலும் ஏற்படாது என வாக்களித்தார்.
புதுச்சேரி மக்கள் உரிமைக் கழகத்தை சேர்ந்த கோ.சுகுமாரன் அவர்கள். அவர் இது தொடர்பாக பலரிடம் பேசிவருகிறார். காவல் ஆய்வாளார் மற்றும் துணை ஆய்வாளார் மீது மனித உரிமை மீறல் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முயற்சிகள் செய்து வருகிறார்.
குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.சௌந்திரபாண்டியன் அவர்கள். இவர் மேயரை சந்திக்கும் படி கடிதம் ஒன்று எனக்கு கொடுத்திருந்தார். அதை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும் முன் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிட்டது. இது குறித்து அவரிடம் இன்று தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு நன்றி சொன்னேன். அவர், "பொது பிரச்சனையை கவனத்துக்கு கொண்டு வந்ததற்காக உங்களுக்குத் தான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்" என்றார்.
திரு.நட்ராஜ் IPS அவர்கள், அவருக்கு இச்செய்தியை கொடுத்த paolos raja அவர்கள்.
திரு.ஜோதிநிர்மலா. இ.ஆ.ப அவர்கள். பல இடங்களுக்கும் சென்று கடைசியில் இவர் தான் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். பாரதி கண்ட புதுமைப் பெண்ணுக்கு வாழும் உதாரணமாக திகழ்கிறார். இவர் சேவைத் திறன் குறித்து பலரும் மரியாதையோடு இவரை பாராட்டுகிறார்கள்.
மருத்துவர் ரேவதி அவர்கள், பிரச்சனைக்கு சரியான தீர்வை பரிந்துரைத்தார்.
பதிவருலக நண்பர்கள்.
டிராஃபிக் ராமசாமி அவர்களை தொடர்பு கொள்ள உதவிய நண்பர் ஜீவன் அவர்கள்.
கிணறு வெட்ட பூதம் பதிவை பலருக்கும் கொண்டு செல்ல உதவிய நண்பர்கள் கோவி.கண்ணன், நட்புடன் ஜமால், கிரி , தருமி,
என்வழி.காம் இணைய தளத்தினர். தமிழ்மணம்.நெட் இணைய தளத்தினர், மந்திரன், அழகி விஸ்வநாதன், ரிஷான், சூர்வேசன், வால்பையன், கௌதம்.
தருமி அவர்கள் இப்பிரச்சனை குறித்து பலரும் புகார் அனுப்புவதை தன் தளத்தில் பதிவிட்டு உற்சாகப்படுத்தினார்.
மந்திரன் அவர்கள் இப்பதவுக்காக ஒரு நிரந்தர சுட்டியை கொடுத்திருந்தார்.
இப்பிரச்சனையை pdf file-ஆக தயாரித்து தந்த காசு ஷோபனா.
சைலேந்திர பாபு அவர்களுக்கு இப்பிரச்சனையை கொண்டு சென்ற செல்வி.ரூபிணி மற்றும் கமல்.
காவல் ஆணையருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் கொடுத்து ஊக்கப்படுத்திய செல்வி.ஈஸ்வரி அவர்கள்.
துணை முதல்வர் தளத்திற்கு புகார் அனுப்பிய அபி அப்பா அவர்கள்.
சட்டமன்ற உறுப்பினர் திரு.ரவிக்குமார் தளத்தில் இப்புகாரை வெளியிட்ட ப்ரகாஷ் அவர்கள்.
மற்றும் ஆதரவாக குரல் கொடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அன்வர் சாதிக், குமரேஷ், மணிவண்ணன் மற்றும் நான் ஆகிய நால்வரும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை மனமுருக தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்பிரச்சனை மேலும் மேலும் வளர்க்காமல் இப்பொழுதாவது முடித்துத் தந்த திரு.நாராயணன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
எல்லாவற்றுக்கும் மேலாக எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
(இன்னும் சில பெயர்களை மறந்திருக்கக் கூடும் என நினைக்கிறேன். சம்மந்தப்பட்டவர்கள் என் மறதியை பொறுத்தருளும்படி கேட்டுக் கொள்கிறேன். )
63 comments:
தர்மம் எப்போதும் வெல்லும்...
God Bless You Ramesh!
நன்றி நிரு. தர்மம் நிச்சயம் வெல்லும்! :)
வாழ்த்துக்கள் நண்பரே நியாயம் நம் பக்கம் இருக்கும் போது
வெற்றி நம்மை மட்டுமே வந்து சேரும் ஆனால் சிறிது காலதாமதம் மட்டுமே
ஆகும் வாழ்த்துக்கள். உதவிய நல்நெஞ்சங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி
உரித்தாகுக
மிக்க நன்றி வடிவேலன். :)
தர்மம் எப்போதும் வெல்லும்...
உங்கள் தன்னம்பிக்கைக்கு எனது வணக்கங்கள்
இனிய பாராட்டுகளும் வாழ்த்து(க்)களும்.
சோர்ந்து போகாமக் கடைசிவரை நின்னீங்க பாருங்க!!!
நல்லா இருங்க ரமேஷ்.
முயச்சி திருவினையாக்கும்.
வாழ்த்துக்கள் ரமேஷ்
//காவல் ஆணையருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் கொடுத்து ஊக்கப்படுத்திய //
Complaint No. வச்சு check பண்ணும் போது Invalid No.ன்னு வந்துச்சு/வருது? நாம் அனுப்பும் complaint உண்மையா Police Commissioner க்கு போகுதா?
இதை கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் மன உறுதிக்கு என் பாராட்டுக்கள். :-)
இறுதிவரை விடாமல் போராடிய உங்களை பார்த்து பெருமைப்படுகிறேன். சின்ன சின்ன விசயங்களாக எல்லாமையும் சகித்து கொண்டு வாழ்வது நம் தவறுதான் என்பதை உங்கள் மூலமாக தெரிந்து கொண்டோம். ஆனால் போராடும் குணம் ஒரு சிலருக்குத்தான் வாய்க்கிறது, உங்களை போல. பெரும்பாலோனோர் வாய்மூடி மௌனமாகவே உள்ளோம்.
வாழ்த்துக்கள்.
இறுதிவரை விடாமல் போராடிய உங்களை பார்த்து பெருமைப்படுகிறேன். சின்ன சின்ன விசயங்களாக எல்லாமையும் சகித்து கொண்டு வாழ்வது நம் தவறுதான் என்பதை உங்கள் மூலமாக தெரிந்து கொண்டோம். ஆனால் போராடும் குணம் ஒரு சிலருக்குத்தான் வாய்க்கிறது, உங்களை போல. பெரும்பாலோனோர் வாய்மூடி மௌனமாகவே உள்ளோம்.
வாழ்த்துக்கள்.
#அமிர்தவர்ஷினி அம்மா,
தர்மம் எப்பொழுதும் வெல்லும் நிச்சயமாக. நன்றி
#துளசி கோபால்
நன்றி நண்பரே! :)
#ஈஸ்வரி
நன்றி ஈஸ்வரி! புகார் உண்மையில் ஆணையரை சென்றடைகிறதா என்பது எனக்கு தெரியவில்லை. :)
#ஸ்ரீ
எங்கள் மகிழ்ச்சியில் பங்கெடுத்தமைக்கு நன்றி நண்பரே!
#இளங்கோ
நன்றி இளங்கோ! :)
தாங்கள் சொல்வது உண்மை தான். நிலைமை மாற வேண்டும்.
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது! விடாமுயற்சிக்குக் கிடைத்த பலன்!! :-) தங்களுடன் போராடிய அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துகள்!!
மிக்க நன்றி சந்தனமுல்லை.
கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. உங்களின் தைரியம் நிச்சயம் பாராட்டுக்குரியதுங்க.
உங்களின் இந்த விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றிக்கு வாழ்த்துகள்.
இப்போதுதான் உங்கள் பிரச்சினை தீர்ந்ததா என்று கேட்டு அறியலாம் என்று உங்கள் தொலைபேசி எண் தேடி உங்கள் வலைப்பக்கம் வந்தேன்.
ரொம்ப சந்தோஷம் சகோதரா. ரொம்பவே சந்தோஷம். போராடிய உங்களுக்கும், உங்களுக்கு உதவிய அனைவருக்கும், டிராபிக் இராமசாமி அவர்களுக்கும் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
---வித்யா
#இராகவன் நைஜீரியா
நன்றி ராகவன்! மிக்க நன்றி!
#விதூஷ்
சகோதரி வித்யா அவர்களுக்கு வணக்கம். விசாரிக்க வேண்டும் என்கிற எண்ணத்துக்கு மிக்க நன்றி!
நீங்கள் என் எல்லா தளாங்களிலும் பின் தொடர்பாளராகியிருப்பது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. மிக்க நன்றி அக்கா. (நான் அப்படி அழைக்கலாம் தானே?)
உங்களின் தொடர்ந்த போராட்ட குணத்திற்கு என் வாழ்த்துக்கள்.
நன்றி சார், உங்களைப் போன்ற உதவும் குணமுள்ளவர்கள் இருக்கும் வரை இப்படிப் பட்ட போராட்டங்கள் நிச்சயம் தோற்காது.
உங்களின் தொடர்ந்த போராட்ட குணத்திற்கு கிடைத்த வெற்றி மற்றும் நல்ல விசயத்திற்கு உதவும் சான்றோர்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி
நன்றி நண்பா!
Soooooooppppper sir....
Ippo romba santhoshama irukku....
Hats off for ur hard effort....
We learnt a lot from U..U gave a tremondous confidence in us... :))))
Cheers,
Kamalkanth
ரமேஷ்,
என் உணர்வு சந்தோஷமா, இல்லை வருத்தமா என்று புரியவில்லை. ஏனென்று புரிகிறதா?
நான் முன் சொன்னது போல, ஒரு சோதனயை ஆணிவேர் வரை சென்று களைந்தெடுத்த ஒரு உதாரணத்தை இப்போதுதான் பார்க்கிறேன்.
All the best, and congratulations on your success.
#தீபக்
புரியுது தீபக். மக்கள் மனசில் தான் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கு.
என்ன தெரியுமா? பொது நலத்தோடு கூடிய சுய நலம். அது கஷ்டமே இல்லை. ஆனா அதை யாரும் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க. :(
எங்க ஓனர் 2000 செலவில் பிரச்சனையை தீர்த்தார். இதை செய்யாமல் இருக்கும் முயற்சியில் 1 லட்சம் செலவு செய்தார்.
என்ன செய்றது.
பகிர்தலுக்கும் ஆதரவுக்கும் நன்றி!
ரமேஷ்,
இப்பொழுது நீங்கள் மற்றவர்களுடைய ஒட்டுமொத்த உழைப்பிற்க்கேற்ற
பலன் கிடைத்ததாக நினைக்கிறீர்களா?
இதற்கு இவ்வளவு தேவை யா?
ஒரு சுய பரிசோதனை செய்யலாம், தீர்வின் தரம் ? பின் விளைவுகள்?
என் ஒட்டு மொத்த பார்வையும் தேவை,
வாழ்த்துகள்,
சஹ்ரிதயன்
#சஹ்ரிதயன்
"இப்பொழுது நீங்கள் மற்றவர்களுடைய ஒட்டுமொத்த உழைப்பிற்க்கேற்ற
பலன் கிடைத்ததாக நினைக்கிறீர்களா?"
கேள்வி கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. இதற்கான அதிகபச்ச அலைச்சல் என்னுடையது தான். நான் நிச்சயம் சந்தோஷமாக இருக்கிறேன். என்னால் மனித மலம் கலந்த நீரில் பல் விளக்கி, குளித்து கொண்டிருந்த சில இளைஞர்கள் நல்ல நீரில் குளிக்கிறார்கள். எனக்கு கிடைத்திருக்கும் திருப்தியை உங்களுக்கு கொடுத்து சுவைக்கச் சொல்லும் ஆற்றல் எனக்கில்லை. :)
#பலன் கிடைத்ததாக நினைக்கிறீர்களா?
நல்ல நீர் தான் பலன். வேறென்ன வேண்டும்?
#இதற்கு இவ்வளவு தேவை யா?
நிச்சயம் தேவை தான். முதல் கேள்விக்கான பதில் இங்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.
# தீர்வின் தரம் ? பின் விளைவுகள்?
பின் விளைவுகள் பற்றி பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தீர்வின் தரம்- புரியவில்லை. நீர் நிச்சய்மாக நல்ல நீர் தான். எனக்கு அதில் சந்தேகமில்லை.
ஆயிரத்தில் ஒருவருக்குக் கூட இத்துணை நேர்மையான கோபம் வருவதில்லை. வந்த உங்களைப் பார்த்துப் பொறாமைப்படும் கூட்டத்தைப் பார்த்துவிட்டு, இப்போது //இதற்கு இவ்வளவு தேவை யா?// என்று கேட்கும் ஒருவரைப் பார்த்துச் சிரிப்பதா கோபப்படுவதா என்று தெரியவில்லை!!!
சித்தம் போக்கு சிவன் போக்குன்னு இருக்கணும் என்பதுதான் அவரது கொள்கையாக இருக்குமோ?
ஆதரவான வார்த்தைகளுக்கு நன்றி சார். :)
தருமி = இவருடைய முயற்சியை நேர்மையை நான் குறைத்து மதிப்பிட வில்லை,
நோக்கம் அதுவல்ல,
சஹ்ரிதயன்
#சஹ்ரிதயன்,
நண்பரே, உங்கள் மனதில் இருப்பதை விளக்கமாக சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன். என் தம்பி மணிவண்ணன் உங்கள் பின்னூட்டத்தை பார்த்துவிட்டு, "இவர் நல்ல எண்ணம் கொண்டவர் தான். என்னிடம் இது பற்றி பேசியிருக்கிறார். இப்பொழுது ஏன் இப்படி கேட்கிறார் என்று புரியவில்லை" என்றான்.
ஆகையால் உங்கள் நோக்கத்தை தெளிவுப்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். உங்கள் கேள்விகளை பார்ர்கும் பொழுது முயற்சியை குறை கூறுவது போல இருப்பதால் தான் தருமி அவர்கள் அவ்வாறு சொல்லியிருக்கிறார். நான் கூட என் பின்னூட்டத்தில் கேள்வி கொஞ்சம் குழப்பமாக உள்ளதாக குறிப்பிட்டிருப்பதை கவனித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
மிக்க சந்தோஷம்ப்பா ...
நன்றி நணபரே!
உங்களின் மன உருதிக்கு என் வாழ்த்துக்கள். வழக்கமாய் இது போன்ற நிகழ்வுகளில் இதல்லாம் நம்மூர்ல சகஜமப்பா என எண்ணி செல்வதே என் வழக்கம். உங்கள் முயற்சியின் வெற்றி எனக்கும் நம்பிக்கை தருகிறது. இனி நான் சந்திக்கும் நுகர்பொருள் குறைபாடுகளையும் எதிர்க்கலாம் என எண்ணி இருக்கிறேன். நுகர்பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகளின் தொடர்பு விபரங்களை அளித்தால் உதவியாக இருக்கும்.
நன்றி ராஜசூரியன்,
நுகர்வோர் பாதுகாப்புத் துறை சென்னை சேப்பாக்கத்திலுள்ள எழிலகத்தில் நான்காம் மாடியில் உள்ளது. ஏதுவாக இருந்தாலும் நேரில் சென்று பார்க்கவும்.
நீங்கள் களைய நினைக்கும் குற்றம் எதுவாக இருந்தாலும் அம்முயற்சியில் வெற்றிபெற என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் நண்பரே!
நன்றி நண்பா!
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது! தங்களுடன் போராடிய அனைவருக்கும் வாழ்த்துகள்!!
இறுதிவரை விடாமல் போராடிய உங்களை பார்த்து பெருமைப்படுகிறேன்.
தன்னம்பிக்கைக்கு எனது வணக்கங்கள்
#நிஜமா நல்லவன்
மிக்க நன்றி. உங்கள் வாழ்த்துக்களை அவர்களிடம் தெரிவிக்கிறேன்.
#சிங்.செயகுமார்
மிக்க நன்றி நண்பரே.
hats off sir
Thanks Bala. :)
ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்!
உங்களோட இந்த பதிவுகள படிச்சா உடனே ஹப்பாடான்னு ஒரு பெரிய நிம்மதி பெருமூச்சு வந்துச்சு!
வாழ்த்துக்கள்!
நன்றி நக்ஷத்ரன் :)
இந்த சிறுவனிடமிருந்து
உங்களின் விடாமுயற்சிக்கு பாராட்டுகளும்
வெற்றிக்கு வாழ்த்துகளும்...
நன்றி சந்த்ரு
அப்பாடா!
வாழ்த்துக்கள். விடாது முயன்றதற்கு பாராட்டுக்கள்.
வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பா.
Great to hear the news Ramesh. Keep up the good work.
Thanks Senthil! :)
ரமேஷ்,
////குடிநீர் வாரிய நீர் சேமிக்கப் படும் தொட்டி சுத்தம் செய்யப் பட்டிருந்தது தெரிந்தது.
சம்மந்தப்பட்ட பம்பின் நிலையை காண சென்றேன். அங்கே திரு.நாராயணன் அவர்கள் சில வேலையாட்கள் மத்தியில் படிக்கட்டில் அமர்ந்திருந்தார். வேலையாட்கள் மூன்று பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.////
வெற்றிகரமாக ப்ரச்சனை முடிந்தது பெருமகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
தொட்டி சுத்தம் பண்ணினதும் சரீயாயிடுச்சா? பம்ப் என்னா பண்ணாங்க? மாத்தினாங்களா?
கலக்கிட்டீங்க !!!!
#சூர்வேசன்
தாங்கள் காட்டும் ஆர்வத்திற்கு நன்றி.
பம்ப மாத்தல. தண்ணீரும் கழிவும் கலப்பதை தடுக்கும் விதமாக தனியாக குழாய்கள் அமைத்தார்கள்.
அதைத் தான் "சம்மந்தப்பட்ட பம்பின் நிலையை காண சென்றேன். அங்கே திரு.நாராயணன் அவர்கள் சில வேலையாட்கள் மத்தியில் படிக்கட்டில் அமர்ந்திருந்தார். வேலையாட்கள் மூன்று பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள்." என்று குறிப்பிட்டிருந்தேன்.
:)
#செந்தழல் ரவி
நன்றி நண்பா.
வாழ்த்துக்கள் நண்பரே.
நன்றி சிவா.
உங்கள் விடாமுயற்சியும் போராட்ட குணமும் வியக்கத்தக்கது பாராட்டத்தக்கது....
வாழ்த்துக்கள் தோழரே. நன்முயற்சி என்றும் வெற்றி தரும். இது பலருக்கும் ஒரு எடுத்துகாட்டு போராட்டமாக அமையட்டும்.
தமிழரசி, முத்துக் குமார் கோபாலகிருஷ்ணன்,
உங்கள் இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
நுகர்வோர் நீதி மன்றத்தில்,உங்கள் மன உளைச்சலுக்கும்,நேர செலவீனங்களுக்கும் இழப்பீடு பெறுங்கள்.விட்டு விடாதீர்கள்.வாழ்த்துக்கள்.
நண்பர் காஸ்பபி அவர்களே, தங்கள் அன்புக்கு நன்றி. இன்று நல்ல நீரை நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அதை பார்க்கும்பொழுது ஏற்படும் மனநிறைவே மன உளைச்சலுக்கும் நேர விரயத்துக்குமான சன்மானமாக உள்ளது. அது மட்டுமல்லாது மீண்டும் நீதி மன்றம் நோக்கி நடந்து கொண்டிருந்தால் என் தனிப்பட்ட முன்னேற்றத்தில் கவனக் குறாய்வு ஏற்படும் என்பதால் இதை இப்படியே விட்டு விட முடிவு செய்துள்ளோம்.
இறுதியில் சுத்தமான நீர் கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்!
உங்களது விடா முயற்சிக்கும், தைரியத்துக்கும் பாராட்டுகள்.
Nanri joe. :)
அப்பாடி! நல்லபடியாக முடிந்ததற்கு வாழ்த்துக்கள்.
nanri Kumar. :)
Post a Comment