
மஹாத்மா காந்தியை பற்றிய புத்தகம் ஒன்றை நுங்கம்பாக்கம் லேண்ட்மார்க்கில் வெளியிட்ட பொழுது இசைஞானி பேசியது.
அதை என் வார்த்தைகளில் கொடுக்கிறேன்.
"நான் பெரிதும் போற்றும் ரமணருக்கும் மஹாத்மாவிற்குமான தொடர்பு உன்னதமானது. மஹாத்மாவின் மேன்மையை உணர்த்த ரமணரின் வாழ்க்கையிலிருந்து இரண்டு சம்பவங்களை சொல்ல விரும்புகிறேன்.
ஒரு முறை மஹாத்மாவிற்கு நெருக்கமானவர்கள் குரு ரமணரை சந்திக்க வந்தார்கள். அவர்கள் மஹாத்மாவிற்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று ரமணரை கேட்டார்கள். அதற்கு ரமணர், "என்னை எந்த சக்தி இங்கே சாந்தம் கொள்ளச் செய்ததோ அதே சக்தி தான் அவரை அங்கே செயல் படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அவருக்கு நான் சொல்ல ஒன்றுமே இல்லை" என்றாராம். அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டது இல்லை. இப்போது இருப்பது போல தொலைக்காட்சியில் பார்க்கும் வாய்ப்பும் இல்லை. அப்படியிருந்தும் காந்தியின் மீது ரமணர் அவ்வளவு அபிமானம் வைத்திருந்தார். காரணம் ஒரு ஞானியின் மேன்மை இன்னொரு ஞானிக்குத் தான் தெரியும். நாம் மஹத்மாவை மறந்ததின் விளைவு தான் இன்று நடைபெறும் வன்முறைகளுக்கும் பிற குற்றங்களுக்கும் காரணம். இன்று செய்தி தாள்களில் வரும் சம்பவங்களையெல்லாம் பார்த்தால் மனம் மிகுந்த வேதனை அடைகிறது.
ரமணர் எதற்கும் கலங்காதவர். இந்து முஸ்லிம் மதச் சண்டைகளின் பொழுது ரமணாஸ்ரமம் முன்பே பல கொலைகள் நடந்திருக்கின்றன. அதையெல்லாம் கூட நிச்சலனமாக பார்த்துக் கொண்டிருந்த ரமணர். மஹாத்மாவின் மரணத்தை பற்ற்றிக் கேள்விப் பட்டவுடன் கண் கலங்கி விட்டார்." இதைச் சொன்ன பொழுது இசைஞானியும் கண் கலங்கிவிட்டார். அதன் பிறகு ஒரிரு வார்த்தைகளோடு தன் உரையை முடித்துக் கொண்டார்.
இசைஞானி எப்போதும் இயல்பு நிலையில் இருப்பதை கண்டு பல முறை வியந்திருக்கிறேன். அவர் பேசும் பொழுது தன் மனதை பேசினார். உண்மையை சொல்பவர்கள் சிந்திக்க தேவையில்லை என்பார்கள். அதை நான் அன்று அவரிடம் கண்டேன்
4 comments:
நாம் ஆத்மார்த்தமாக நேசிக்கும் ஒருவரை பற்றி நாம் விரும்பி ரசிக்கும் இன்னொருவர் புகழும் பொது கண்கள் கலங்க தான் செய்யும். அது நம் நேசிப்பின் அளவுகோல்.
ஆமாம். இசைஞானி ரமணர் மீது வைத்திருக்கும் மரியாதை எப்போதோ தெரியும். காந்தி மகானையும் அவர் புரிந்துள்ளார் என்பது எனக்கு அன்று தான் தெரியும்.
பகிர்ந்ததற்கு நன்றி.
வேறு வழியாக இதை நான் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு!
:) நன்றி தீபக்.
Post a Comment