
இசைஞானி இளையராஜாவை இதுவரை இரண்டு முறை பார்த்திருக்கிறேன்.
முதல் முறை திருவாசக இசைப் பேழை வெளியீட்டின் பொழுது. ம்யூசிக் அகாடமியில்.
அன்று வியாழக்கிழமை. மைலாப்பூர் சீரடி சாய் பாபா கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கே நண்பர் ஜகதீசன் ஐயா அவர்கள் திருவாசக இசைப் பேழை வெளீயீட்டுக்கு தான் செல்வதாக கூறி என்னையும் அழைத்தார். அழைப்பிதழ் இல்லாமல் அனுமதிப்பார்களா என்று நான் தயங்கிய போது, சுவரொட்டியில் அனைவரும் வருக என போட்டிருந்ததால் கண்டிப்பாக அனுமதிப்பார்கள் என்று கூறினார்.
அங்கே சென்ற பொழுது அழைப்பிதழ் இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று கூறி மற்றவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். எப்படியாவது உள்ளே சென்று விட வேண்டும் என்று என்னைப் போலவே பலரும் ஆர்வமாயிருக்க உள்ளே அனுமதிக்கும் படி கெஞ்சிப் பார்த்தோம் சண்டையிட்டுப் பார்த்தோம் எதுவும் வேலைக்கு ஆவதாக தெரியவில்லை.
அழைப்பிதழ் வைத்திருந்த ஒருவரிடம் உரையை மட்டும் பெற்றுக் கொண்டு உள்ளே நுழைய பார்த்தேன். வாசலில் நின்றிருந்தவர்கள் தெளிவாக உரையை வாங்கி உள்ளே அழைப்பிதழ் இருக்கிறதா என்று பார்த்து இல்லையென்று கண்டுபிடித்து விட்டார்கள். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல "போஸ்டர்ல அனைவரும் வருகனு போட்டுட்டு இப்ப இன்விடேஷன் இருந்தா தான் விடுவோம்னா எப்படி சார்" என்றேன். என்னைப் போலவே நிறைய பேர் இருந்ததால், "ப்ரோக்ராம் ஆரம்பிக்கட்டும் பார்க்கலாம்" என்று வெளியே அனுப்பிவிட்டார்கள்.
பிரபலங்கள் பலரும் உள்ளே சென்று கொண்டிருந்தார்கள். நேரம் ஆகிக் கொண்டேயிருந்தது. எப்படியும் உள்ளே சென்று விடவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தேன். எப்படி என்று தான் புரியவில்லை. எப்படியும் உள்ளே சென்றுவிடுவேன் என்று என் உள்ளுணர்வு சொல்லியது. திருவாசகத்தை இசைஞானியின் இசையில்-குரலில் கேட்கும் உரிமை என் போன்ற ஒரு ஆன்மிகவாதிக்கு இல்லையென்றால் இது என்ன நியாயம் என்று ஸ்ரீ கிருஷ்ணரிடம் ஒரு முறை என் இதயத்தில் முறையிட்டேன்.
அப்பொழுது இசைஞானி அங்கே வருகை தந்தார். எல்லோரும் அவர் வண்டியை சுற்றிக் கொண்டார்கள். நானும் தான். வண்டி நின்றது. பின் கதவை திறந்தன அவர் கைகள். வெள்ளை நிற கைக்குட்டை வைத்திருந்தார். வெள்ளை நிற ஆடை. செருப்பும் கூட வெள்ளை தான். சிவபெருமானுக்கு பிடித்த வெண்தாமரை மலரைப் போல காட்சியளித்தார் இசைஞானி. வண்டியில் இருந்து இறங்கியவுடன் என்னை(யும்) பார்த்தார். ஆஞ்சநேயர் ராமரை வணங்குவதைப் போல அவரை வணங்கினேன். தலையசைத்து ஆமோதித்துவிட்டு உள்ளே சென்றார். பலரும் அவர் காலில் விழுந்து வணங்கினார்கள். காலில் விழுந்து வணங்கும் சில மணித்துளிகள் அவரை பார்க்க முடியாதே! அதனால் நான் விழுந்து வணங்கவில்லை. இசைஞானி உள்ளே சென்றார்.
இதுவரை உள்ளே செல்லாமல் இருந்ததிலும் ஒரு நன்மை இருந்ததை எண்ணி மகிழ்ந்தேன். பிறகு எப்படி உள்ளே செல்வது என சிந்தித்த படி நடந்து கொண்டிருந்த போது நேராக மேடைக்கு செல்லும் ஒரு வழியாக குழுப் பாடகர்களை அனுமதித்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பின் நானும் உள்ளே நுழைந்துவிட்டேன். :) . எனக்கு பின்னால் வந்தவர்களை வாசலில் இருப்பவர்கள் தடுத்துவிட்டார்கள். :).
'பொல்லா வினையேன்' பாடலை விளக்குகளை அனைத்துவிட்டு ஒலிக்கச் செய்தார்கள். பாடலை கேட்ட படி என் அறை அருகில் நான் அவ்வப்போது தரிசிக்கும் சுந்தரேஸ்வரரை மனதுக்குள் கொண்டுவந்தேன். 'துய்ய என் உள்ளத்துள் ஓம்காரமாய் நின்ற மெய்யே' என்று இசைஞானி உருகிய பொழுது காரணமே இல்லாமல் அழுகை வந்துவிட்டது. அந்த அனுபவம் வார்த்தைகளால் விளக்க இயலாதது.
அதன்பிறகு பலரும் பேசினார்கள். இசைஞானி பேச எழுந்த போது ஏற்பட்ட கரகோஷத்தை கண்டு ரஜினியே புருவம் உயர்த்தினார்.
இரண்டாவது தரிசனம். மஹாத்மா காந்தியைப் பற்றிய புத்தகம் ஒன்றை இசைஞானி வெளியிட்ட பொழுது. நுங்கம்பாக்கம் லேண்ட்மார்க்கில்.
மஹாத்மா காந்தியின் மேன்மையை உணர்ந்த வெகு சில இந்தியர்களில் இசைஞானியும் ஒருவர். ரமணர் மஹாத்மா இவர்களுக்கு இடையேயான உறவைப் பற்றிப் அவர் பேசிய பேச்சும் ஓர் ஆன்மிக விருந்தே.
ரமணர்- மஹாத்மாவை பற்றி "என்னை எந்த சக்தி இங்கே செயல் பட வைக்கிறதோ அதுவே அவரை அங்கே இயக்குகிறது" என்று சொன்னதை சொன்னார்.
மதச் சண்டையின் பொழுது பல கொலைகளை பார்த்தும் கலங்கிடாத ரமணர் மஹாத்மா மறைந்த பொழுது கண்ணீர் சிந்தியதாக சொன்ன பொழுது இசைஞானி கண்களிலும் கண்ணீர் துளிர்த்தது.
விழா முடிந்தவுடன் பாலோ கீலோவின் "Like the flowing river" புத்தகத்தை இசைஞானிக்கு பரிசளிக்கலாம் என நானும் என் தம்பியும் முடிவெடுத்தோம். உடனே அந்த புத்தகத்தை வாங்கி அவர் வெளியேரும் முன் ஓடிச் சென்று அவர் கைகளில் கொடுத்து விட்டோம்.
அந்த புத்தகத்தின் முதல் பக்கத்தில் நான் எழுதிய வரிகள்
"நாங்கள்
உன் ரசிகர்கள்
உன் தலைவர்கள்
நீ படைக்கும் வரைக்கும்
விருந்தை ரசிப்போம்"
உன் தலைவர்கள் என்பதை உன் பக்தர்கள் என்று எழுதியிருக்கலாம் என அதன் பிறகு தோன்றியது.
இசைஞானி அதை படித்திருப்பார் என நினைக்கிறேன். படித்தவுடன் என்ன செய்த்திருப்பார்? புன்னகைத்திருப்பாரா? 'கிறுக்குப் பய' என்று நினைத்திருப்பாரா? தெரியவில்லை.