Wednesday, February 13, 2013

டேவிட் என்றொரு கொடுமை



டேவிட் திரைப்படத்திற்கு 120 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியது நான் சுயநினைவோடும் சுயசிந்தனையோடும் செய்த தவறு தான். டேவிட் திரைப்படத்தை தயரித்தவர்கள் படத்திற்கு விளம்பரங்கள் செய்திருந்தார்கள் தான். ஆனால் அவர்கள் என்னை முந்திரிக் கொட்டை போல முந்திக் கொண்டு முதல் வாரத்திலேயே படத்தை தியேட்டரில் பார்க்கச் சொன்னார்களா? இல்லையே..... அவர்கள் விளம்பரம் செய்திருந்தார்கள். அவ்வளவு தான். அதை எனக்கான அழைப்பாக நான் கருதிய தவறுக்காக என்னை அத்திரைப்படத்தின் இயகுநர் பிஜோய் நம்பியார் எப்படியெல்லாம் துன்புறுத்தினார் தெரியுமா நண்பர்களே?????

முதலில் ஒரு மணப்பெண் திருமணத்தன்று ஓடிப்போய்விட்டால் அந்த மாப்பிள்ளை குடிப்பழக்கத்திற்கு ஆளாவான் தானே என்றார். நான் ஆம் என்றேன். உடனே அவர் அந்த சோகத்தில் அந்த மாப்பிள்ளை (விக்ரம்) எப்படி தண்ணியடிக்கிறார் பார் என்றார். ஐயோ பாவம் என்றேன். உடனே அவர், ஒரு பாதிரியார் முகத்தில் இந்துத்வா அமைப்பினர் கறியை பூசினால் அந்த பாதிரியார் அழுவார் தானே என்றார். ஆமாம் என்றேன். அந்த பாதிரியார் (நாசர்) எப்படியெல்லாம் அழுகிறார் பார் என்றார். ஐயோ பாவம் என்றேன். அவ்வளவு தான் நண்பர்களே..... நான் அவருக்கு என்ன தீங்கிழைத்தேன் என்பதே எனக்கு விளங்காத நிலையில்..... என்னை பல்வேறு வகைகளில் துன்புறுத்த துவங்கி விட்டார்....


விக்ரம் தண்ணியடிப்பதையும் நாசர் மற்றும் குடும்பத்தினர் அழுவதையும் மீண்டும் மீண்டும் மாற்றி மாற்றி காட்டி காட்டி என்னை துன்புறுத்தினார்......நாசர் தம் குணசித்திர நடிப்பால் குமுறி குமுறி அழுவதை காட்டி துன்புறுத்தினார்....அப்பொழுது நாசரின் முதுகு குலுங்குவதை காட்டி துன்புறுத்தினார்....நாசரின் மகள்கள் இருவரும் கலங்கி நிற்பதை காட்டி துன்புறுத்தினார்..... நாசரின் பக்கத்து வீட்டுக்காரர்கள் அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவிப்பதை காட்டி துன்புறுத்தினார்......அவ்வப்பொழுது தபுவை தத்துவம் சொல்ல வைத்து துன்புறுத்தினார்.....லாரா தத்தாவை வைத்து ஆறுதல் சொல்ல வைத்து துன்புறுத்தினார்.... விக்ரம் செத்துப் போன அப்பா ஆவியாக வந்து விக்ரமோடு தண்ணியடிப்பதை காட்டி துன்புறுத்தினார்.... அந்த அப்பா சொன்ன ஜோக்குகளை வைத்து துன்புறுத்தினார்.....இப்படியாக பலவகையில் 2.30 மணி நேரம் துன்புறுத்திய பின்னர், "தண்ணியடித்துக் கொண்டிருந்தாரே விக்ரம்? அவருக்கும்..... அழுதுக் கொண்டிருந்தானே பாதிரியின் பிள்ளை ஜீவா அவனுக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா??????" என்றார்..... எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை... எங்கே தவறாக சொன்னால் இன்னொரு படம் எடுத்து துன்புறுத்துவாரோ என்கிற பயத்தில்.... நான் விழிக்க... அவங்க ரெண்டு பேருமே.... டேவிட்.... என்றார்.......நான் நொந்து நூலானேன்... வெந்து வேர்க்கடலையானேன்......


என் சொந்த செலவில் சூன்னியம் வைத்துக் கொண்டவன் என்கிற முறையில் இத்தனை துன்புறுத்தல்களையும் இன்னும் பல சொல்லவொண்ணா சோகங்களையும் அந்த 2.30 மணி நேரத்தில் பொறுத்துக் கொண்ட நான்.... ஒன்றே... ஒன்றை... மட்டும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை நண்பர்களே.... அது என்ன தெரியுமா.... புதிய கெட்டப் என்கிற பெயரிலே....ஹேர் ஸ்டைல் என்கிற போர்வையிலே.....அழகான தோரணம் என்கிற தோரணையிலே.... ஜீவா.... பின்னந்தலையில். தொங்கவிட்டிருந்தாரே அந்த ரெட்டை ஜடை...... அந்த ரெட்டை ஜடையை மட்டும் என்னால்..... பொறுத்துக் கொள்ள முடியவில்லை...... பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை......

2 comments:

சீனு said...

ஒரு வித்தியாசமா ரெய்டுக்கு வந்தது குத்தமாய்யா? - வடிவேலு

ramesh sadasivam said...

ha ha ha....

வருகைக்கு நன்றி சீனு! :)