Sunday, December 22, 2013

தலைமுறைகள்


இன்று தலைமுறைகள் திரைப்படம் பார்த்தேன். பார்க்க வேண்டும் என முடிவு செய்து போகவில்லை. வெளியே செல்லலாம் என்று தான் கிளம்பினேன். நடந்து செல்ல பிடிக்கும் என்பதால் நடந்தபடி எஸ்கேப் அவென்யூ சென்றடைந்தேன். அங்கே எல்லாக் காட்சிகளும் அரங்கம் நிறைந்திருந்ததால் சத்யம் சென்று ஐ.டியில் சாப்பிட்டேன். சாப்பிட்டு முடித்து வெளியே வந்ததும் அறைக்கு திரும்பும் திட்டத்தில் தான் இருந்தேன். சும்மா...டிக்கெட் நிலவரம் தெரிந்து கொள்ள டிக்கெட் கௌன்டர் அருகில் செல்ல...தலைமுறைகள் திரைப்படத்திற்கு டிக்கெட்டுகள் இருந்தன. மணியை பார்த்தேன். 4.18. காட்சி நேரம் 4.20. ஆஹா... என மகிழ்ந்து டிக்கெட் வாங்கினேன்.  ஏ வரிசையிலேயே கிடைத்தது. நான் என் சீட்டில் சென்று அமர்ந்த முப்பது வினாடிகளில்.... என் கண்களுக்கும்...காதுகளுக்கும்....என் இதயத்திற்கும்....என் ஆன்மாவிற்குமான.... ஒரு அற்புத விருந்து.... திரையில் ஒளிர துவங்கியது......இறைவன் என் ஒவ்வொரு நாளையும் திட்டமிடுகிறார் என்பதற்கான சான்றாக இந்நிகழ்வு இருந்தது.....

படம் பார்த்து முடித்தவுடன் இத்திரைப்படத்தை பற்றி எழுத வேண்டும் என நீண்ட நாட்களுக்குப் பின் முடிவு செய்தேன். அதே சமயம் இத்திரைப்படத்தை பற்றி அதிகமாக எழுதி அதன் அனுபவ அழகை கெடுத்துவிடக் கூடாதென்றும் நினைத்துக் கொண்டேன். ஆகையால்....

பாலுமகேந்திரா பதிவு செய்திருக்கும் ரம்மியமான இயற்கை காட்சிகளுக்காக ஒருமுறை...

இசைஞானி இளையராஜாவின் தேனனைய இசைக்காக ஒருமுறை....

படமெங்கும் கொட்டிக் கிடக்கும் கள்ளம் கபடமற்ற அன்பிற்காக ஒருமுறை....

அந்தச் சிறுவனுக்காக ஒருமுறை.....

இப்படி ஒரு முயற்சிக்கு தோள் கொடுத்த இயக்குநர் சசிகுமார் அவர்களுக்காக ஒரு முறை என.....

குறைந்தது ஐந்து முறையாவது பார்க்க வேண்டும் என நான் நினைத்துக் கொண்டிருப்பதை மட்டும் கூறி இவ்விமர்சனத்தை முடித்துக் கொள்கிறேன்.

பி.கு: இத்திரைப்படம் பொருளாதார ரீதியாக வெற்றியடைய வேண்டும் என ஸ்ரீராமரை பிரார்த்திக்கிறேன்! ஸ்ரீராமஜெயம்!