நாளை சன் அலுவலகத்தை முற்றுகையிடுவது என்ற மாணவர் முடிவை முகநூலில் பார்த்து எனக்கு தோன்றிய கருத்துக்களை அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். அவை இங்கே...
சன் ரைசர்ஸ் அணியில் இலங்கை வீரர்களை சேர்த்திருக்கக் கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. அதற்காக சன் டிவி பார்ப்பதில்லை என்ற முடிவெடுத்தால் அவர்கள் டிஆர்பி அடி வாங்கும். அதை விட்டு சன்டிவி அலுவலகத்தை முற்றுகையிடுவதால் என்ன ஆகப் போகிறது. எவ்வளவு நேரம் இந்த முற்றுகை? முற்றுகையிட்ட பிறகு என்ன செய்ய போகிறீர்கள். முற்றுகைக்கு பிறகும் இலங்கை வீரர்களை நீக்க முடியாது என்றால் என்ன செய்யப் போகிறீர்கள்?சன் டி.வி அலுவலகத்தை முற்றுகையிடுவதால் ஈழ மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட போகிறது?
சூரிய ஒளி எங்கும் சிதறி கிடப்பது போல உங்கள் போராட்டம் தமிழகம் எங்கும் சிதறி கிடக்கிறது. சூரிய ஒளியை ஒரு லென்ஸ் வழியாக குவிப்பதை போல, போராடும் மாணவர்கள் அனைவரும் சென்னையில் குவிந்தால் உங்கள் போராட்டம் ஆற்றல் பெரும். அப்படி குவியும் மாணவர்கள் டெல்லி நோக்கி நகர்ந்தால் உங்கள் போராட்டம் தீப் பிடிக்கும்.
சன்டிவி என்கிற தனியார் நிறுவனத்தை முற்றுகையிடுவதை விட தமிழகத்தில் போராடும் அனைத்து மாணவர்களும் சென்னையில் ஒன்று கூடி முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிடுங்கள். முற்றுகையிட்டு டெல்லியை நோக்கி போகும் ஊர்வலத்திற்கு பாதுகாப்பு கேளுங்கள். இந்த ஊர்வலத்தை எப்படி நடத்துவது என்று வை.கோ அவர்களிடம் ஆலோசனை பெறுங்கள்.
அந்த ஊர்வலத்தில் பங்கு பெற பொது மக்களுக்கும் திரைத்துறையினருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுங்கள். திரைத்துறையினர் வந்தால் ரசிகர்களும் வருவார்கள். இப்படியாக தமிழ் சமூகத்தை ஒன்று திரட்டி நீங்கள் போராடினால் உங்கள் போராட்டம் இந்தியா முழுவது கவனிக்கப்படும்.
ஒரு போராட்டத்திறுகு எவ்வளவுக்கு எவ்வளவு ஆதரவு பெருகுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அப்போராட்டத்தின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலமும் ஈழத்தின் கொடுமைகள் குறித்து அறியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். உதாரணத்திற்கு நீங்கள் ரஜினிகாந்திடம் அவர் அமிதாப்பிடம் பேசி அமிதாப் அவர் ரசிகர்களிடம் பேசினால் உங்கள் போராட்டத்திற்கு எவ்வளவு ஆதரவு பெருகும் என்று சிந்தித்து பாருங்கள்.
ஒரு போராட்டம் என்பது சதுரங்கம் போன்றது. தப்பு தப்பாக காய் நகர்த்தினால் ஜெயிக்க முடியாது. சன் குழுமம் ஒரு வியாபார குழுமம் அவர்களுக்கு நுகர்வோராக இருப்பதில்லை என்று முடிவு செய்தால் அவர்கள் பலத்த நஷ்டம் அடைவார்கள். அதை விட்டு நீங்கள் அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு உங்களில் சிலர் சிறை செல்வதால் என்ன லாபம்? நீங்கள் உண்ணாவிரதம் இருந்து உங்கள் உடலை பலவீனப்படுத்துவதால் என்ன லாபம்?