Sunday, March 31, 2013
சரியான திசையில் பயணிப்போம்
மாணவர்களின் இந்த போராட்டம் தவறான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இவர்கள் தொலைநோக்கு பார்வை இல்லாமல் போராடுகிறார்கள். வெறும் கோபத்தை வைத்து போராடுகிறார்கள். கோபம் ஒரு போராட்டத்தை ஆரம்பிக்க உதவுமே ஒழிய ஒரு போராட்டத்தை முடித்து வைக்க உதவாது. அன்பும் அறிவும் தான் ஒரு போராட்டத்தை முடித்து வைக்க உதவும்.
முதலில் தனி ஈழம் என்பதே தமிழர்கள் சந்தித்து வரும் கொடுமைகளுக்கு நிரந்தர தீர்வாகாது. ஏனென்றால் தனி ஈழம் வெற்றிகரமாக உருவானாலும் ஒரு தீவு அந்த தீவுக்குள் இரண்டு நாடுகள் என்ற நிலை உருவாகும். ஈழ இலங்கை எல்லைப் பகுதியில் இரு ராணுவங்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடக்கும். ஈழத்துக்குள் இலங்கையின் ஊடுருவல் என்ற பெரும் பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும். இப்பொழுது தமிழக மீனவர்களை கொல்வது போல ஈழ மீனவர்களை சிங்கள ராணுவம் தொடர்ந்து கொல்லும். சண்டை என்பது தீராததாகத்தான் இருக்கும். சிங்கள அரசு என்ற ஒன்று தனித்து இயங்கும் வரை சிங்கள ராணுவம் என்று ஒன்று தனித்து இருக்கும் வரை அவர்கள் தமிழர்களை அழிக்கும் போக்கை நிறுத்தப் போவதில்லை. ஆனால் தமிழர்கள் இலங்கை முழுவதிலும் தங்கள் அதிகாரத்தை உரிமையை நிலைநாட்டினால் தனி சிங்கள அரசு என்று ஒன்று இல்லாமல் போகும். அதனால் தமிழர்களின் கனவு இலங்கை முழுவதிலும் தங்கள் அதிகாரத்தையும் உரிமையையும் நிலைநாட்டுவதாகத் தான் இருக்க வேண்டுமே ஒழிய ஈழம் என்ற எல்லைக்குள் சுருங்கி விடக்கூடாது.
இந்த போராட்டத்தின் மிகப் பெரிய தவறாக நான் பார்ர்கும் இன்னொரு விஷயம். தனி ஈழமா அல்லது தனி தமிழ்நாடா என்கிற கேள்வி.
தனி தமிழ் நாடு கேட்பது என்பது நம் தலையில் நாமே மண்ணை அள்ளி போட்டுக் கொள்ளும் செயலன்றி வேறில்லை.
தனி தமிழ் நாடு கேட்பதின் முதல் சிக்கல், இந்திய அரசு அதற்கு எளிதில் ஒப்புகொள்ளாது. போராட்டம் வலுப் பெறும் பட்சத்தில் அவரகள் ராணுவத்தை கொண்டு அதை அடக்கும் அளவிற்கு செல்வார்கள். ராணுவம் ஒரு இடத்துக்குள் வந்தால் அவர்கள் என்னென்ன அநியாங்கள் செய்வார்களோ அனைத்தையும் செய்வார்கள். அவ்வளவு கசப்பான அனுபவங்களையும் எதிர்கொண்டு போராடினாலும் அந்த போராட்டம் பல பத்தாண்டுகளுக்கும் நீடிக்கும்.
இப்படியெல்லாம் போராடி தனி தமிழ் நாட்டை வென்றாலும் அதனால் நாம் அடையப் போகும் பலன் என்ன.
1. இப்பொழுது சகஜமாக சென்று கொண்டிருக்கும் கேரளாவிற்கும் ஆந்திராவுக்கும் கூட நாம் பாஸ்போர்ட் விசா எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
2. இந்தியாவிடம் சண்டை போட்டு தனித்து வந்த பிறகு வேலை தேடி அந்த எல்லைகளுக்குள் செல்லாமல் தமிழர்களால் இருக்க முடியுமா? அவர்களிடம் சண்டை போட்டு பிரிந்த வந்த பிறகு எந்த முகத்தை வைத்து கொண்டு அவர்களிடம் வேலை தேடி, தொழில் செய்ய நாம் போவது. அல்லது தனி தமிழ்நாடு கேட்பவர்கள் தமிழர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்குள்ளேயே கிணற்று தவளைகளாக இருந்து விடலாம் என்று சொல்ல வருகிறார்களா?
இப்பொழுது தனி தமிழ்நாடு கேட்க வேண்டிய அவசியம் என்ன. ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்தால் ஆட்சியில் இருப்பவர்களை மாற்றலாமே? ஏன் அரசாங்கத்தின் மீது கோபம் கொள்ள வேண்டும் அரசாங்கம் வெறும் வாகனம் தானே. ஆட்சி செய்பவர் அல்லவா அதை சரியான திசையிலோ தப்பான திசையிலோ கொண்டு செல்கிறார்?
Friday, March 29, 2013
உலகத்தின் கவனம் ஈர்ப்போம்!
ஈழம் தொடர்பான இந்த போராட்டத்தை தமிழர்களுக்கு மட்டுமே உண்டான போராட்டமாக வைத்துக் கொண்டிருக்காமல் உலகமெங்கும் உள்ள ஒட்டுமொத்த மக்களின் போராட்டமாக மாற்ற வேண்டும். இந்த போராட்டத்தை தமிழ் நாட்டிலேயே வைத்துக் கொண்டிருப்பதால் நாமே இது பற்றி பேசி கொண்டிருப்பதால் நம் நியாயம் யார் காதையும் எட்டாமல் இருக்கிறது.
உலகமெங்கும் இருக்கும் மக்கள் இந்த போராட்டத்தை பற்றி பேச வைக்க வேண்டும். அதற்கு எனக்கு தோன்றும் யோசனை இந்த போராட்டத்தை ஒரு போராட்டமாக வைத்து கொண்டிருக்காமல் ஒரு கின்னஸ் சாதனையாக மாற்ற வேண்டும். நம் போராட்டம் ஒரு கின்னஸ் சாதனையாக மாறினால் உலக ஊடகங்கள் அனைத்தும் நம் பக்கம் கவனம் திருப்பும். அப்பொழுது நமக்கு நியாயம் கிடைப்பது மிக எளிதாக இருக்கும்.
நம் போராட்டத்தை ஒரு கின்னஸ் சாதனையாக மாற்றுவதற்கு எனக்கு தோன்றிய ஒரு வழி. தமிழகத்திலிருந்து போராடிக் கொண்டிருக்கும் அனைவரும் டெல்லியை நோக்கி நடக்க துவங்குவது. 50 லட்சத்திலிருந்து 2 கோடி தமிழர்கள் டெல்லியில் அமைதியாக குவிய வேண்டும். கோஷம் போட வேண்டாம். உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். அவர்கள் உணவு கொடுத்தால் சாப்பிடுவோம். இல்லையென்றால். பட்டினி கிடப்போம். ஆனால் உலக ஊடகங்கள் அனைத்தயும் நம் பக்கம் கவனம் ஈர்ப்போம். நமக்கு ஒரு நல்ல பதில் கிடைக்கும் வரை டெல்லியிலேயே இருப்போம். எந்த வன்முறையும் வேண்டும் எந்த சத்தமும் வேண்டாம். அமைதியாக ஆனால் அழுத்தமாக நாம் ஒரு உலக சாதனை நிகழ்த்த வேண்டும். அப்பொழுது தான் நம் பிரச்சனையைப் பற்றி உலகெங்கும் விவாதம் நடக்கும். உலகமெங்கும் விவாதம் நடந்தால் நம் நியாயங்கள் எல்லோருக்கும் புரிய துவங்கும்.
இதை எப்படி சாத்தியப்படுத்துவது?????????
Wednesday, February 13, 2013
டேவிட் என்றொரு கொடுமை
டேவிட் திரைப்படத்திற்கு 120 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியது நான் சுயநினைவோடும் சுயசிந்தனையோடும் செய்த தவறு தான். டேவிட் திரைப்படத்தை தயரித்தவர்கள் படத்திற்கு விளம்பரங்கள் செய்திருந்தார்கள் தான். ஆனால் அவர்கள் என்னை முந்திரிக் கொட்டை போல முந்திக் கொண்டு முதல் வாரத்திலேயே படத்தை தியேட்டரில் பார்க்கச் சொன்னார்களா? இல்லையே..... அவர்கள் விளம்பரம் செய்திருந்தார்கள். அவ்வளவு தான். அதை எனக்கான அழைப்பாக நான் கருதிய தவறுக்காக என்னை அத்திரைப்படத்தின் இயகுநர் பிஜோய் நம்பியார் எப்படியெல்லாம் துன்புறுத்தினார் தெரியுமா நண்பர்களே?????
முதலில் ஒரு மணப்பெண் திருமணத்தன்று ஓடிப்போய்விட்டால் அந்த மாப்பிள்ளை குடிப்பழக்கத்திற்கு ஆளாவான் தானே என்றார். நான் ஆம் என்றேன். உடனே அவர் அந்த சோகத்தில் அந்த மாப்பிள்ளை (விக்ரம்) எப்படி தண்ணியடிக்கிறார் பார் என்றார். ஐயோ பாவம் என்றேன். உடனே அவர், ஒரு பாதிரியார் முகத்தில் இந்துத்வா அமைப்பினர் கறியை பூசினால் அந்த பாதிரியார் அழுவார் தானே என்றார். ஆமாம் என்றேன். அந்த பாதிரியார் (நாசர்) எப்படியெல்லாம் அழுகிறார் பார் என்றார். ஐயோ பாவம் என்றேன். அவ்வளவு தான் நண்பர்களே..... நான் அவருக்கு என்ன தீங்கிழைத்தேன் என்பதே எனக்கு விளங்காத நிலையில்..... என்னை பல்வேறு வகைகளில் துன்புறுத்த துவங்கி விட்டார்....
விக்ரம் தண்ணியடிப்பதையும் நாசர் மற்றும் குடும்பத்தினர் அழுவதையும் மீண்டும் மீண்டும் மாற்றி மாற்றி காட்டி காட்டி என்னை துன்புறுத்தினார்......நாசர் தம் குணசித்திர நடிப்பால் குமுறி குமுறி அழுவதை காட்டி துன்புறுத்தினார்....அப்பொழுது நாசரின் முதுகு குலுங்குவதை காட்டி துன்புறுத்தினார்....நாசரின் மகள்கள் இருவரும் கலங்கி நிற்பதை காட்டி துன்புறுத்தினார்..... நாசரின் பக்கத்து வீட்டுக்காரர்கள் அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவிப்பதை காட்டி துன்புறுத்தினார்......அவ்வப்பொழுது தபுவை தத்துவம் சொல்ல வைத்து துன்புறுத்தினார்.....லாரா தத்தாவை வைத்து ஆறுதல் சொல்ல வைத்து துன்புறுத்தினார்.... விக்ரம் செத்துப் போன அப்பா ஆவியாக வந்து விக்ரமோடு தண்ணியடிப்பதை காட்டி துன்புறுத்தினார்.... அந்த அப்பா சொன்ன ஜோக்குகளை வைத்து துன்புறுத்தினார்.....இப்படியாக பலவகையில் 2.30 மணி நேரம் துன்புறுத்திய பின்னர், "தண்ணியடித்துக் கொண்டிருந்தாரே விக்ரம்? அவருக்கும்..... அழுதுக் கொண்டிருந்தானே பாதிரியின் பிள்ளை ஜீவா அவனுக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா??????" என்றார்..... எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை... எங்கே தவறாக சொன்னால் இன்னொரு படம் எடுத்து துன்புறுத்துவாரோ என்கிற பயத்தில்.... நான் விழிக்க... அவங்க ரெண்டு பேருமே.... டேவிட்.... என்றார்.......நான் நொந்து நூலானேன்... வெந்து வேர்க்கடலையானேன்......
என் சொந்த செலவில் சூன்னியம் வைத்துக் கொண்டவன் என்கிற முறையில் இத்தனை துன்புறுத்தல்களையும் இன்னும் பல சொல்லவொண்ணா சோகங்களையும் அந்த 2.30 மணி நேரத்தில் பொறுத்துக் கொண்ட நான்.... ஒன்றே... ஒன்றை... மட்டும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை நண்பர்களே.... அது என்ன தெரியுமா.... புதிய கெட்டப் என்கிற பெயரிலே....ஹேர் ஸ்டைல் என்கிற போர்வையிலே.....அழகான தோரணம் என்கிற தோரணையிலே.... ஜீவா.... பின்னந்தலையில். தொங்கவிட்டிருந்தாரே அந்த ரெட்டை ஜடை...... அந்த ரெட்டை ஜடையை மட்டும் என்னால்..... பொறுத்துக் கொள்ள முடியவில்லை...... பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை......
Saturday, June 2, 2012
இசைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
அமிர்தம் அமிர்தம் என்கிறார்கள்
அதை நான் பார்த்ததில்லை
தொட்டதில்லை
சுவைத்ததும் இல்லை
ஆனால் கேட்டிருக்கிறேன்.....
இசைஞானியே....
உன் இசையில்.....
(சனிப் ப்ரதோஷத்தை முன்னிட்டு சிவனாரைப் பார்த்தபடி இசைஞானியின் திருவாசகத்தை கேட்டுக் கொண்டிருந்த பொழுது தோன்றியது.)
Sunday, April 1, 2012
விரதம் பற்றி நகைச்சுவை

நண்பர் 1: ணா... எனக்கும் விரதமெல்லாம் இருக்கணும்னு ஆசை தான். சாப்பிடுகிட்டே இருக்க விரதம் ஏதாவது இருக்கா?
நண்பர் 2: இருக்கே.... மௌனவிரதம்!
நண்பர் 1: எது... இந்த பேசாம இருக்கணுமே அதுவா? அதுக்கு நான் சாப்புடாமலே இருந்துருவேனே...
நண்பர் 2. அப்ப பேசிகிட்டே இருக்க விரதம் ஒண்ணு இருக்கு ட்ரை பண்றீங்களா....
நண்பர் 1: என்னது ணா...
நண்பர் 2: சத்திய விரதம்...
நண்பர் 1: பொய் சொல்லாம இருக்கணுமா??? ணா... நான் நல்லவன் தான் ணா.. ஆனா உலகம் கெட்டு போய் கெடக்கே... இவிங்க கிட்ட பொய் சொல்லலனா வேல நடக்காதே...
நண்பர் 2: சரி... அப்ப ஏகபத்தினி விரதம் ட்ரை பண்றீங்களா...?
நண்பர் 1: ணா... ஹி ஹி ஹி... ஆனாலும் உங்களுக்கு ரொம்ப குசும்புங்ணா....
நண்பர் 2: ஹ்ம்ம்ம்.... உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு :)
Wednesday, January 4, 2012
Tuesday, October 27, 2009
குளிரவைத்த ஈரம்
ஷங்கர் தயாரிப்பில் வெளியாகி வெற்றி நடைப் போட்டுக்கொண்டிருக்கும் ஈரம் உலகத் தரமானது. புது முக இயக்குநர் அறிவழகன் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி ரசிகர்களை அசத்தியிருக்கிறார்.
அன்றாடம் பயன்படுத்தும் நீரை இவ்வளவு அழகாகவும் பிரமாண்டமாகவும் காட்ட முடியுமா என்ற வியப்பு எனக்குல் எழுந்தது. எத்தனையோ புகைப் படங்களிலும் திரைப்படங்களிலும் பாடல் காட்சிகளிலும் தண்ணீரின் அழகை பதிவு செய்திருந்தாலும் அதன் அழகையும் வசீகரத்தையும் இந்த அளவுக்கு யாரும் பயன்படுத்தவில்லை என்று எனக்கு தோன்றுகிறது.
நீர் தான் படத்தின் மைய கதாபாத்திரம் என்று ஆன பிறகு அதை எத்தனை விதங்களில் கதைக்குள் கொண்டு வர முடியுமோ அத்தனை விதங்களிலுமே கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார் மிக அழகாக. உதாரணம் கார் கண்ணாடியின் மீது தண்ணீர் படிந்து பாதை தெரியாதபடி மறைக்கும் காட்சி. அதே சமயம் எந்த ஒரு இடத்திலும் நீரின் பங்கு திணிக்கப் பட்டதாக தெரியக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்திருக்கிறார்.
இத்திரைப்படம் தமிழ் சினிமாவின் தொழில் நுட்ப பயன்பாட்டிற்கு ஒரு மைல் கல். காமிரா வைக்கப்படிருக்கும் ஒவ்வொரு கோணத்திலும் இயக்குநரின் தன்னம்பிக்கை கலந்த நிதானமும், ஒளிப்பதிவாளரின் உழைப்பும் பளிச்சிடுகின்றன. ஒளிப்பதிவாளரும் சரி, படத்தொகுப்பாளரும் சரி ஒருவருக்கொருவர் சளைக்காமல் தத்தம் முத்திரையை பதித்திருக்கிறார்கள். கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை உறுத்தாத வண்ணம் மிக அழகாக இருக்கின்றன.
உதாரணம் கண்ணாடியில் நாயகியின் முகம் தோன்றி கண்ணீர் சிந்தும் காட்சி.
தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாது தார்மீக ரீதியாகவும் நல்லதொரு பாடமாக இப்படம் அமைந்திருப்பதற்காக இயக்குநருக்கு சிறப்பு பூங்கொத்து கொடுக்கலாம். கசப்பான ஒரு கதை தான் என்றாலும் அதை மனதுக்கு இதமாக பறிமாறியிருக்கிறார்.
பல இடங்களில் வசனங்களில் விளக்க முயற்சிக்காமல் காட்சிகளாகவே பல விஷயங்களை சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. உதாரணம் கடைசியில் நாயகி குழந்தையாக வந்து நாயகனுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு செல்லும் காட்சி. அவர்கள் உறவில் கள்ளங்கபடு இலை என்பதை எவ்வளவு அழகாக உணர்த்திவிட்டார். அதன் பிறகு நந்தா கதாபாத்திரம் கொலை செய்யப்பட போகிறது என்று நமக்கு உணர்த்தி படத்தை முடித்திருப்பது அசத்தலான புதுமை.
நாயகன் ஆதி கிடைத்த வாய்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். நாயகி, நாயகியின் தங்கையாக நடித்தவர், நந்தா, நாயகியின் தந்தை அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். நாயகியை விட நாயகியின் தங்கையாக நடித்திருப்பவருக்கு நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் முக்கிய காட்சிகள் கிடைத்திருக்கின்றன. சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
பொதுவாக மர்ம திரைப்படங்களில் ரசிகர்களை குழப்புவதற்காக சில காட்சிகளை தேவையில்லாமல் வைத்து பின் எந்த விளக்கமும் தராமல் விட்டுவிடுவார்கள். இதில் அப்படிப்பட்ட குறைகள் எதுவும் கிடையாது.
குறைகளே கிடையாதா?
என் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை. இவ்வளவு நேர்மையான ஒரு முயற்சியில் சிறு குறைகள் எங்கேனும் இருந்தாலும் அவற்றை புறந்தள்ளி பாராட்டுவதே நியாயமானதாக இருக்கும் என கருதுகிறேன்.
நல்லதொரு திரைப்படத்தை தந்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த இத்திரைப்பட குழுவினருக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.
Subscribe to:
Posts (Atom)

