Friday, August 22, 2008

கிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துக்கள்


கிருஷ்ண ஜெயந்தி சிறப்புக் கவிதையை படிக்க இங்கே சொடுக்கவும்.

Tuesday, August 19, 2008

ஒரு ஜீவனுக்கு மற்றோரு ஜீவன் தான் ஆகாரம்.


ஸ்ரீ ஸ்ரீ விட்டல்தாஸ் ஸ்வாமிஜியின் உரையிலிருந்து.

"நீ ஒரு வாழைப்பழம் சாப்பிடும் பொழுது எத்தனை விதைகளை சாப்பிடுகிறாயோ அத்தனை உயிர்களை கொன்ற பாவம் உன்னை சேர்கிறது" என்றார் ஸ்வாமிஜி.

ஒரு வேளை விதைகளை நீக்க கூடிய பழங்களை மட்டும் தான் சாப்பிட வேண்டும் என சொல்வார் என நினைத்தேன்.

அடுத்து "சோறு சாப்பிடும் பொழுது எத்தனை பருக்கைகளை சாப்பிடுகிறாயோ அத்தனை உயிர்களை கொன்ற பாவம் உன்னை சேரும் என்றார்."

'சரியாப் போச்சு இது வேலைக்கு ஆகாது' என்கிற நிலைக்கு நான் வந்து விட்டேன்.

"அதற்காக உணவருந்தாமல் இருக்க முடியுமா? உணவருந்தித்தான் ஆக வேண்டும். ஆகாரம் இல்லாமல் யாராலும் ஜீவிக்க இயலாது."

சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று சொன்னார். நினைவில்லை. அதன் அர்த்தம்...

"ஒரு ஜீவனுக்கு மற்றொரு உயிர் தான் ஆகாரம். அதனால் நாம் ஒவ்வொரு முறை உண்ணும் பொழுதும் ஒரு ஜீவனை உண்கிறோம் என்கிற நன்றி உணர்வோடு உண்ண வேண்டும். அதை இறைவனை அர்ப்பணம் செய்துவிட்டு உண்ண வேண்டும். அப்பொழுது அந்த பாவம் நம்மை சேராது" என்றார்.

இறைவனுக்கு அர்ப்பணம் செய்வது ஒன்றும் கடினமான காரியமில்லை. இறைவனை ஒரு முறை நினைத்து விட்டு உணவை உண்ண ஆரம்பித்தாலே போதும்.

இது அசைவ உணவை ஆதரிக்கும் கருத்தல்ல.

நான் அசைவ உணவை கைவிட்டு ஆறு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.

அசைவ உணவு எடுத்துக் கொள்ளும் பொழுதும் தியானம் செய்திருக்கிறேன். என் அனுபவத்தில் அசைவ உணவு தியானம் கைகூடுவதை சிரமமாக்குகிறது.சைவ உணவுக்கு மாறிய பிறகு என் புத்திக் கூர்மை அதிகரித்திருப்பதை உணர்கிறேன். உடல் வலிமையில் எந்த குறையும் இல்லை. மாறாக உடல் லேசாகவும் மனம் எளிதில் சோர்விலிருந்து விடுபடுவதாகவும் இருக்கிறது.

பொருளாதார ரீதியாகவும் சைவ உணவு எடுத்துக் கொள்வது உலக உணவு பற்றாக்குறையை போக்க உதவும் என்கிறது ஓர் ஆய்வு.

சைவ உணவுக்கு நான் மாறிய கதை ஆங்கிலத்தில்.


சைவ உணவுக்கு ஆதரவான விவாதங்கள்.

மேலும்.

Friday, August 8, 2008

ராமாயணத்தில் கேயோஸ் தியரி




கேயோஸ் சித்தாந்தத்தின் படி ஒரு பட்டாம் பூச்சியின் படபடப்பு கூட ஒரு புயலுக்கு காரணமாக இருக்க முடியும் அல்லது வந்திருக்க வேண்டிய புயலை வரவிடாமல் தடுத்திருக்க முடியும் என விளக்குகிறது.

ஸ்ரீ ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் அவர்களின் ராமாயண சொற்பொழிவு காலை ஏழு மணியளவில் சென்னை தி.நகரின், ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ள அலேமலுமங்கா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.

ராமாயணத்தை விளக்கமாகவும் விரிவாகவும் சுவைபட சொல்லி வருகிறார் ஸ்வாமிஜி.

இன்று ராவண சம்ஹாரத்தின் ஆரம்பம் எது என்பதை காண பின் நோக்கி விளக்கி வந்தார்.

ராமர் ராவணனை ஏன் கொன்றார்?

அவன் சீதாதேவியை கவர்ந்து சென்றதால் கொன்றார்.

சீதாதேவியை ராவணன் ஏன் கவர்ந்தான்?

சூர்ப்பணகையின் போதனையால் கவர்ந்தான்.

சூர்ப்பணகை ஏன் அவ்வாறு போதித்தாள்.?

ராமர் அவள் காதலை நிராகரித்ததால்.

ராமரிடம் அவள் எப்படி காதல் கொண்டாள்?

ராமரை வனத்தில் கண்டதால்.

ராமர் வனம் வர காரணம்?

கைகேயியின் வரம்.

கைகேகி ஏன் அந்த வரங்களை கேட்டாள்?

ராமருக்கு பட்டாபிஷேகம் என தசரதர் அறிவித்ததால்.

தசரதர் ஏன் அவ்வாறு அறிவித்தார்?

தன் காதோரம் ஒரு முடி நரைத்திருந்ததை கண்டு தனக்கு வயதாகி விட்டதை உணர்ந்து ராமருக்கு பட்டாபிஷேகம் என தசரதர் அறிவித்தார்.

தசரதரின் காதோரம் முடி நரைப்பதற்கும் ராவண சம்ஹாரத்திற்கும் இருக்கும் இந்த மறை முக தொடர்பு தான் கேயோஸ் சித்தாந்தம்.

இந்த மறைமுக தொடர்பை உணர்ந்ததால் தான் ராமாயணத்தை பாடிய எல்லா பெருங்கவிகளும் தசரதருக்கு முடி நரைக்கும் காட்சியை பாடியிருக்கிறார்கள் என விட்டல்தாஸ் மஹராஜ் அவர்கள் விளக்கினார்கள்.

காளிதாசர் இன்னும் ஒரு படி மேலே சென்று ராவணன் செய்த பாவத்தால் தசரதருக்கு முடி நரைத்தது என பாடினாராம்.

நம் இதிகாசங்களில் பொதிந்துள்ள இது போன்ற அற்புதங்களை உணராதவர்கள் சிலர் மேற்கத்திய விஞ்ஞானம் புரிந்து விட்டதாக சொல்லிக் கொண்டு மேற்கத்திய விஞ்ஞானம் உயர்ந்ததெனவும் இந்திய ஞானம் தாழ்ந்தது எனவும் கூறி அந்நியர்களின் துதிபாடிகளாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் என்றும் நகைப்புக்கு உரியவர்களே.

Thursday, July 31, 2008

நாளை நீ இறக்க போகிறாய்...



முன் குறிப்பு: மென்மையான மனம் உடையவர்கள் இந்தக் கவிதையை படிக்க வேண்டாம். சிலர் பயமாக இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.

வாசகனே ...
என் பிரிய வாசகனே...

நீ தான்
நீயே தான்

இந்தக் கவிதையை படித்த பாவத்திற்காகவோ
வேறென்ன காரணத்திற்காகவோ

நாளை நீ இறக்க போகிறாய்

விபத்தாலோ...
கொலையாலோ...
நோயாலோ...
அல்லது இயற்கையாகவோ

அது நிகழப் போவது
வெகு நிச்சயம்...

மின்சாரமோ...
நெருப்போ...
மண்ணோ...

உன் உடலை
அணு அணுவாய்
அணுவாக்கி
அணுவற்றதாய்
ஆக்கும்...

அதுவரை
என்ன செய்வதாய்
உத்தேசம்?

உன்னை நம்பினோரை
இறைவனிடம்
ஒப்படை...

தந்தையிடம் போ
உயிர் கொடுத்த நெஞ்சத்தை
மனதார தழுவு
மகிழட்டும்...

தாயிடம் போ
உடல் சுமந்த வயிற்றை
உளமார தொடு
குளிரட்டும்...

பகைமை மறந்து
மனிதர்களை தழுவு
யாவரும் உனக்காக
கண்ணீர் சிந்தட்டும்...

மாங்கன்றோ
இளங்கன்றோ
நட்டு வை
உன் பேர் சொல்லட்டும்...

கடமையை செய்கையில்
உயிர் துறப்பதே உத்தமம்

தொழிலிடம் செல்...

பயன்விடுத்து
தொழில் நடத்து...

அந்த நாளை
நாளையோ
வருடங்கள் கழிந்தோ
வரலாம்....

அதனாலென்ன...?

அப்படியே
வாழ்...!

Sunday, July 27, 2008

உன்னை நான் எரிக்கப் போகிறேன்.


இனிய சிநேகிதனே

இன்னொரு தோலாக
என்னோடு
ஒட்டிக் கிடந்தவனே

உன்னை நான் எரிக்கப் போகிறேன்

எரிக்கும் முன்
இந்தக் கரங்கள்
உன்னை அணைத்துக் கொள்ளாது

இந்த இதழ்கள்
உன்னை முத்தமிடாது
இந்தக் கண்கள்
துளி கண்ணீர் சிந்தாது
கண்ணீரற்ற கண்களோடு
உன்னை நான் எரிக்கப் போகிறேன்

நீ பயனற்றவன்
என்றறிவித்த என் புத்தி
உன்னை பார்த்து
முகம் சுளிக்கிறது

என் இதயம் மட்டும்
உனக்காக
கறுப்புக் கொடி காட்டுகிறது

கனத்த இதயத்தோடு
உன்னை நான் எரிக்கப் போகிறேன்

நீ
எனக்காக உழைத்தவன்
காலணி போல
கணக்கற்று தேய்ந்தவன்

உன் உடலின்
ஒவ்வொரு நாரும்
எனக்காக மெலிந்ததை
நான் அறிவேன்
அறிந்தும்
அறிவின் துணை கொண்டு
உன்னை நான் எரிக்கப் போகிறேன்

என்னோடு
ஒட்டியிருந்த காலங்களில்
என் வியர்வையை
உறிஞ்சியதற்காக அல்ல

உன்னை
ஒரு நாள் மறந்தாலும்
என் மானத்தின் மீது
நாற்றமடித்ததற்காக அல்ல
நம் சிநேகம் தொடங்கிய
தினங்களில் என்னை
இறுக்கப் பிடித்து
திணறடித்ததற்காக அல்ல
அவற்றை நான் மன்னித்து விட்டேன்

நானும் குற்றமற்றவன் அல்ல

என் அவசரத்திற்காக
உன் குளியலை கூட மறுத்து
உன் மீது வாசனை திரவியம் தெளித்து
உன்னை வேலை செய்ய வைத்ததுண்டு

என் காலணியை துடைக்க கூட
உன்னை பயன் படுத்தியதுண்டு

அனைத்தையும்
மௌனமாக ஏற்றுக் கொண்ட
உன்னை
கட்டாயம் எரிக்கப் போகிறேன்

எனக்கு எவ்விதத்திலும்
பயனற்ற உன்னை
என்னால் சகித்து கொள்ள முடியாது

நீ உழைப்பாளி
உன் தன்மானம்
நானறிவேன்

அதைத்தான் நீயும் விரும்புவாய்
அதனால்
உன்னை நான் எரிக்கப் போகிறேன்

எங்கோ உருவெடுத்து
என்னிடம் வந்தவனே
"உனக்காக உழைத்து
உனக்காக அழிவேன்"
என ஒரு வார்த்தை சொல்லாமல்
எனக்காக உழைத்து
கந்தலாய் ஆனவனே
உன்னை நான் எரிக்கப் போகிறேன்

உன் கந்தல் உடல்
கரியாகி காற்றில்
கரையும் வரை
உன்னை எரிக்கப் போகிறேன்

அதற்கு முன்
காலுறை தானே
என்று உன்னை எவரும் இகழாதிருக்க
உனக்காக ஒரு கவிதை படைக்கப் போகிறேன்.

Wednesday, July 23, 2008

முட்டாள் விஞ்ஞானி கோவிந்த்


தசாவதாரம் திரைக் காவியத்தை பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் எனக்கு கிட்டியது. அத்திரைக்காவியத்தை காணும் பொழுது என் மனதில் தோன்றிய எண்ணங்கள் இதோ.

அமெரிக்க ஜனாதிபதி, இந்திய பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோர் வீற்றிருக்கும் மேடையில் கோவிந்த ராமசாமி எனும் விஞ்ஞானி தன் கதையை சொல்வதாக விரிகிறது திரைக்கதை. எடுத்தவுடன் தன் கதையை கேட்பதாக இருந்தால் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ரங்கராஜன் நம்பி எனும் கோவில் குருக்களின் கதையும் கேட்டால் தான் ஆச்சு என நிபந்தனை விதிக்கிறார். ரங்க ராஜன் நம்பிக்கும் கோவிந்த ராமசாமிக்கும் என்னடா சம்மதம் என்று பார்த்தால், அட ரெண்டுமே நம்ம உலகநாயகன் பத்மஸ்ரீ டாக்டர் கமலஹாசன் தான். இவ்விரு கதாபாத்திரங்களுக்கும் வேறு ஏதாவது சம்மதம் இருக்கிறதா என்று பார்த்தால் ஒன்றுக் கூட கிடையாது. சரி ரங்கராஜன் நம்பியின் கதை கோவிந்த ராமசாமிக்கு எப்படி தெரிந்தது என்று பார்த்தால் அதற்கும் திரைக்கதையில் எங்குமே பதில் கிடையாது. கடைசியில் கரையொதுங்கும் பெருமாள் சிலையைக் கூட பார்க்காமல் போய் விடுகிறார் கோவிந்த ராமசாமி. ஆனால் மேடை ஏறியவுடன் கண்ணால் கண்டது போல ரங்கராஜன் நம்பியின் கதையை விவரிக்கிறார். பெரும்பான்மைக்கு பகுத்தறிவு வரும் பொழுது இப்படிப்பட்ட ஓட்டைகள் இல்லாமல் திரைக்கதை அமைக்கலாம் என்று முடிவு செய்து விட்டார் போல இருக்கிறது திரைக்கதாசிரியர். அதுவும் நம் சகலகலா வல்லவன் தான்.

நல்ல ரௌடி (நாயகன்), சாமர்த்தியமான பைத்தியம் (குணா), இள கிழவன் (இந்தியன்) ஆண்பிள்ளை கிழவி (அவ்வை சண்முகி) என இது வரை கமல் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தையும் விஞ்சி நிற்கிறார் கோவிந்த ராமசாமி. இனிப்பான கசப்பு வெளிச்சமான இருட்டு என்பது போல கோவிந்த ராமசாமி ஒரு முட்டாள் விஞ்ஞானி. என்னடா புது கதை என்று நீங்கள் நினைக்கலாம். எனக்கே இந்த கதாபாத்திரக் கலவை கொஞ்சம் விசித்திரமாகத் தான் இருக்கிறது. இருந்தாலும் என்ன செய்வது இந்த முறை நம்மை மகிழ்விக்க கலைஞானி தேர்ந்தெடுத்த பாத்திரம் ஒரு முட்டாள் விஞ்ஞானி பாத்திரம். இதை நான் சொல்லவில்லை நண்பர்களே சாக்ஷாத் கோவிந்த ராமசாமியே சொல்கிறார். ஆராய்ச்சிக்காக வைக்கப் பட்ட குரங்கு இறந்த பிறகு தான் அந்த ஆராய்ச்சியின் ஆபத்தை உணர்ந்து அது வேண்டாமென்று வாதம் செய்கிறார். ஏன் இது அவருக்கு முன்பே தெரியாதா என்று நீங்கள் கேட்கலாம். அதே கேள்வியை தான் அவருடைய சக விஞ்ஞானிகளும் கேட்கிறார்கள். ஆனால் அவர் தான் முட்டாள் விஞ்ஞானி ஆயிற்றே. அவரிடம் போய் இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கலாமா?

"என்னை போல ஒரு முட்டாள் விஞ்ஞானியும் அனு மாதிரி ஒரு புத்திசாலி குரங்கும் தான் இன்று உலகையே ஆட்டிப் படைக்கும் எயிட்ஸ் நோய் பரவ காரணம். இல்லை என்று சொல்ல உன்னால் முடியுமா?" என்று தன் சக விஞ்ஞானியை பார்த்து கேட்கிறார். அவர் நீயே ஒரு முட்டாள் விஞ்ஞானி உன்னிடம் அதையெல்லாம் விளக்க முடியுமா என்பது போல தலையிலடித்துக் கொள்கிறார். எய்ட்ஸ் கிருமியின் மூலம் எதுவாகவும் இருக்கலாம் ஆனால் அது பரவ முக்கியமான காரணம் திருமணம் வரை காத்திருக்க பொறுமை இல்லாதவர்களும், திருமண பந்தத்தை மதிக்காமல் பாலியல் துணைவர்களை தன் இஷ்டம் போல மாற்றிக் கொண்டும் சேர்த்துக் கொண்டும், வாழும் புலனடக்கம் அற்றவர்கள் தான். அப்படி பட்டவர்கள் தமிழகத்திலும் ஏன் சென்னையிலும் கூட நிறைய பேர் இருக்கிறார்கள். உலகும் முழுதும் தன் கண்களுக்குள் கொண்டு வந்து நம்மை பார்த்து கண்ணடிக்கும் கலைஞானிக்கு இதெல்லாம் தெரியுமோ தெரியாதோ? எனினும் கோவிந்த ராமசாமி கதாபாத்திரம் அந்த கேள்வியை கேட்டதில் குற்றம் ஓன்றும் இல்லை. அது தான் முட்டாள் விஞ்ஞானி பாத்திரமாயிற்றே. அது அப்படித் தான் கேட்கும்.

இதில் கௌரவ வேடம் ஏற்று நடித்திருக்கும் குரங்கின் நடிப்பை பற்றியும் அதன் கதாபாத்திரத்தை பற்றியும் கொஞ்சமாவது எழுதியே ஆகவேண்டும். இது கலைஞானியின் கற்பனையில் உதித்த இன்னொரு வித்தியாசமான பாத்திரம். புத்திசாலி குரங்கு. சாக்லெட் கேட்கும் புத்திசாலி குரங்கு. சாக்லெட் கிடையாது என்று கோவிந்த் சொல்வதை புரிந்து கொண்டு எனக்கில்லை என் பாப்பாவுக்கு என்று சைகை செய்கிறது. கோவிந்த் ஒரு முட்டாள் விஞ்ஞானி என்பது அந்த குரங்குக்கும் தெரிந்திருக்கும் போலிருக்கிறது. இது மட்டுமல்லாது விஞ்ஞானிகள் தொலைக்காட்சியில் ஜனாதிபதி புஷ்ஷின் உரையை கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது தன் கூண்டை விட்டு வெளியேறி மின் கதவின் ரகசியக் குறியை சரியாக அழுத்தி வெளியேறிவிடுகிறது. வெளியேறியது மட்டுமல்லாமல் கிருமி குப்பியை எடுத்து சாக்லெட் என்று நினைத்து உண்டுவிடுகிறது. ஆராய்ச்சிக்காக கொண்டுவரப் பட்ட குரங்கை அவ்வளவு அஜாக்கிரதையாக விட்டு விட்டு எல்லா விஞ்ஞானிகளும் தொலைக் காட்சிப் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தால் கோவிந்த் மட்டும்தான் முட்டாள் விஞ்ஞானியா அல்லது அந்த ஆராய்ச்சிக் கூடத்தில் உள்ள எல்லாருமே முட்டாள் விஞ்ஞானிகள் தானா? என்ற கேள்வி எழுகிறது. கதையின் நாயகன் கோவிந்த் தானே அதனால் அவருடைய கதாபாத்திரத்தை மட்டும் விளக்கினால் போதும் என நிரந்தர இளைஞன் நினைத்து விட்டார். சாகும் போது சும்மா சொல்லக் கூடாது அந்த குரங்கு பிரம்மாதமாக நடித்திருந்தது. நான் கூட கமல்ஹாசன் ஏற்ற வேடங்களில் அதுவும் ஒன்றோ என நினைத்துவிட்டேன்.


எனினும் கோவிந்த் ஒரு முட்டாள் விஞ்ஞானி என்பதை பெரும் கலைஞரான கமல்ஹாசன் திரைக்கதை நெடுகிலும் ஸ்தாபிக்க தவறவில்லை. உ-ம். கையில் செல்ஃபோனை வைத்துக் கொண்டே ஃப்.பி.ஐ க்கு போன் போட சொல்லி யாரையாவது கெஞ்சியபடி அமெரிக்காவையே வலம் வருகிறார். முதலில் அவருடைய நண்ப துரோகியை கெஞ்சுகிறார். (இதுவும் முட்டாள் விஞ்ஞானி புத்திசாலி குரங்கு என்பது போல ஒரு வி
த்தியாசமான் பாத்திரம். எனினும் தமிழ் சினிமாவில் இது போல் ஏற்கனவே பல பாத்திரங்கள் வந்திருப்பதால் இதை பற்றி விரிவாக சொல்ல எதுவும் இல்லை.) ஆனால் கோவிந்த் ஒரு முட்டாள் விஞ்ஞானி என்பதை வாயார சொல்லும் இன்னொரு கதாபாத்திரம் இவரே. அதன் பிறகு கையில் செல்ஃபோனோடு சாய்ராமின் காரில் உட்கார்ந்து கொண்டு ஃப்.பி.ஐக்கு வண்டியை செலுத்தும் படி கெஞ்சுகிறார். செல்ஃபோன் வேகமா கார் வேகமா என்றெல்லாம் நாம் அவரை கேட்க கூடாது. ஏனென்றால் அவர் தான் முட்டாள் விஞ்ஞானியாயிற்றே. ஃப்லெட்ஜர் எப்படி எங்கு சென்றாலும் தன் பின்னாலயே வருகிறான் என்று சிந்திக்கும் போது தான் அவருக்கு கையில் உள்ள செல்ஃபோனே ஞாபகம் வருகிறது. அப்போதாவது அதை வைத்து ஃப்.பி.ஐக்கு தகவல் சொல்வாரா என்று பார்த்தால் அதை தூக்கி வேறு காரில் போட்டுவிடுகிறார். சனியன் அந்த காரோடு போகட்டும் என்று வேறு விளக்கம் சொல்கிறார். ஆக இவர் சனி பிடிப்பதில் நம்பிகையும் பகுத்தறிவும் உள்ள ஒரு முட்டாள் விஞ்ஞானி. என்ன ஓரு வித்தியாசமான கலவை பார்த்தீர்களா?

பல்ராம் நாயுடு கோவிந்தை விசாரிக்கிறார். காற்றில் வேகமாக பரவி பல உயிர்களை கொல்ல கூடிய கிருமி குப்பி என்றால் அம்மா இடுப்பில் உட்கார்ந்து விரல் சூப்பும் குழந்தைக்கு கூட புரியும். இதைச் சொல்ல தமிழார்வமும் விஞ்ஞானமும் தெரிந்த காவல் மேலதிகாரி வந்தால் தான் ஆச்சு என அடம்பிடிக்கிறார் முட்டாள் விஞ்ஞானி கோவிந்த். இதற்கு அப்துல் கலாமை அழைக்கலாமா என்று பல்ராம் நாயுடு கேட்கும் போது அழைத்தால் நல்லது என்று தலையை வேறு ஆட்டுகிறார். பல்ராம் நாயுடு எஃப்.பி.ஐ அதிகாரிகளை வரவேற்க செல்லும் வேளையில் ஃப்லெட்ஜர் உள்ளே வருகிறான். குப்பியை எடுத்துக் கொண்டு சீக்கிரம் கிளம்பலாம் என்று அவசரப்படுகிறான். அவன் தேடி அதை கண்டுபிடிக்க முடியாமல் போன பிறகு நம்ம கோவிந்த் வாயை திறந்திருந்தால் பரவாயில்லை. எங்கப்பன் குதருக்குள் இல்லை என்பது போல, " ஃப்லெட்ஜர் அது அவ்வளவு சுலபமில்லை அந்த வயல் அங்கே இல்லை நான் அதை வேறு ஊருக்கு அனுப்பிவிட்டேன் என்கிறார்." கலைஞானி இப்படி ஒரு முட்டாள் விஞ்ஞானி கதாபாத்திரத்தை உருவாக்கி அதனோடு பின்னி பிணைந்திருக்கிறார் என்பதை நினைக்கும் போது புல்லரிக்கிறது.

அடுத்து ஃப்லெட்ஜர் பாத்திரத்தை கவனிப்போம். முட்டாள் விஞ்ஞானியை போலவே இதுவும் ஒரு வித்தியாசமான பாத்திரம். கெட்ட போலீஸ். முன்னால் சி.ஐ.ஏ அதிகாரி கொஞ்சம் பணம் பார்க்கலாம் என முடிவெடுத்து கையில் சிக்கும் உயிர்களை எல்லாம் பதம் பார்க்கிறார். இவருக்கு ஒரு ஜோடி. மல்லிகா ஷெராவத். இந்தியாவிற்கு வர சுற்றுலா அனுமதி பெற மல்லிகா ஷெராவத்தை கைப்பிடிக்கிறார். பொதுவாக தமிழ் சினிமாவின் தரத்தை உலக தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்கிற ஒரே உயரிய நோக்கத்தை மனதில் கொண்டு தன்னுடைய கதாநாயககிகளின் இதழ்களில் இதழ் பதிப்பது இந்த நிரந்தர இளைஞனின் பாணிகளுள் ஒன்று. முதன் முதலில் மல்லிகா ஷெராவத்தை பார்க்கும் போதே முத்தம் நிகழ்ந்திருக்க வேண்டும். நிகழவில்லை. பிறகு திருமணம் முடிந்த பிறகு முத்தம் நிகழ்ந்திருக்க வேண்டும். அப்போதும் நிகழவில்லை. இது ஹாலிவுட்டிற்கு இணையான படம் ஆயிற்றே. முத்தம் இல்லாமல் எப்படி என்பதற்கு படம் முடிந்த பிறகு விளக்கம் அளிக்கிறார் இயக்குநர். முகத்தில் ப்ளாஸ்டிக்கை போட்டு ஒட்டி அதன் மேல் வெள்ளை பெயின்ட்டை அடித்து விட்டால் சாப்பாடே ஸ்ட்ரா போட்டுத் தான் குடிக்க வேண்டும். அப்படி ஆன பிறகு அவர் கதா நாயகியின் இதழில் இதழ் பதித்து தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்துவது கொஞ்சம் சிரமம் தானே. நாம் அதை தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது.

பத்து கமலஹாசன் என்று சொன்னார்கள். எண்ணி பார்த்தபோது முட்டாள் விஞ்ஞானி கோவிந்த், பல்ராம் நாயுடு, ரங்கராஜன் நம்பி, அவ்தார் சிங் இந்த நான்கு கதாபாத்திரங்களை தவிர
கமலஹாசனை எங்கும் காண முடியாமல் வெளியே சொன்னால் பகுத்தறிவில்லாத கூட்டம் என நினைத்து விடுவார்களோ என பயந்து மிகுந்த குழப்பத்தில் இருந்தேன். அப்போது அண்ணாச்சி வின்சென்ட் பூவராகன் கண்களை உருட்டி ஆமாடா நான் உலக நாயகந்தான் என்றார். ஆஹா அது கமலா? இதுக்கு உண்மையாகவே ஒரு அண்ணாச்சியை கூட்டி வந்து நடிக்க வைத்திருக்கலாமே. அப்படி செய்திருந்தால் தயாரிப்பில் எவ்வளவோ நேரமும் பணமும் மிச்சமாகியிருக்குமே? சரி அவரையும் சேர்த்துக்கொண்டாலும் ஐந்து தானே என்று பார்த்தால் படம் முடிந்த பிறகு கமல் அரிதாரம் போட்டுக்கொள்ளும் போது தான் தெரிகிறது அமெரிக்க ஜனாதிபதி, ஜப்பானின் கராத்தே பயிற்சியாளர், கைஃபுல்லா கான், கிருஷ்ணா பாட்டி இவர்கள் கூட கமல் தான் என்று. ஹி ஹி சும்மா சொல்லக் கூடாது ரொம்ப கடினமான வேலை தான். இவ்வளவு சிரமப்பட்ட கமல்ஜி முட்டாள் விஞ்ஞானி கோவிந்த் பாத்திரத்தை புத்திசாலி விஞ்ஞானியென்று மாற்றியிருந்தால் கதை எவ்வளவோ சுவாரஸ்யமாகியிருக்கும். என்ன செய்வது பெரும்பான்மைக்கு பகுத்தறிவு இன்னும் வரவில்லையே?

ஒரு கமலாக வந்து நம்மை குதூகலப்படுத்தினால் போதாதென்று எப்படி பத்து கமல் வருகிறாரோ. அதே போல ஒரு முட்டாள் விஞ்ஞானி போதாதென்று ஆங்காங்கே சில முட்டாள் விஞ்ஞானி முந்திரிகளை தெளித்திருக்கிறார் திரைக்கதாசிரியர் கமலஹாசன். உ-ம் என்.ஏ.சி.எல் என்றால் என்ன என்று பல்ராம் நயுடுவிடம் விளக்கும் விஞ்ஞானி. எனக்கு தெரிந்த தமிழில் என்.ஏ.சி.எல்-ஐ என்.ஏ.சி.எல் என்று தான் சொல்ல முடியும் என்கிறார். என்.ஏ.சி.எல் என்றால் உப்பு என்று பத்தாம் வகுப்பு மாணவன் கூட தப்பில்லாமல் சொல்வான். என்ன செய்வது பகுத்தறிவு இல்லாத பெரும்பான்மை கூட்டத்துக்கு படம் எடுக்கும் போது திரைக்கதையில் உப்பு சப்பு சேர்க்க வேண்டும் என்றால் இப்படி ஏதாவது தப்பு பண்ணினால் தான் ஆகும் போல இருக்கிறது.

கமல்ஜியை மட்டுமே பாராட்டிக் கொண்டிருந்தால் எப்படி? மற்ற தொழில் நுட்ப கலைஞர் பற்றியும் ஓரிரு வார்த்தையாவது சொல்ல வேண்டாமா? இயக்கம் கே.எஸ்.ரவிக்குமாராம். முத்து படையப்பா நாட்டாமை போன்ற திரைப்படங்களை இயக்கிய கே.எஸ் ரவிக்குமாரா என்று நமக்கு சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக படம் முடிந்தவுடன் உலக நாயகனை துதிபாடி செம்ம ஆட்டம் போடுகிறார்.

மைக்கேல் வெஸ்ட்மோர் படத்தின் ஒப்பனையை செய்திருக்கிறார். சும்மா சொல்லக் கூடாது எந்த எந்த நாட்டு மனிதர்கள் என்ன வண்ணம் இருப்பார்கள் என்பதை ஆராய்ந்து அந்த அந்த வண்ணங்களை அழகாக அள்ளி அப்பியிருக்கிறார்.

உடையலங்காரம் கௌதமியாம். இவருடைய முந்தைய படங்களில் சரிகா என்று யாரோ உடையலங்காரம் செய்தததாக ஞாபகம். சும்மா சொல்லக் கூடாது சரிகாவிற்கு இணையாகவே செயல்பட்டிருக்கிறார். அப்படி செயல் படாவிட்டால் கமலோடு இணைய முடியுமா?

கமலோடு இணைய முடியுமா என்று நான் கேட்பதை அவர்களுடைய தனிப் பட்ட வாழ்க்கையை பற்றி பேசுவதாக நினைக்கக் கூடாது. அதைப் பற்றி நான் பேசினால் ஐம்பது வயதுக்கு மேல் காதலால் இணைந்து வாழும் இரு உள்ளங்களை புண்படுத்தும் பண்பாடற்றவனாக ஆகிவிடுவேன் அல்லவா? ஆனால் கமல் கோடிக்கணக்கானவர்களின் உணர்வுகளை துச்சமென கருதி அவர்கள் வணங்கும் தெய்வத்தின் உருவச் சிலையை சௌஜாலயத்தில் வைக்க முயற்சிப்பார், மணலில் புதைப்பார், கழுத்தில் சுறுக்குப் போட்டு தோளில் மாட்டிக் கொள்வார், இங்கும் அங்கும் தூக்கி எறிந்து பந்தாடுவார். ஏனென்றால் அவர் பகுத்தறிவாளி. இந்தியர்களின் கடவுள் நம்பிக்கையும் திருமண அமைப்புகளும் அவர் பகுத்தறிவிற்கு ஒவ்வாதது. அதனால் அவர் கௌதமியோடு சேர்ந்து வாழலாம். ஏனென்றால் விஞ்ஞானம் அதை தடுக்காது. ஒரு அப்பன் மகளோடு உடலுறவு கொள்வதை கூடத்தான் விஞ்ஞானம் தடுக்காது. இதை பற்றி கமல் என்ன நினைக்கிறார் என்பது கமலுக்கே வெளிச்சம். கடவுள் தான் கிடையாதே? அதனால் தான் கமலுக்கே வெளிச்சம் என்றேன்.

கேயோஸ் தியரி என்று ஏதோ ஜல்லி அடிக்கிறார். பெரும்பான்மையானவர்களுக்கு பகுத்தறிவு இல்லாத நிலையில் அதைப் பற்றியெல்லாம் பேசலாமா? இல்லை பெரும்பான்மையானவர்களுக்கு தான் பகுத்தறிவும் கிடையாது விஞ்ஞானமும் தெரியாது நாம் என்ன சொன்னாலும் நம்பி விடுவார்கள் என நினைத்துவிட்டாரா? கேயோஸ் தியரிக்கும் இந்த படத்துக்கும் ஒரு சம்மந்தமும் கிடையாது. நமக்கு மேல் இருக்கும் சக்தி செயற்கை கோள் தானாம். செயற்கை கோள் செய்வதற்கான ஆதார கணிதம் இயற்கை கோள்களை அடிப்படையாக கொண்டதுதான். மனித கண்டுபிடிப்புகள் எல்லாமே இயற்கையின் புத்திசாலித்தின் பிரதிபலிப்புகள் தான். இயற்கையின் கருணையில் தான் மனித வாழ்க்கையே நகர்கிறது. ஒரு நாள் சூரியன் உதிக்கவில்லை என்றால் மனித வாழ்க்கையே ஸ்தம்பிக்கும். நம் கட்டுப்பாடில் இல்லாத எத்தனையோ விஷயங்கள் ஒழுங்காக நடக்கும் வரை இப்படித் தான் ஆணவமாக ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். ஏதாவது தவறாகி விட்டால் அது கடவுள் குற்றம் எல்லாம் ஒழுங்காக நடக்கும் வரை அது மனிதனின் சாமர்த்தியம். கேட்டால் நான் அப்படி சொல்லவில்லை முட்டாள் விஞ்ஞானி கதாப்பாத்திரம் தான் அப்படி சொன்னது என்பார் கலைஞானி.

படத்தின் முடிவில் கமல் சொல்கிறார், "நான் எங்கெங்க கடவுள் இல்லன்னு சொன்னேன், கடவுள் இருந்தா நல்லா இருக்கும்னு தான் சொல்றேன்."

நான் கூட தசாவதாரம் கேனத்தனமான படம் என்று சொல்லவில்லை. அப்படியில்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தான் சொல்கிறேன்.

Monday, July 21, 2008

இதயத்தின் அருகில்...

வென்றபின்
கை குலுக்கும்
பல ஐந்து விரல்களின்
ரேகைகளை விட
ஆழமாக பதிகிறது
வெல்லும் முன்
நமக்காக உயர்ந்த
ஒற்றை
கட்டை விரலின் ரேகை...